(Reading time: 32 - 63 minutes)

ரண்டு வருடத்திற்குப் பிறகு,

“ஏண்டா கிருபா, பார்த்து போ மாட்டீயா?... பாரு இப்போ இப்படி அடிபட்டு ஹாஸ்பிட்டலில் இருக்குற…” என தன் நண்பனைப் பார்த்து கேள்விக்கேட்டுக்கொண்டிருந்தான் ஒருவன்…

“நீ ஏண்டா சொல்லமாட்ட?... இத்தனை நாள் ஆள், அட்ரஸே இல்ல… எங்கேயோ போயிட்ட… இப்பதான் திரும்பி வந்திருக்குற?... சரி நீ வந்திருக்குறன்னு நம்ம பசங்க சொன்னாங்கன்னு வந்து பார்த்துட்டு போகலாம்னு வந்தா, வந்த இடத்துல லைட் ஆ ஸ்லிப் ஆகிட்டு… அதுக்குன்னு ஏண்டா இப்படி ஓட்டுற காலையில இருந்து?...” என்றான் கிருபா…

“பின்ன வண்டி ஓட்ட கத்துக்குறவன் மாதிரில்ல நீ கீழே விழுந்து எழுந்திருச்சிருக்க… அதான்…” என்றவனின் வாயைப் பொத்தி அழைத்துச் சென்றான் கிருபா…

கிருபாவுடன் சில அடி தூரம் நடந்து சென்றவனின் மேல் ஒரு வயதானவர் வந்து தள்ளாடியபடி மோத,

“ஐயா… பார்த்துங்க…” என சொல்லியபடி அவரை கைத்தாங்கலாக பிடித்துக்கொண்டான் அவன்…

அவர் கைகளில் கொண்டு வந்த உணவுப்பொட்டலம் கீழே விழுந்து சிதறிவிட,

“அச்சச்சோ… எல்லாமே கீழே விழுந்துட்டே…” என்றபடி அவன் அதை எடுத்தான்…

“பரவாயில்லை தம்பி… இருக்கட்டும்…” என அவர் சொல்ல

“இருங்க வந்துடுறேன்…” என அவன் அனைத்தையும் அள்ளி எடுத்து குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு அந்த பெரியவரிடம் வந்தான்…

“உங்களுக்கு எதுக்கு தம்பி இந்த கஷ்டம் எல்லாம்…”

“இதிலென்ன இருக்கு ஐயா…” என்றபடி அவன் சிரிக்க, அவர் அவனை எதுவோ புதுமையாக பார்த்தார்…

அவரின் பார்வையின் அர்த்தத்தை புரியாது, “என்ன ஐயா… ஏன் இப்படி பார்க்குறீங்க?...” என அவரிடமே அவன் கேட்க,

அவரோ, “இந்த சிரிப்பை என் வாழ்க்கையில நான் பார்த்து ரொம்ப நாளாச்சு தம்பி… அதான்…” என்றார் மெதுவாக…

அவர் வார்த்தைகளின் பொருள் என்ன என்று அவன் மனது எண்ணுகையில் அவர் அவனிடமிருந்து விலகி சென்றார்…

“டேய்… இப்போ உனக்கென்ன ஆச்சுடா…?...” என்ற கிருபா தன் நண்பனை உலுக்க, அவனோ எதையோ யோசித்துக்கொண்டிருந்தான்…

“டேய்… உன்னைத்தான்…” என கிருபா அவனை வேகமாக கை வைத்து அசைக்க,

“ஹ்ம்ம்… என்னடா….” என்றான் எதிலிருந்தோ வெளிவந்தவனாய்…

“என்னடாவா?... அது சரி… இங்க ஒருத்தன்… காட்டு கத்து கத்திட்டிருக்கேன்… நீ ரொம்ப சாவகாசமா என்னன்னு கேட்குற?... ரொம்ப நல்லாயிருக்குடா நீ பண்ணுறது…”

“அட விடுடா… போகலாம் வா…” என அவன் உதடுகள் உரைக்க, அவன் விழிகளோ தூரமாய் சென்று கொண்டிருந்த அந்த பெரியவரிடமே சென்றது…

மறுநாளும், கிருபாவிற்கு துணையாய் அவன் மருத்துவமனைக்கு சென்ற போது, சற்று கூட்டம் தென்பட்டது மருத்துவமனை வளாகத்தில்…

“என்னடா இங்க ஒரே கூட்டமா இருக்கு…” – கிருபா…

“தெரியலைடா வா பார்க்கலாம்…” என கிருபாவின் நண்பன் விரைந்து சென்று பார்க்க,

அங்கே நேற்று பார்த்த அந்த பெரியவருடன் ஒரு பெண்மணி ஆவேசமாக பேசிக்கொண்டிருந்தார்…

“இன்னமும் இந்த இடமே கதின்னு கிடந்தீங்க அப்புறம் நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்…”

“இல்ல காஞ்சனா… நான் சொல்லுறதைக் கேளு…”

“நீங்க சொல்லுறதை இத்தனை வருஷமா கேட்டாச்சு… போதும்,.. இனியாச்சும் என் பேச்சைக் கேட்கப் பாருங்க… சும்மா சும்மா செலவழிக்க நம்ம கிட்ட பணம் என்ன மூட்டை மூட்டையாவா இருக்குது?... நமக்கும் இரண்டு பசங்க இருக்காங்க… நாளைக்கு நாம அவங்களுக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டாமா?... இப்படி காலம் முழுக்க ஹாஸ்பிட்டல், செலவு, வைத்தியம்னு நீங்க அலைஞ்சு பார்க்க நமக்கு என்ன தலை எழுத்தா?...”

“இப்படி உறவே இல்லைன்னு பேசினா என்ன காஞ்சனா அர்த்தம்?...”

“உறவா… அத வெட்டி விடுறதுக்கு தான் நான் இப்ப பேசவே செய்யுறேன்… போதும் இத்தனை நாள் எல்லாம் பார்த்து செஞ்சது…. கிளம்புங்க…”

“இப்படியே விட்டுட்டு வர சொல்ல உனக்கு எப்படி மனசு வருது காஞ்சனா?...”

“அந்த அளவுக்கு நான் ஒன்னும் மிருகம் இல்லை… என்ன இருந்தாலும் வளர்த்த பாசம் எனக்கும் இருக்கு… இப்பவே கொண்டு போய் தர்மாஸ்பத்திரியில் சேர்த்துட்டு எங்கூட வீட்டுக்கு வர்ற வழியைப் பாருங்க… ஹ்ம்ம் வாங்க…” என்று அந்த பெண்மணி அதட்ட

அந்த பெரியவரோ என்ன செய்வது என்று திணறிக்கொண்டிருந்தார்…

அவரின் யோசனையைக் கண்டு கொள்ளாது அந்த பெண்மணி விறுவிறுவென உள்ளே சென்று வரவேற்பறையில் இருந்த பெண்ணிடம் எதோ பேசி கையெழுத்து போட்டு, பணத்தையும் கொடுத்துவிட்டு திரும்பிய போது, அங்கே முன்பு கூடியிருந்த கூட்டம் இப்போது கலைந்திருந்தது…

தனது கணவரின் அருகே வந்த காஞ்சனா, “பார்த்தீங்களா, வேடிக்கைப் பார்த்தவங்க கூட விலகி போயிட்டாங்க… ஆனா நீங்க மட்டும் ஏன் இரண்டு வருஷமா இப்படி ஒரே இடத்துல நின்னு என்னையும் நம்ம பிள்ளைங்களையும் கஷ்டப்படுத்துறீங்க?...” என்றவர் அவர் அமைதியாக இருப்பதை பார்த்துவிட்டு,

“உள்ள எல்லாம் பேசிட்டேன்… இன்னும் கொஞ்ச நேரத்துல கொண்டு வந்திருவாங்க… அப்புறம் நாம செய்ய வேண்டியதை செஞ்சிட்டு ஒட்டு மொத்தமா தலை முழுகிடலாம்…”

“இது பாவம் காஞ்சனா… பெரிய பாவம்… இந்த பாவத்தை செய்ய என்னால முடியாது…”

“ஓஹோ… அப்படியா… அப்போ இங்க இருந்து நீங்க வீட்டுக்கு வரும்போது நானும் நம்ம பசங்களும் உயிரோட இருக்க மாட்டோம்… அதையும் நியாபகம் வச்சிக்கோங்க…”

“காஞ்சனா….” என்ற பெரியவர் துடித்துப் போனவராய் நிற்க,

அவரின் மனைவியோ வந்த ஆட்டோ டிரைவரை அழைத்தாள்… அவரும் வண்டியை எடுத்துக்கொண்டு அருகில் வர,

“டேய்… எதுக்குடா நாம இன்னும் இங்கேயே நிக்குறோம்… வாடா உள்ள போகலாம்…” - கிருபா

“இருடா… போகலாம்…” என்றான் அந்த நண்பன்…

“டேய்…. எதுக்குடா இப்படி அலம்பல் பண்ணுற?... அவங்க யாரோ எவரோ, அவங்க வீட்டு பிரச்சினையை பார்த்து நீ என்ன பண்ண போற?... பாரு… வேடிக்கைப் பார்த்த கூட்டமே கலைஞ்சு காணாம போயிட்டு… இன்னும் நீ மட்டும் ஏண்டா இப்படி பிடிச்சு வைச்ச பிள்ளையார் மாதிரி நிக்குற?...” – கிருபா…

“கொஞ்ச நேரம் பேசாம வாயை மூடுடா…”

“அதுசரி… அந்த அம்மாவை பார்த்தல்ல, அந்த பழக்க தோஷம் உன்னையும் ஒட்டிக்கிச்சுப் போல… அந்த பெரியவரையே புருஷன்னு பார்க்கலையே அந்த லேடி… என்ன மிரட்டல்…” என கிருபா சொல்ல, அவன் திரும்பி பார்த்த பார்வையில் கிருபா அமைதியானான்…

நண்பனை முறைத்துவிட்டு திரும்பியவனின் பார்வை அப்படியே அசையாமல் நின்றது சில நிமிடங்கள்…

நர்ஸ் கைத்தாங்கலாக பிடித்தபடி ஒரு பெண்ணை ஆட்டோவின் அருகே அழைத்து வந்தாள்…

“பார்த்து பத்திரமா கூட்டிட்டுப்போங்க…” – நர்ஸ்…

“கண்டிப்பாம்மா… நாங்க பார்த்துக்குறோம்… ரொம்ப நன்றிம்மா… இத்தனை நாள் நல்லா பார்த்துகிட்டதுக்கு…” என்றபடி காஞ்சனா ஆட்டோவினுள் அந்த பெண்ணையும் அமர வைத்துவிட்டு தானும் அமர்ந்து கொண்டு கணவரைப் பார்க்க, அவரும் செய்வதறியாது ஆட்டோவினுள் ஏறினார்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.