(Reading time: 22 - 44 minutes)

புக் படிக்கிறது பாசிடிவ் எனர்ஜி. மனசுல எவ்வளோ குழப்பம் இருந்தாலும் புக் படிச்சா சரியாகிடும். தெரிஞ்ச கதைதான் என்றாலும் கூட அதை படிக்கும்போது மனசு அடங்கிடும்.. மத்த ப்ரச்சனை எதுவும் பூதகரமாய் தெரியாது! இது ஒருவகையான நம்பிக்கை!” என்றான் இனியவேல். தனக்கு வேண்டிய வார்த்தையை அவன் சொன்ன மகிழ்ச்சியில் புன்னகைத்த மைதிலி,

“ இது மூட நம்பிக்கை இல்லையா மாமா? உயிரே இல்லாத புத்தகம் மேல என்ன நம்பிக்கை உங்களுக்கு?” என்றாள்.

“ஹேய் லூசு.. உயிர் இல்லைன்னா உண்மையில்லைன்னு ஆகிடுமா?” என்று கேட்கவும், தனிந்த குரலில் பேசினாள் மைதிலி.

“ மாமா உங்களுக்கு புஸ்தகம் மேல இருக்குற நம்பிக்கை எனக்கு கடவுள் மேல இருக்க கூடாதா?”

“..”

“உங்களை பொருத்தவரை கடவுள் என்பது கல்லாக இருக்கலாம். உயிர் இல்லாத விஷயமாக இருக்கலாம் ..அதுக்காக கடவுள் மேல இருக்குற நம்பிக்கை மொத்தமும் மூட நம்பிக்கையாகிடுமா மாமா?” என்று அப்பாவியாய் கேட்டாள் மைதிலி. மனைவியின் வாதத்தில் வாயடைத்து போனான் இனியவேல்.

“ உங்களுக்கு புத்தகம் படிக்கிறது எப்படி பாசிடிவ் எனர்ஜியோ, அதே மாதிரிதான் எனக்கு கடவுள்! என்னுடைய இஷ்ட தெய்வம் யாருன்னு உங்களால் சொல்ல முடியுமா? நிச்சயம் முடியாது! ஒரு நாள் கணபதியை கும்பிடுவேன் மறுநாளே முருகனை கும்பிடுவேன்.. பள்ளிவாசலுக்கும் போவேன், தேவாலயத்துக்கும் போவேன். எப்படி புத்தகம் படிக்கிறது என்பது ஒரு புத்தகத்தில் அடங்குற விஷயம் இல்லையோ அதே மாதிரி கடவுளும் ஒரு மதத்துக்குள் அடங்குற விஷயம் இல்லை. “

“..”

“இப்போ நான் ஏன் இதை சொல்லுறேன்னா, கடவுள்ன்னா யாருன்னு உணருற அளவு எனக்கு தெளிவு இருக்கு.. நாம அந்த காவல் தெய்வத்தின் கோவிலுக்கு போறது எனக்கு நானே கொடுத்துக்குற ஊக்கம்.. உங்களுக்கு நம்பிக்கை இருக்கோ இல்லையோ, எனக்கு கோவிலுக்கு போயிட்டு வந்தால் நல்லது நடக்கும்னு நம்பிக்கை இருக்கு. நான் ஒன்னும், கோவிலுக்கு மட்டும் போகலாம் மாமா.. ஹாஸ்பிட்டல் வேணாம்னு சொல்லலயே! கடவுள் என்கிற விஷயம் நம்மளுடைய உழைப்புக்கு பின்தான் அப்படிங்குறதை நான் எல்லா விஷயத்துலயும் நம்பறேன்!”

“..”

“இப்போ குழந்தை விஷயமும் அப்படித்தான்! நம்மால் முடிஞ்ச முயற்சிகள் பண்ணிகிட்டே தான் இந்த வேண்டுதலையும் பண்ணலாம்னு சொல்லுறேன்”. சண்டை போடாமால், குரல் உயர்த்தாமல், தனக்கு சரியென்று தோன்றியதை பொறுமையாய் எடுத்துரைத்த மைதிலி, இனியவேலின் பார்வையில் எப்போதும் போல உயர்ந்து நின்றிருந்தாள்.

றுநாள் காலையிலேயே மனையாளுடன் அந்த கோவிலின் வாசலில் நின்றிருந்தான் இனியவேல். மைதிலியை மணக்கும்போதும் கூட, கோவிலின் மூலஸ்தானத்திற்கு செல்லாமல் சாமர்த்தியமாய் தவிர்த்தவன், இன்று மனைவியின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து வந்தான். ஆனால் கோவில் வாசலில் நின்றவனுக்கு உள்ளே செல்ல மீண்டும் தயக்கம். கணவனின் தயக்கத்தை புரிந்து கொண்டு செல்லமாய் முறைத்தாள் மைதிலி.

“ என்ன மாமா வேதாளம் முருங்கை மரம் ஏறுதோ?”

“அடிப்பாவி என்னை வேதாளம்ன்னு சொல்லுறியா?”

“ பின்ன பாதாளமா? என்னை காளியா மாத்திடாதீங்க மாமா ! வாசல் வரைக்கும் வந்துட்டு என்ன தயக்கம் ?  என்னடா எதுக்கு இங்க வந்தனு சாமி கேள்வி கேட்க மாட்டாரு! இந்த வேண்டுதல் கணவன் மனைவி சேர்ந்தே பண்ணனும். உங்களுக்கு நம்பிக்கை இல்லன்னாலும் எனக்காக வாங்க மாமா!” என்று இறைஞ்சும் குரலில் மைதிலி கூறவும், அவளது வலது கரத்தைப் பற்றிக் கொண்டு அந்த கோவிலுக்குள் நுழைந்தான் இனியவேல். திடீரென பலத்த காற்று வீசியது! விதியே தன் மாற்றத்தைக் கண்டு நகைக்கிறதோ என்று  எண்ணிக் கொண்டான் அவன்.

வேண்டுதலில், மனைவி செய்ய சொன்ன அனைத்தையும் முகம் சுளிக்காமல் செய்து முடித்தான் இனியவேல். இறுதியாய் மைதிலி கலங்கிய விழிகளுடன் மடிப்பிச்சை ஏந்தி நிற்க இனியவேலின் கரங்கள் தானாகவே கடவுளை வணங்கின.

“ எனக்கு இப்பவும் இதில் நம்பிக்கை இருக்குன்னு சொல்ல முடியாது! இதுவரை உன்னை நான் கும்பிட்டது இல்லை. அதனால் எனக்கு இப்போ ஒரு காரியம் ஆகணும் என்பதுக்காக கும்பிடுவது ரொம்பவும் தப்பாக தெரியுது! அதே நேரம் மைதிலிக்கு உன் மேல ரொம்பவும் நம்பிக்கை இருக்கு. நீ இருக்குறது உண்மைன்னா அவளோட ஏக்கத்தை தீர்த்து வை.. பிடிக்கிதோ இல்லயோ, அவ நினைச்சது நடந்தா நானும் நேர்த்திகடன் பண்ணுறேன்!” என்று வேண்டினான் இனியவேல். மீண்டும் பலத்த காற்று வீசியது!

“ தெய்வமே இல்லை என்றவன் கோவில் வரவில்லையா? அதே போல யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல் நீயாகவே இக்கோவிலுக்கு வந்திடுவாய். நேர்த்திகடனையும் முழுமனதாய் செய்திடுவாய்!” என்று விதி பதிலளித்தது அவன் செவிகளுக்கு எட்டவில்லை!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.