(Reading time: 17 - 33 minutes)

ன்று அவன் அவள் முகம் பார்த்த நொடியில் ஏதேதோ புரிகிறது அவனுக்கு. அவள் கண்களும் கண்ணீரும் என்னென்னவோ சொல்கிறது அவனுக்கு. சொல்லப்போனால் தனது மனமே இன்றுதான் புரிகிறதோ அவனுக்கு???

'நான்... குளிச்சிட்டு வந்திடறேன் மா...' சொல்லிவிட்டு விறுவிறுவென அங்கிருந்து நகர்ந்தான் கார்த்திக். பாடல் இன்னமும் ஒலித்துக்கொண்டிருந்தது கைப்பேசியில்.

எத்தனை நேரம் தான் குளியல் அறையிலேயே ஒளிந்துக்கொண்டு இருக்க முடியுமாம்??? ஒரு மணி நேரம் கழித்து வெளியே வந்தான் அவன். சந்தித்து தானே ஆக வேண்டும்!!! உண்மைகளை சந்தித்து தானே ஆக வேண்டும்.!!!

காலை உணவு தயாராக இருக்க சாப்பிடாமல் அமர்ந்திருந்தாள் ப்ரியா....  அந்த பாடலே அவள் நினைவில் ஒலித்துக்கொண்டிருந்தது. அது அவர்கள் வாழ்வை அப்படியே பிரதிபலிப்பது போலே தோன்றியது.

உணவு மேஜையில் வந்து அமர்ந்தான் கார்த்திக்.. மெதுமெதுவாக விழி நிமிர்த்தினான் அவன்.

பால் நிலா தேய்கின்றதென்று
பகலிரவும் என் நெஞ்சம்
பழி விழுமோ என்றஞ்சும்

வார்த்தைக்கு வார்த்தை இதுதான் அவனது மனநிலை. அது அவளுக்கும் புரியாமல் இல்லை. வேறு எப்படி யோசிக்க முடியுமாம் அவனால்???

அவனுடனான முதல் சந்திப்பிலேயே அவன் குணம் அவளுக்கு நன்றாக புரிந்து போனது. அந்த நிலையில் ஒரு நொடி கூட நினைத்திருக்கவில்லை அவள்... 'இவன் தனக்கு கணவனாக வருவான் என....'

கௌஷிக்!!!! கார்த்திக்கின் உயிர் நண்பன். கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களுக்கு முன்  அவளுக்கு காதலனாக, நண்பனாக, நல்ல வழிகாட்டியாக இருந்தவன் தான் கௌஷிக்.

ஆனால் இன்று??? எப்படி இப்படி மாறிப்போனான் என்று கூட புரியவில்லை தான் ப்ரியாவுக்கு. பணம் வந்து விட்டால் மனித மனம் மாறிபோய் விடுமா என்ன??? அவள் எப்படி இருக்கிறாள்??? என்ன செய்துக்கொண்டிருக்கிறாள் என்று கூட கேட்க தோன்றவில்லையா அவனுக்கு???

அவள் அவனை கடைசியாக சந்தித்தது கோயம்பத்தூர் ரயில் நிலையத்தில்.அங்கே  கண்களில் கண்ணீருடன் நின்றிருந்தாள் ப்ரியா. அப்போதுதான் அவர்கள் அருகில் ஓடி வந்து நின்றான் கார்த்திக்.

'டேய்... கௌஸ்.... என்னாச்சுடா???'

'அப்பாவுக்கு ரொம்ப சீரியஸா இருக்குடா. நான் இனிமே கொஞ்ச நாள் ஊரிலேயே இருக்கறது தான் நல்லது. தங்கச்சிக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணனும்டா . கையிலே அந்த அளவுக்கு பணமும் இல்லைடா. ஏதாவது பண்ணனும். அவ கல்யாணம் நல்ல படியா முடியணும். எல்லாம் சரியானதுக்கு அப்புறம் தான் நான் இந்த பக்கம் வரமுடியும்...' சலனமில்லாத குரலில் சொல்லிக்கொண்டே போனான் அவன்.

அப்போதுதான் கார்த்திக்கின் பார்வை ப்ரியாவின் பக்கம் திரும்பியது. 'இவங்க???'

'நான் அடிக்கடி சொல்லுவேனேடா ப்ரியா...'

'ஓ....' அவன் புருவங்கள் ஒரு முறை ஏறி இறங்க நட்பான புன்னகை ஓடியது அவன் இதழ்களில்.

'இங்கே பாரு ப்ரியா ...' என்றான் கௌஷிக் 'நான் வருவேன்... சீக்கிரம் உன்னை தேடி வருவேன்... எல்லாம் சரியானதும் உன்னை தேடி வருவேன். நம்பிக்கையோட இரு..' அவள் கையை பிடித்து அழுத்தினான் இதமாக.

பின்னர் கார்த்திக் பக்கம் திரும்பியவன் ' ஒரு ஹெல்ப் பண்றியாடா??? ராத்திரி ஆயிடுச்சு ப்ரியாவை அவங்க வீட்டிலே ட்ராப் பண்ணிடறியாடா???

ப்ரியா திகைப்புடன் கார்த்திக்கை பார்க்க 'பயப்படாதே... கார்த்திக் ரொம்ப நல்லவன் ... உன்னை பத்திரமா கொண்டு போய் விடுவான்....' புன்னகைத்தான் கௌஷிக். 'எல்லாம் சரியா நடக்கும்...'

ரயில் கிளம்பும் நேரம் வர, கௌஷிக் அதில் ஏற தயாராகிய நேரத்தில் சொன்னான்.....

'நான் வர வரைக்கும் அவளை கொஞ்சம் பார்த்துக்கோடா..... நான் இல்லைன்னா ரொம்ப டல் ஆகிடும் அது...'

'கண்டிப்பா ...' புன்னகைத்தான் கார்த்திக். இருவரும் கை அசைத்து விட்டு ஒன்றாக நடக்க துவங்க... ரயிலில் ஏறிய கௌஷிக் சொன்னான் சத்தமாக 'ப்ரியா பத்திரம்டா...' இன்று வரை அவளை பத்திரமாகத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறான் கார்த்திக்.

அன்று அவளை வீட்டில் விட, அவனுடன் அவள் பைக்கில் பயணித்தபோது மறந்தும் கூட அவள் மீது உரசி விடாமல்  அவன் பைக்கை செலுத்திய விதத்திலேயே அவன் குணமும், நண்பன் மீது அவன் வைத்திருக்கும் பாசமும், நண்பனின் காதலி மீது அவன் வைத்திருக்கும் மரியாதையும் நன்றாக புரிந்தது அவளுக்கு.

'ப்ரியா பத்திரம்டா... அந்த வார்த்தைகள் இப்போதும் கார்த்திக்கின் காதில் ஒலிப்பது போலே இருக்க அவளை நேரே பார்க்க முடியாமல் விழிகளை தாழ்த்திக்கொண்டான் கார்த்திக்.

ஆதவன் நீ தந்ததன்றோ
நிலவு மகள் என் வண்ணம்
நினைவுகளில் உன் எண்ணம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.