(Reading time: 22 - 44 minutes)

மைதிலின் கைகளில் நிறைந்துள்ள கண்ணாடி வளையல்களை உரசி அதன் சத்தத்தை ரசித்துக் கொண்டிருந்தான் இனியவேல். அடிக்கடி அவளது மேடிட்ட வயிற்றை முத்தமிட தவரவில்லை அவனது இதழ்கள்.

“ என்ன மாமா ரொம்ப குஷியா இருக்கீங்க போல?” தன் மடியில் படுத்திருக்கும் கணவனின் சுருள் கேசத்தை கலைத்தபடி கேட்டாள் மைதிலி.

“ உனக்கு தெரியாதாடீ ?” என்று அவன் பார்வையால் காதலுடன் ஊருடுவ, பதில் தெரிந்து கொண்டும்,

“ தெரியலையே” என்றாள் மைதிலி. மைதிலியின் பதிலில் பட்டென மடியிலிருந்து எழுந்தவன் அவள் பக்கத்தில் அமர்ந்து அவளை மார்பில் சாய்த்துக் கொண்டான்.

“ நான் ரொம்ப கொடுத்து வைத்தவன்டீ.. விதியினால்தான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. ஆனா அந்த விதி மட்டும் மனுஷ ரூபத்தில் வந்தா, இதுக்காகவே விதிக்கு பாத பூஜை பண்ணுவேன்!

ஒரு பெண்ணின் காதலை பெறுவது இவ்வளவு பெரிய சந்தோஷத்தை கொடுக்குமா? நான் தாலி கட்டினதுமே என்னை நம்பி வீட்டை பிரிஞ்சு வந்த நீ.. உன் மேல கோபம் காட்டினபோதும் அதை அன்பால் மாத்துனதும் நீதான்! நீ இதுவரைக்கும் ஒரு தடவை கூட என்னை விட்டு கொடுத்து நீ பேசி நான் பார்த்ததே இல்லை. அதுவும் இன்னைக்கு உனக்கு சீமந்தம்! யாருக்குமே சொல்லாமல் நாம ரெண்டு பேரும் மட்டும் இதை கொண்டாடுறோம்..

சம்ப்ரதாயம் பத்தி எல்லாம் எனக்கு ஒன்னும் தெரியாது.. ஆனால் என்னை பொருத்தவரை நம்ம லைஃப்லயே இதுதான் பெஸ்ட் டே! உன் கையில இருக்குற ஒவ்வொரு வளையலும் நான் ஆசையோடு போட்டு விட்டது! எனக்கு எவ்வளவு நிறைவா இருக்கு தெரியுமா?.. ஆனா..” என்று தயக்கமாய் நிறுத்தினான் இனியவேல்.

“ஆனா என்ன மாமா?”

“ ஆனா, உனக்கு நிஜமாவே அத்தை மாமாவை பார்க்கணும்னு தோணவே இல்லையா டீ?”

“ எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காமல் சொல்லுவேன்.. எனக்கு என் மாமா மட்டும் போதும் போதும் போதும்!” என்று கூறி கணவனை முத்தமிட்டாள் மைதிலி. மனம் நிறைந்திருந்தது இருவருக்குமே.

மைதிலி- இனியவேலின் வேண்டுதலுக்கு பின் சில நாட்களிலேயே கருத்தறித்திருந்தாள் மைதிலி. எனினும் ஒருபோதும் தனது பக்திதான் இதற்கு காரணம் என்று அவள் சொல்லிக்காட்டவில்லை! நமது எண்ணத்திற்கும் உடலுக்கும் எப்போதும் சம்பந்தம் இருக்கும்! கோவிலுக்கு சென்று வந்தவள் மனதளவில் அதிக நம்பிக்கை வைத்திருந்ததால்தான் இது  சாத்தியமாகியது என்று பொதுப்படையான கருத்தோடு இருவருமே அந்த சந்தோஷத்தை கொண்டாடினர். அவர்களது சிறிய உலகம் இன்னும் அழகானது ஒவ்வொரு நாளையுமே நிறைய கனவுகளுடன் களித்தனர்.

“ரொம்ப வலிக்கிறதாடீ ?” நூறாவது முறையாய் மனைவியைக் கேட்டான் இனியவேல். முடிந்த அளவு கண்ணீரை அடக்கிக் கொண்டு , “ இல்ல மாமா” என்றாள் மைதிலி.

மருத்துவமனையில் இருந்தனர் இருவரும். அவள் தனக்காக வலியை மறைத்துக் கொண்டு சிரித்த காட்சி இனியவேலை கிலியடைய வைத்தது.

“திலி.. வலியை மறைக்காத! நான் பயப்பட மாட்டேன்டீ!” என்றான் விழிகளில் வழியும் கண்ணீரை துடைக்காமல். மைதிலியாலும் வலியை பொறுக்க முடியாமல் போகவே “ஆ.. மாமா “என்று அழ ஆரம்பித்திருந்தாள் அவள்.

மைதிலியை பரிசோதித்த டாக்டரோ இனியவேலின் பதட்டத்தை இன்னும் அதிகப்படுத்தினார். குழந்தை இருக்கும் நிலை சீராக இல்லையென்றும் அறுவை சிகிச்சையின் மூலம் தாய் சேய் இருவரில் ஒருவரைத்தான் காக்க முடியும்! என்றும் அவர் கூறவும் உடைந்தே விட்டிருந்தான் இனியவேல்.

மற்றவர்களைபோல், “குழந்தை வேணாம் டாக்டர் , என் மனைவி போதும்” என்று வீரவசனம் பேச முடியவில்லை அவனால். காரணம் தன்னை விட மைதிலிதான் இந்த குழந்தை மீது உயிரையே வைத்திருக்கிறாள் என்பது அவன் நன்கு அறிந்த விஷயம்.

“ப்ளிஸ் டாக்டர்.. எப்படியாவது ரெண்டு பேரையும் காப்பாத்துங்க!” என்று கெஞ்சினான் இனியவேல். அவன் தனது கையை பிடித்துக் கொண்டு மன்றாடிய விதத்தில் டாக்டருக்கே என்னவோ போலாகிவிட்டது. எனினும் தன்மையாய் அவனுக்கு விளக்கினார் அவர்.

“ இது பாருங்க மிஸ்டர் இனியவேல், நீங்க இப்படி கெஞ்சினால்தான் உங்க குழந்தை, மனைவி ரெண்டு பேரையும் நான் காப்பற்ற முடியும்னு இல்லை.. அதற்காக நான் இந்த விஷயத்தை சொல்லவில்லை. ஒரு டாக்டரா எது சாத்தியமோ, அதைத்தானே நான் சொல்ல முடியும்? என்னால முடிஞ்சதை நான் நிச்சயம் செய்வேன்! அதற்குமேல் இறைவன் விட்ட வழி!” என்று முடித்தார் அவர்.

“இறைவன்..! இறைவன்!!”. மத்த நாளாக இருந்தால் , “ நீங்க டாக்டரா அல்லது உங்க இறைவன் டாக்டரா?” என்று கேட்டிருப்பான் அவன். ஆனால் இப்போதோ இனியவேல் மொத்தமாய் உடைந்திருந்தான். குழந்தையை விட மைதிலியை எண்ணித் தான் பதறினான்.

அவள் இல்லாமல் அவனால் வாழ முடியுமா? ஒரு நிமிடமாவது அவள் இல்லாத உலகில் தன்னால் இருக்க முடியுமா? நிச்சயம் முடியாது! காப்பாற்ற வேண்டும் எப்படியாவது காப்பாற்ற வேண்டும்.. யாரிடம் வேண்டுமானாலும் யாசகம் கேட்டாவது அவளை மீட்க வேண்டும்! என்று நினைத்தவனின் அகக் கண்ணில், அன்று மைதிலி மடிப்பிச்சை கேட்டு நின்ற காட்சி வந்திருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.