(Reading time: 22 - 44 minutes)

சுத்தி பாரு! நீதானே சொல்லுவ, மாமா இந்த நெல்லு கதிருதான் நமக்கு முதல் பிள்ளைன்னு… சுத்தி இவ்வளவு பிள்ளைகளை வெச்சுகிட்டு நீ எதுக்கு அழனும்? அதுக்காக நமக்கு கொழந்தையே பொறக்காது நான் சொல்லல. எது நடக்கணுமோ அது சரியான நேரத்துல நடக்கும்.. அது வரைக்கும் நாம எதையும் நினைச்சு கவலை பட கூடாது.. கூடிய சீக்கிரமே குட்டி திலி பிறப்பா பாரு!” என்றான் இனியவேல் கண்களில் கனவுகள் ஏந்தியபடி.

“ என்ன மாமா நீங்க! எப்போ பாத்தாலும் திலி எலின்னு!” என்றவள்,

“எனக்கு குட்டி வேலன் தான் வேணும்!” என்றாள்.

“ஹேய் நெத்திலி… கேப்ல என்னை வேலான்னு பேரு சொல்லி கூப்பிடுறியா?” என்றபடி இனியவேல் மைதிலியை துரத்த, அவனிடமிருந்து தப்பித்து ஓட ஆரம்பித்தாள் மைதிலி.

காலம் அதன் வேகத்தில் இருந்து பின்வாங்காமல் ஓடியது. ஆறு மாதங்கள் கடந்திருந்தன. என்னதான் இனியவேல் சொன்ன வார்த்தைகளினால் மைதிலி தெளிந்தாலும், குழந்தை இல்லை என்ற கவலை அவளை தொற்றிக் கொண்டு அகலாமல் இருந்தது.

இனியவேலிடம் பிடிவாதம் பிடித்து டாக்டரையும் பார்த்தாள்தான். பெரிதாய் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறி சில சத்து மாத்திரைகள் மட்டும் டாக்டர் தந்திட அவளுக்கு மனமே ஆறவில்லை!

இதுவரை இனியவேலுக்கு எதிர்மாறாக அவள் எதுவுமே செய்தது இல்லை. ஒன்றே ஒன்றைத் தவிர! இனியவேலும் மனைவியின் அந்த நம்பிக்கையை தடுக்கவில்லை. அதே நேரம் தன்னை அது பாதிக்காதப்படி பார்த்துக் கொண்டான். அந்த ஒரு விஷயம்தான் இறை நம்பிக்கை!

சிறுவயதிலேயே, நேரத்திற்கு சாமி கும்பிட வருவதில்லை என்று திட்டு வாங்குவான் இனியவேல். அதனாலேயே அவனுக்கு வழிப்பாடு என்பது ஒரு வேலை போல ஆகிவிட்டது. இயல்பிலேயே சுட்டிப்பிள்ளையாய் வளர்ந்தவன், வளர வளர இறைநம்பிக்கையைப் பற்றி கேட்கும் கேள்விகளுக்கு பெரியவர்களே திணறிட, அவன் சாமி கும்பிடுவதையே நிறுத்திவிட்டான். அதுவும் இப்போது சமுதாயத்தில் நடக்கும் அநீதிகளும், சாமியார் என்ற பெயரில் சிலர் போலியாக நடத்தும் நாடங்கங்களும் அவனை மொத்தமாய் மாற்றியிருந்தது!

ஆனால் மைதிலியோ, அவனுக்கு எதிர்மாறாக இருந்தாள். அவளுக்கு கடவுளும் ஒரு தோழன் தான். தனியாய் இருக்கும்போது மானசீகமாய் கடவுளிடமே பேசிக் கொள்வாள் அவள். வாழ்வில் என்ன நல்லது நடந்தாலும் அது இறைவன் கொடுத்த வரமென்று கருதுவாள் அவள்.

மைதிலுக்கு இனியவேலின் அவநம்பிக்கை தெரியும் என்பதினால், முடிந்த அளவு அவனை இந்த விஷயங்களில் வற்புறுத்தாமல் இருப்பாள் . ஆனால் இப்போதோ முதன்முறையாய் அவன் முன் பிடிவாதமுடன் நின்று கொண்டிருந்தாள் மைதிலி.

சொன்னா புரிஞ்சுக்கோடீ! ஏன் பிடிவாதம் பிடிக்கிற? கோவிலுக்கு போனால்தான் குழந்தை பிறக்குமா? எந்த காலத்துல இருக்குற நீ?” என்றான் இனியவேல் அதட்டலுடன்.

“ அந்த கோவில் சக்தி வாய்ந்தது மாமா. நிறைய பேரு பேசி கேட்டுருக்கேன்.”

“அதெல்லாம் பொய்யா இருக்கும் திலி.. காசுக்காக ஏமாத்துறாங்க!”

“மாமா அது ரொம்ப சின்ன கோவில். பக்கத்து ஊரோட காவல் தெய்வம் இருக்குற கோவில்.. காசுக்காக எல்லா இடத்திலும் தப்பு நடக்கும்னு அவசியமில்லை மாமா.. எனக்கு நம்பிக்கை இருக்கு!” என்றாள் மைதிலி பிடிவாதமாய்.

“ உனக்கு நம்பிக்கை இருந்தால் நீ தனியா போயிட்டு வா..! நான் வர்ல” என்றவன் கையில் ஒரு கதை புத்தகத்தை தூக்கி கொண்டு தோட்டத்தில் அமர்ந்துகொண்டான் இனியவேல்!

புரியவில்லை அவனுக்கு ! குழந்தைக்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம்?  உண்மையிலேயே கடவுள் என்றொரு சக்தி இருந்தால் ஏன் இப்புவியில் ஏராள அநியாயங்கள் நிகழ்கின்றன? பிறந்த சிசுவை கூட சில காமுகன்கள்  விட்டுவைப்பதில்லை! கொலை, கொள்ளை, கற்பழிப்பு, துரோகம் என பாவத்தில் மூழ்கி இருக்கும் புவனத்தை ரட்சிக்க வேண்டிய சக்தி எங்கே? வழக்கம் போல பதில் கிடைக்காமல் புத்தகத்தில் முகத்தை புதைத்துக் கொண்டான்.  தன்னை சரணடைந்தவனுக்கு நிம்மதியைத் தந்தது அந்த புத்தகம். கொஞ்ச நேரத்திலேயே இயல்பாகி விட்டிருந்தான் இனியவேல்.

வனைப்போலவே மைதிலியும் தெளிவான மனநிலையுடன் இனியவேலின் அருகில் வந்து அமர்ந்தாள்.

“ என்ன புஸ்தகம் மாமா இது?”

“ நாவல் திலி!”

“ இது முதல் தடவையா படிக்கிறீங்களா மாமா?” மைதிலி தெரியாதவள் போல கேட்கவும், புத்தகத்தை மூடி வைத்துவிட்டு ஆர்வமாய் பேச தொடங்கினான் இனியவேல்.

“ இல்லடீ. இஃப் ஐ நாட் ராங், இது பன்னிரண்டாவது முறை நான் படிக்கிறேன்! ஆனா, எப்போ இந்த புக் படிச்சாலும், எனக்கு மனசு அமைதியாகிடும்!”

“அப்படியா மாமா ? ஆனா அந்த கதை ஒன்னுதானே மாமா? எவ்ளோ வருஷம் கழிச்சு படிச்சாலும் ஒரே கதைதானே?”

“ உண்மைதான்.. ஆனா.. உனக்கு எப்படி சொல்லுறது? ம்ம்ம் .. புக் படிக்கிறது பாசிடிவ் எனர்ஜி” என்று அவன் கூற ஆரம்பித்து அவளுக்கு புரிகிறதா என்பது போல் பார்க்கவும்,

“பாசிடிவ் எனர்ஜின்னா என்னனு தெரியும் மாமா.. நீங்க சொல்ல வந்ததை சொல்லுங்க!” என்று அவனை ஊக்கினாள் மைதிலி.

“ ஸ்மார்ட் பொண்டாட்டி!” என்று முத்தமிட்டவன்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.