(Reading time: 17 - 33 minutes)

வளது கைப்பேசியில் புத்தம் புது பூ பூத்ததோ பாடலே ஒலித்துக்கொண்டிருந்தது. காலையில் இருந்து இருபதாவது முறையாக ஒலிக்கிறது இந்த பாடல்.

'ப்ரியா...'  தலையணையில் முகம் புதைத்து கிடந்தவள் விருட்டென எழுந்தாள். முகத்தில் கொஞ்சம் தெளிவு பிறந்திருந்தது அவளுக்கு.

'எனக்கு உன்கிட்டே ஒ..ஒண்ணு சொல்லணும்..ப்ரியா .' தட்டு தடுமாறி வெளிவந்தது அவன் குரல்.

'எனக்கும் சொல்லணும்.....' என்றாள் அவள்.

'நான் முதலிலே சொல்லிடறேன்... அது வந்து...' வார்த்தைகள் வெளி வருவதற்குள் தவிப்பின் உச்சியில் நின்றான் அவன்.. செய்தி கேட்டவுடன் மலர்ந்து போகுமா அவள் முகம்???

'கூடாது. அப்படி எல்லாம் மலரக்கூடாது..' அவனது மனதின் மறைவான பிரதேசத்தில் ஒரு குரல் கூவுவதை அவனால் தவிர்க்கவே இயலவில்லை. எச்சிலை கூட்டி விழுங்கிக்கொண்டு

'அது... கௌஷிக் வந்திருக்கான்மா...' என்றான் மெதுவாக.

சட்டென அவள் முகத்தில் நெருப்பை மிதித்த பாவம். அவனுக்குள்ளே துளியிலும் துளியாக ஒரு நிம்மதி.

'உன்னையும் என்னையும் பார்க்கணுமாம்... ஈவினிங் வர சொன்னான்' அவன் சொல்ல அவள் முகத்தில் பல நூறு மாற்றங்கள். அவன் அவள் முகத்தை படித்தபடியே நின்றிருக்க .... திடீரென ஓடி வந்து அவனை அணைத்துக்கொண்டாள் ப்ரியா.

'ப்.. ப்ரியா..'

'வேண்டாம்... கார்த்திக்... ப்ளீஸ்... எனக்கு வேண்டாம்... அதெல்லாம் எப்பவோ முடிஞ்சு போச்சு..'

'ப்ரியாமா..' அவன் ஏதோ சொல்ல முயல இறுகியது அவள் அணைப்பு..

'எனக்கு கார்த்திக் தான்.. வேணும் .'

கருணைக் கொண்டு நீ தான்
காயம் தன்னை ஆற்ற

பார்வைக் கொண்டு நீ தான்
பாச தீபம் ஏற்ற

உயிரென நான் கலந்தேன்

பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது கைப்பேசியில்....

'ப்ரியா... என்னை ஒரு நிமிஷம் பாரேன்..' நிமிரவில்லை அவள். அவன் சட்டை நனைந்தது அவள் கண்ணீரில்.

கஷ்டப்பட்டு அவள் முகம் நிமிர்த்தி கைகளில் ஏந்திக்கொண்டு அவள் கண்ணீரை துடைத்தான் கார்த்திக். அவன் கண்களிலும் நேரேற்றம்.

'நாம.. மு.. முதல்லே அவனை போய் ஒரு தடவை பார்ப்போம்'

'எதுக்கு கார்த்திக்????"

'அவன் என் ஃப்ரெண்டுடா...'

'அப்போ நான்..' அவனை விட்டு சற்றே விலகி நின்று அவன் முகம் பார்த்து அவள் கேட்க

'நீ என் உயிராச்சே...' என்றான் கரைந்து கிடந்த குரலில்.  'அது எனக்கே இன்னைக்கு தான் புரியுது...' கண்ணீரை துடைத்துக்கொண்டான் அவன். 'எது எப்படியானாலும் நாம அவனை போய் பார்க்குறது தான் கரெக்ட்....'

டாக்ஸி அந்த பங்களாவின் வாசலில் சென்று நின்றது, டாக்ஸியின் முன் பக்க கதவை திறந்துக்கொண்டு கார்த்திக் இறங்க, பின்னாலிருந்து ப்ரியா இறங்க.. அவர்கள் இருவரையும் இமைக்காமல் பார்த்திருந்தன அந்த கண்கள். கௌஷிக்கின் கண்கள்.

அசுர வேகத்தில் துடித்தன இரு இதயங்களும். கால்கள் நகர மறுத்து தரையோடு வேரூன்றி போனதை போல் தோன்றியது இருவருக்கும். எப்படியோ நடந்து திறந்திருந்த அந்த பங்காளவினுள்ளே நுழைந்தனர் இருவரும்.

அங்கே இருந்த சோபாவில் அமர்ந்திருந்தான் கௌஷிக்.

'வாங்க.. வாங்க...' பளீரென புன்னகைத்தபடியே வரவேற்றான் இருவரையும். அவனெதிரே அமர்ந்தனர் இருவரும். நிமிர்ந்து அவன் முகம் பார்க்க கூட தோன்றாமல் தரையை பார்த்தபடியே அமர்ந்திருந்தனர் இருவரும்.

அதே நேரத்தில் ப்ரியவினுள்ளே பல நூறு கேள்விகள் பொங்கியதும் நிஜம் 'இத்தனை நாள் எங்கே போயிருந்தானாம் இவன். இப்போது எதற்கு வந்தானாம்??? இவன் வா வென்றால் வரவும், போ என்றால் போகவும் நான் என்ன பொம்மையா???

'சார்.. கார்த்திக் சார்.. கொஞ்சம் என்னை நிமிர்ந்துதான் பாருங்களேன்... ' என்றான் கௌஷிக்

மெதுமெதுவாக நிமிர்ந்தான் கார்த்திக். அப்போது கௌஷிக்கின் அருகில் அமர்ந்திருந்தாள் அந்த பெண்

'ஷி இஸ் மை வொய்ஃப் கீதா..' என்றான் மென் சிரிப்புடன்.

உலகத்தில் இருக்கும் பூக்கள் எல்லாம் தன் எதிரில் இருக்கும் அந்த இரு முகங்களின் ஒரு முறை பூத்து மறைந்ததை நன்றாக உணர முடிந்தது கௌஷிக்கால்.

'ஏதாவது பதில் பேசுங்க பாஸ். அப்புறம் வேறென்ன விசேஷம்....' வார்த்தைகளற்று போயிருந்த தனது நண்பனை பார்த்து கேட்டான் கௌஷிக்.

'ஆங்... என்னது???'

'உன் வாழ்க்கையிலே... என்ன விசேஷம்ன்னு கேட்டேன்..'

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.