(Reading time: 17 - 33 minutes)

நிஜம். அவள் வாழ்வை பொறுத்தவரை இந்த வரிகள் அப்பட்டமான நிஜம். ஒரு ஆதவனாக நின்று பல நேரங்களில் அவளுக்கு ஒளிக்கொடுத்தவன் அவன்..

அன்று ரயில் நிலையத்திலிருந்து அவள் வீட்டுக்கு இருவரும் வர.... கூடத்தில் மயங்கிக்கிடந்தார் அவள் அப்பா. அதன் பிறகு  பல நாட்கள் மருத்துவமனை வாசம் அவருக்கு, ஒரு நண்பனாக அவளுடனே இருந்தான் கார்த்திக் . பணத்தாலும், உடலாலும், உள்ளதாலும் பல உதவிகள் செய்தான் அந்த நேரத்தில். அதுவே இரண்டு குடும்பங்களும் ஒன்றாக ஒரு வழி வகை அமைத்துக்கொடுத்தது.

அப்போததெல்லாம் தொடர்பில் தான் இருந்தான் கௌஷிக். அவனது அப்பாவின் மரண செய்தி வர ஊருக்கு சென்று வந்தான் கார்த்திக். அதன் பின் திடீரென ஒரு நாள் கௌஷிக்கிடமிருந்து கார்த்திக்குக்கு அழைப்பு.

'அமெரிக்கா போறேன்டா. அங்கே வேலை கிடைச்சிருக்குடா... இன்னும் சரியா ஒரு வருஷம் எல்லாம் சரியாயிடும் நான் வந்திடுவேன்...'

அதன் பிறகு??? கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் கடந்து விட்ட போதும் இவர்களை தொடர்ப்பு கொள்ளவே இல்லை அவன். அமெரிக்க வாழ்வு அவனை மாற்றி விட்டதை போலவே தோன்றியது அவளுக்கு. எத்தனை நாட்கள் அவனுக்காக அழுதிருப்பாள் ப்ரியா???? பணம் ஒரு மனிதனை இப்படியா மாற்றும். அவள் மனம் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு போக ஆரம்பித்தது.

வாழ்கை அதன் போக்கில் பயணிக்க வேண்டிய திசையில் பயணிக்க ஆரம்பிக்க, பெரியவர்கள் இவர்கள் திருமண பேச்சை எடுக்க, துடித்துதான் போனான் கார்த்திக். கௌஷிக்கை தொடர்பு கொள்ள இவன் எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வி. அவனுடைய தங்கை எங்கே இருக்கிறாள் என்பது கூட தெரியவில்லை, அவன் வேலை பார்க்கும் நிறுவனத்தின் பெயர் கூட இவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை என்பது தான் துரதிர்ஷ்டம்.

இதனிடையே இவளது தந்தையின் மரணம் அவளை உலுக்க அந்த நேரத்திலும் அவளுக்கு துணை நின்றது கார்த்திக்கின் குடும்பம்.

கடைசியாக காலமும் சூழ்நிலையும் இருவரையும் திருமண பந்தத்தில் இணைத்திருந்தது. ஆனால் கௌஷிக் எப்படியும் திரும்ப வருவான் என்று ஒரு நம்பிக்கை கார்த்திக்கின் மனதில். இந்த நிமிடம் வரை அதற்கான முயற்சிகளை அவன் கை விடவில்லை தான்.

'கவலை படாதே ப்ரியா. உனக்கு சீக்கிரமே நல்லது நடக்கும்..' இதையே தான் அடிக்கடி சொல்கிறான் அவன். ஆனால் அவளுக்கு எது நல்லதாம்???'

தெரியவில்லை!!! அவளுக்கே தெரியவில்லை!!! எந்த நொடியில் அவள் உள்ளம் அவனுடன் கலந்தது என்று தெரியவில்லை. ஆனால் அது மட்டுமே நிஜம்.

பழைய நினைவுகளும் இன்றைய நிகழ்வுகளுமே இருவரையும் ஆட்கொண்டிருந்தது. இருவரும் ஆளுக்கொரு அறையில் அடைந்து கிடந்தனர். அந்த கனவே மறுபடி மறுபடி கண்முன்னே வருவதை போல் தோன்றியது அவனுக்கு. அவளை தன்னோடு சேர்த்துக்கொண்டு விட வேண்டுமென்றே தோன்றிக்கொண்டிருந்தது அவனுக்கு.

அவளுக்காக ஏன் இத்தனை பரிதவிக்கிறது என் மனம்??? அந்த கேள்விக்கு பதில் இல்லை அவனிடம்.

'என்னதான் எதுவுமே இல்லை... இல்லை... என நான் நினைத்துக்கொண்டாலும், என் அடி மனதில் எல்லாமே நிரம்பி இருக்கிறதோ????'.

'என்னாலே முடியலைடா கௌஸ்...' என்றான் வாய்விட்டு.  'எங்கே டா இருக்கே நீ சீக்கிரம் வா. நானும் மனுஷன் தான்...... தோத்து போயிடுவேன் போலிருக்குடா...'

சரியாக அந்த நொடியில் ஒலித்தது அவனது கைப்பேசி. ஏனோ குலுங்கி ஓய்ந்தது கார்த்திக்கின் உடலும் உள்ளமும். யோசனையிலேயே மூழ்கி கிடந்தவனாக கைப்பேசியை எடுத்து

'ஹலோ....' என்றான் கார்த்திக்.

'நான் கௌஷிக் பேசறேன்...'

'டேய்...' எழுந்தே அமர்ந்து விட்டான் நண்பன். 'என்னடா??? எப்படி... எப்படி டா இருக்கே??? எங்கேடா இருக்கே... டேய்... டேய்.. கௌஸ் நான்... உனக்கு...' படபடத்தது அவன் குரல்.

'நான் இந்தியா வந்திருக்கேன்டா...' எதிர்முனையில் அப்படி ஒரு நிதானம். 'இங்கே மேட்டுப்பாளையம் ரோடிலே இருக்கிற ஒரு பங்களாலே தங்கி இருக்கேன். நீ இன்னைக்கு சாயங்காலம் ஆறு மணிக்கு மேலே இங்கே வர முடியுமா???'

'வரேன்டா... கண்டிப்பா வரேன்...'

'வரும்போது ப்ரியாவையும் கூட்டிட்டு வா... நான் உங்களுக்காக காத்திருப்பேன்...' முகவரியை சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டான் அவன்.

என்ன நடந்தது என்று புரிந்து மனம் ஒரு நிலைக்கு வரவே சில நிமிடங்கள் பிடித்தது கார்த்திக்குக்கு..

'இனி என்ன செய்ய போகிறான் அவன்???' இவர்களுக்கு திருமணம் நடந்த விஷயம் கூட அவனுக்கு தெரியாதே??? எப்படி நண்பனின் முகத்தை பார்க்க போகிறானாம் இவன்??? மெல்ல நடந்து ப்ரியாவின் அருகில் வந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.