(Reading time: 44 - 87 minutes)

“உங்க வீட்ல யாருக்கும் சொல்லலடா.  நீ இங்க இருக்கனு தெரிஞ்சா, உனக்கென்னாச்சு? யாரு காரணம்னு.... இன்னும் எத்தனையோ கேள்வி வரும்.  அதான் யாருக்கும் சொல்லலை”

இப்போதும் இவளைப் பற்றி தானே யோசிக்கிறான்.  எது அவர்களுக்கு தெரிந்தாலும் கிரண் விஷயத்தை மட்டும் யாரிடமும் தெரிவிக்க அவளுக்கு மட்டுமல்ல அவனுக்கும் விருப்பமில்லை என்பது புரிகிறதே பேதைக்கு. 

பதிலேதும் சொல்லாது கலக்கத்தோடு அவனைப் பார்க்கவும்,

“அம்மா மாதிரி என்னால பார்த்துக்க முடியுமானு கேட்குறியா? உனக்கு அந்த கவலையே வேணா சரூ.  நான் உன்னை நல்லா கவனிச்சுக்குவே” என்றவன் அவளை நெருங்கி நெற்றியில் இதழ் பதித்தான்.  அதில் வழிந்த அன்பு சரயூவை அமைதிபடுத்தாமல் மனதை அழுத்தியது.

அவ்வப்போது ரூபினும் சௌம்யாவும் வந்து இவளை பார்த்துவிட்டு செல்ல ஜெய் முழுநேரமும் இவளோடு கழித்தான். 

சரயூவிற்கு உணவு கொடுப்பது முதல் தலை சீவுவது வரை எல்லாவற்றையும் இவனே பார்த்துகொள்ள அவளின் உடை மாற்ற மட்டுமே நர்ஸ் உதவி செய்தார்.  ஒரு வாரத்தில் கைகால் செயல் மீண்டிருந்தாலும் மிகவும் பலவீனமாகியிருந்தது உடல். 

சில நாட்களாக படுத்து கிடந்தது அவளை நடக்க தூண்டியது.  ஆனால் கால்களை தரையில் ஊன்றகூட முடியாது தடுமாறி விழுவிருந்தவளை, பாய்ந்து வந்து தாங்கினான் ஜெய்.

“டாக்டரை பார்த்துட்டு வரதுக்குள்ள என்ன அவசரம்? கீழே விழுந்து அடியேதும் பட்டிருந்தா... கொஞ்ச.....” மனைவியின் மீதிருந்த அக்கறையில் கோபமாக எதோ சொல்லிக் கொண்டிருந்தவனின் பேச்சு அவளின் தரையை தொட்ட பார்வையில் அப்படியே நின்றுவிட்டது.

இரண்டு நாட்களாக, இப்படிதான் அவனை பார்ப்பதை தவிர்க்கிறாள்.  இவன் பார்க்காத வேளையில் இவனை பார்த்தாலும், ஜெய் அவள் புறமாக திரும்பிவிட்டால் சட்டென கண்களை மூடித் தூங்குவது போல் பாசாங்கு செய்கிறாள். 

அன்று தன்னை மன்னிக்கும்படி கேட்டதை தவிர இவனிடம் இன்று வரை எதையும் பேசியிருக்கவில்லை.  விஷத்தால் தொண்டை பகுதியில் பாதிப்பேதும் இருக்குமோ என்று மருத்துவரிடமும் விசாரித்துவிட்டான்.  அவரோ, உடலின் செயல்பாட்டை தடுத்து உயிரைக் குடிக்கும் விஷமது மற்றபடி எந்த பாதிப்பும் இருக்காது என்றுவிட்டார்.   

அவளின் செயல்கள் தந்த உறுத்தலை ஒதுக்கிவிட்டு மனைவியின் நடந்திடும் ஆசையை நிறைவேற்றினான்.  அவளை கைகளில் ஏந்தியபடி அந்த மருத்துவமனையை சில முறை சுற்றி வந்தான்.

“உடம்பு குணமாகுற வரைக்கும் இப்படி நிற்குற நடக்குறனு எதையாவது செய்து என்னை தவிக்கவிடாதடா.  ரூம்லயே அடைஞ்சு கிடப்பது கஷ்டமாயிருந்தா சொல்லியிருக்கலாமே சரூ.  நான் முதலே யோசிச்சிருக்கனும்.  சரி விடு....தப்பு எம்மேலதா.  இனிமே தினமும் இரண்டு முறை இதே மாதிரி சுத்தி வரலாம்” என்று சொல்லிவிட்டு அவளைப் பார்க்க கண்கள் மூடியிருந்தாள்.  மனது சோர்ந்தாலும், அவள் உண்மையாகவே தூங்கியிருக்கலாமே என்று தன்னை தானே தேற்றிக் கொண்டான்.

ஜெய்யின் ஒவ்வொரு வார்த்தையும் ஈட்டியாய் பாய்ந்து நெஞ்சைக் கிழித்தது.  இவள் அறையில் அடைந்து கிடப்பதை பற்றி அவன் யோசித்திருக்கவில்லையாம்...அதற்கும் அவன் மீதே தவறென்கிறான்.  ஒரு பேச்சுக்கு கூட இதுவரை இவளைக் குறைக் கூறியதில்லை அவன்.  இவனையா? இவனுடைய அன்பிலா குறைக் கண்டேன்? இவன் காதலையா பொய்யென்றேன்? தாய்க்கு தாயாய் மாறி தன்னை குழந்தையாய் தாங்கி நிற்பவனை பார்க்க பார்க்க அவளுக்குள் ஏதோ ஒன்று அடிமனதிலிருந்து கிளம்பி உடலெங்கும் பரவி தொண்டையை அடைத்தது.  கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க ஓவென கதறத் துடித்தது.  அவனுக்கு தெரிந்துவிட்டால் இதற்கும் சேர்த்து அவனையே நொந்துகொள்வான் என்று அடக்கிக் கொண்டாள். 

இவளை விழியகற்றாது பார்த்துக் கொண்டிருந்தவனின் கைகள் கண்ணீரைத் துடைத்தது.

எதை நினைத்து அழுது கரைகிறாளோ என்று துடித்தவன், மெத்தையினருகில் இருக்கையை நகர்த்தி அமர்ந்து அவள் இடது கையை தன்னுடைய கைகளில் வைத்து பொத்திக் கொண்டான்.  அவள் தொண்டைக் குழியை கவனித்தவன்,

“என்ன பிரச்சனைன்னாலும் எங்கிட்ட சொல்லிடு சரூ.  இல்லையா கத்தி அழனுமா அழுதிடு.  யாரும் உன்னை எதுவும் சொல்லமாட்டாங்க.  இங்க என்னை தவிர யாருமில்லடா.  இப்படி கஷ்டபடுறதா பார்த்தா....” என்றவனின் குரல் கரகரக்க சில நொடி மௌனம்.

அதில் விழுந்து கரைந்து போனவளின் கண்ணீர் பெருகியது.  அழகான காதலை கொடுத்த இறைவன் அதை அனுபவிக்க விடாதது யாரிழைத்த பாவமோ? யாரிழைத்ததென்ன நீ தானே! நீ தானே எல்லாம் வல்லவன் கொடுத்த ஜெய்யின் காதலை கொன்று அவனையும் கொல்ல துணிந்த பாவி என்ற மனதின் பதிலில் உயிர் சுருண்டுவிட்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.