(Reading time: 15 - 29 minutes)

"நீ மன்னிக்க முடியாதுன்னு சொல்ற ஆள்!இந்த உலகத்துலே இல்லை!"-அவன் திடுக்கிட்டான்.

"அ..அப்படின்னா!"

"மூணு வருஷத்துக்கு முன்னாடி நடந்த விபத்துல கௌரியோட அப்பாம்மா இரண்டு பேரும் தவறிட்டாங்க!"

"எ...என்ன?"

"அவ உன்னோட மாமா பொண்ணுடா!என்னிக்கோ ஒரு நாள் அவ அப்பா தப்பா பேசிட்டான்னு அவளை பாதுகாப்பில்லாம விட முடியாது!அதான்,அவளை இருக்க வைத்தேன்!அவ என்னடா பண்ணுவா பாவம்..!அவளால அவ அப்பாவை மீறி அந்தச் சூழ்நிலையில என்னடா பேசிருக்க முடியும்?"

"பேசி இருக்கணும்பா!அவ என்னை காதலித்திருந்தா,அன்னிக்கு நீ தலை குனிந்து நிற்கும் போது,அட்லீஸ்ட் மன்னிப்பாவது கேட்டு இருக்கணும்!"

"முடிந்துப் போனதை ஆரம்பிக்காதே!இத்தனை வருஷமா அவ உனக்காக தான் காத்திருக்கா!எத்தனையோ வரன் வந்தும்,யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு பிடிவாதமா இருக்கா!"

"அந்த எண்ணம் என்னிக்கும் ஈடேறாது!அவளை இங்கேயே விட்டுட்டு 2 வாரத்துல என் கூட அமெரிக்கா கிளம்புற வழியை பாரு..!அவ என் அம்மாவோட அண்ணன் பொண்ணுங்கிற ஒரே காரணத்துக்காக அவ இங்கே தங்கிக்கட்டும்!"-கோபமாக பேசிவிட்டு சென்றான் அசோக்.

அழுதப்படி ஓடி வந்தவள்,தனது அறையில் தன்னை சிறைப்படுத்திக் கொண்டாள்.

"கதவை திறங்கம்மா!"-வள்ளியின் குரல் கேட்டது.அவள் பதில் பேசவில்லை!!

அசோக்கின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் இதயத்தை கிழித்தன.

அவ்வளவு கேவலமாகிவிட்டேனா!என்று எண்ணி மனம் வருந்தினாள்.

"ஐயா!கௌரிம்மா கதவை திறக்க மாட்றாங்க!"

"பயப்படாதே!சாகலாம் மாட்டா!"-மீண்டும் குத்தலாக அவனது குரல்!!

இதற்கு மேலும் இங்கிருக்க வேண்டுமா?அப்படி ஒன்றும் தாழ்ந்து போகவில்லை நான்..!எனக்கு பாதுகாப்பும் வேண்டாம்!பாசமும் வேண்டாம்!என்று எண்ணியவள்,தனது உடைமைகளை எல்லாம் ஒரு பெட்டியில் அடைக்க ஆரம்பித்தாள்.

சில நொடிகளில் தனது கண்ணீரை துடைத்துக் கொண்டு,கதவை திறந்தாள்.

"கௌரி!எங்கே கிளம்பிட்டீங்க?"

"எதையும் என்கிட்ட கேட்காதே வள்ளி!என் மனசு எரிமலை மாதிரி கொதிச்சிட்டு இருக்கு!நான் யாரையும் பார்க்க விரும்பலை...நான் எனக்கு சொந்தமான இடத்துக்கே போறேன்!"

"என்னம்மா நீங்க?ஐயா தான் தெரியாம பேசிட்டாரு!"

"அவர் சொல்ற மாதிரி நான் அந்த மாதிரி பொண்ணு இல்லை வள்ளி!நான் இத்தனை நாள் அவர் மனசை காயப்படுத்தி இருந்தேன் தான் நினைத்தேன்!இப்போ தான் தெரியுது,நான் அவர் மனசை கொன்னுட்டேன்னு!போதும்...நான் போறேன்!மாமாவை பத்திரமா பார்த்துக்கோ!"-அவள் பதில் பேசாமல் நடந்தாள்.யார் பேச்சையும் கேட்கும் நிலையில் அவள் இல்லை.அவள் சென்றதும் மறைவில் இருந்து வெளிப்பட்டான் அசோக்.அவன் கண்களில் கண்ணீர் வழிந்தது.ஆறு வருடங்களுக்கு முன் அந்நிகழ்வு மட்டும் நிகழாமல் இருந்திருந்தால்...

று வருடங்களுக்க முன்...

கௌரியும்,அசோக்கும் உயிருக்கு உயிராய் காதலித்தனர்.

அவன் அப்போது சென்னையில் சாதாரண வருமானத்தில் பணிபுரிந்துக் கொண்டிருந்தான்.

அப்போது தான் அமெரிக்க பணி ஆணை வந்திருந்தது.உடனடியாக ஊருக்கு கிளம்பி வந்தான்.

தந்தையிடத்திலும்,கௌரியிடமும் விவரத்தை கூறினான்.

அப்போது கெளரி தான் திருமணத்தைப் பற்றி அவள் தந்தையிடம் பேச வற்புறுத்தினாள்.

சரியாக அச்சமயம் சக நண்பர் ஒருவரின் மூலம் அசோக்-கௌரியின் பந்தத்தை குறித்து அறிந்தார் செந்தில்நாதன்.

அப்போது அவர் ஒரு சாதாரண விவசாயி!!மகனுக்காக தன் மனையாளின் தமையனிடத்தில் கன்னிகாதானத்தை வேண்டி சென்றார்.

"என் பொண்ணை கேட்டு வந்தியா?நீ எங்கே நான் எங்கே?நாலு கூரை வைத்து செய்த குடிசை வீட்டில வாழுற உன் மகனுக்கு என் பொண்ணு வேணுமா!வெளியே போயா!"-என்று அவமானப்படுத்துவிட்டார் அவர்.

துருதிர்ஷ்டவசமாக,அது தந்தையை அழைத்து செல்ல வந்து அசோக்கின் செவிகளில் விழுந்தது!!

"உனக்கு என்ன தைரியம் இருந்தா என் அப்பாவை அவமானப்படுத்தி இருப்ப?இதுக்கெல்லாம் நிச்சயம் ஒருநாள் நீ வருத்தப்படுவ!நீ என்ன சொல்றது...நான் சொல்றேன்!உன் பொண்ணு எனக்கு தேவையே இல்லை!நீ வாப்பா போகலாம்!"-என்று அங்கு மௌனம் சாதித்து நின்ற கௌரியின் முகத்தை வெறுப்போடு ஒருபார்வை பார்த்துவிட்டு,தன் தந்தையின் கரம் பற்றி அழைத்து சென்றான்!!அவள் முகத்தை மட்டும் பார்த்தவன்,கசிந்திருந்த கண்ணீரை பார்க்க தவிர போனான்.ஆறு வருடங்கள்...அதோடு இன்று தான் அவள் முகத்தில் விழிக்கிறான்.

மனதில் காதல் அதே நிலையில் இருந்தாலும்,தந்தையின் அவமானம் அவளை ஏற்க இடம் தரவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.