(Reading time: 44 - 87 minutes)

இத்தனை நாட்களாக சரயூவிடம் இருக்கும் ஒருவிதமான ஒதுக்கமும், இப்போதைய அவளின் அமைதியும் அவன் வேதனையை கூட்டியது.  

கூர்கின் சம்பவங்களை நினைவுக் கூர்ந்ததால் அவளுள் ஏற்பட்டிருக்கும் மாற்றமாக இருக்கலாம்! அதோடு விஷமும், விஷமுறிவு மூலிகைகளும் கூட உடலின் உபாதையென அவளை இப்படியாக்கியிருக்கும்.  குழந்தையோடு சில தினங்கள் கழித்தால் மனதுக்கு இதத்தை தரும்.  அவளுக்கு பிடித்த சூழலில் இருக்கும் போதுதான் கலகலப்பான பழைய சரயூ வெளிவருவாள் என்று மனதின் பயத்தை ஒதுக்கி வைத்து பல புதிய காரணங்களை சொல்லிக்கொண்டான்.

லவாறாக தன்னை சமாதான படுத்திக்கொண்டு மூன்று மாதங்களை கடத்திவிட்டவனுக்கோ, அவன் நினைத்த எதுவும் நடப்பதாக தெரியவில்லை.  முதலினும் மோசமாக அவள் தன்னை தவிர்ப்பது புரிந்து உள்ளம் உடைந்து போனது.  சரயூ அவனிடம் பேசுவதென்பது அரிதாகிவிட்டிருந்தது.  அவள் இவன் வீட்டிலிருக்கும் போதும் பேசவில்லைதான்.  ஆனால் அவளை பிரிந்திருந்த சமயத்தில் அவள் பேசாவிடினும் இவனாவது பேசிட துடித்தான்.  தாய் வீட்டிற்கு சென்றவளின் கைபேசி உடைந்து போனதால் லேண்ட் லைனில் பேச வேண்டியிருந்தது....ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு அமைதியாகி விடுவாள்... அதுவும் இவன் கேட்கும் கேள்விகளுக்கான பதிலாக வரும் வார்த்தைகள் மட்டுமே.  புது கைபேசி வாங்குவதை தடுத்து...பழையதை பழுது பார்த்துகொள்வதாக சொல்லிவிட்டாள்.  அவளாக கடைத்தெருவிற்கு போய் வருமளவிற்கு முன்னேற்றம் ஏற்பட்டதில் மகிழ்ச்சியே.

அப்படிதான் ஒரு நாள் தொலைபேசியில் இவன் அழைக்க, சரியாக கேட்கவில்லையென்று துண்டித்துவிட்டாள்.  அப்போது மைத்ரீ தன் கைபேசியை உபயோகிக்க கொடுக்க, “சஞ்சு பிஸியா இருக்கானாம்.  இப்போ பேசமுடியாதுனு சொல்லிட்டா.  அதான்...” ஜெய்யின் அழைப்பை துண்டித்துவிட்டதாக நினைத்து அவள் பேசியதை கேட்க நேர்ந்தது.

இவனோடிருந்த போதும் அவள் பேசவில்லையே அதனால் தான் அப்படி சொல்லியிருப்பாள்.  அவள் தன்னோடு பேசுவதில்லை என்ற வருத்தமிருந்தாலும் இது புதிதல்ல என்ற சிறுத்துளி நிம்மதி இருந்தது.

அவளைக் காணச் சென்றாலோ, தப்பித் தவறியும் அவனோடு தனிமை கிடைக்காதவாறு அமைத்துக் கொண்டு, குழந்தையோடு நடுவீட்டில் அமர்ந்திருப்பாள்.  வேலை அலைச்சலில் ஞாயிறன்று மட்டும்தான் மனைவியைக் காண வாய்ப்பு கிடைக்கும் ஜெய்யிற்கோ அவளிடம் சொல்லிட ஆயிரமாயிரம் கதைகளிருக்கும் ஆனால் கேட்டிட அவளில்லை.  தோழியிடமோ இல்லை ராகுலிடமோ ஒரு வார்த்தை இல்லை ஒரு சிறு செயலில் இவனெண்ணத்தை வெளிப்படுத்தியிருந்தாலும் அவளிடம் பேசிடலாம்.  அவளை வற்புறுத்தி கிடைக்கும் ஏதும் இவனுக்கு வேண்டாமே.  

சரயூவை சரிசெய்து மூழ்கிக்கொண்டிருக்கும் அவர்களின் வாழ்க்கையை எப்படி மீட்டெடுப்பது என்று சதா யோசனையில் தொலைந்து கொண்டிருந்தவனுக்கு, அன்று அலுவலகத்தில் இருக்க பிடிக்காது வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.  எப்போதும் மனதை அழுத்தும் பாரம்தான், இன்னும் சற்று கூடிவிட்டதாக ஓருணர்வு.  அதோடு நில்லாது அந்த பாரம் தலைக்கும் பரவியிருக்க, ஸோஃபாவில் கண்களை மூடி தலை சாய்த்திருந்தவனை கலைத்தது தபால்க்காரனின் குரல்.  தொழில்நுட்ப வளர்ச்சியில் அரிதாகி போனதாக ஜெய் நினைக்கும் தபால், தன் பெயருக்கு வந்திருக்கும் ஆச்சரியத்தில் பிரித்து படித்தான்.

சரயூ தன்னை தவிர்க்கத்தான் தாய்வீட்டில் தங்கியிருக்கிறாள் என்று புரிந்திருந்தவனுக்கு, அவளின் முடிவு நெஞ்சைக் கிழித்தது.  சிக்கலை சீர்செய்து மனைவியோடு காலம் முழுதும் வாழ்ந்திடும் கனவை சிதைத்திருந்த விவாகரத்து பத்திரத்தை கிழித்து எரிந்தவனுள் எரிமலையாக குமுறிக் கொண்டிருந்தது கோபம்.  அசுர வேகத்தில் காரை செலுத்தி வந்துவிட்டிருந்தான் ராகுலின் வீட்டிற்கு. 

வள் கையை பிடித்து தரதரவென இழுத்து வந்து அறைக்கதவை அடைத்து தாழிட்டவனை கண்டு மிரண்டு போனாள் சரயூ.  விவாகரத்து பத்திரம் கிடைத்தவுடன் இங்கு வருவான், தன்னிடம் பேசுவானென்று தெரியும்.  ஆனால் ஜெய்யின் கோபமும் ஆவேசமும் அவள் சற்றும் எதிர்பாராதது. 

“இப்பல்லெம் நீ தனியா கடைக்கு போயிட்டு வர.  குழந்தைக்கு ஏதோ வாங்கிட்டு வந்த, ஃபோனை கூட சரி செய்துட்டு வந்தனு ராகுல் சொன்னப்போ ரொம்ப சந்தோஷபட்டே.  ஆனா நீ எதுக்கு வெளிய போன அதுவும் தனியானு இப்போதானே தெரியுது.  என்னதான்டி நினைச்சிட்டிருக்க என்னை பத்தி? யார் கொடுத்த தைரியத்துல இப்படி ஒரு காரியத்தை பண்ணி வச்சிருக்க? என்ன செய்தாலும், இவனென்ன கேட்கவா போறானு நினைச்சிட்டியா?” என்று உறுமியவனை நிமிர்ந்தும் பார்க்காது தலைக்குனிந்திருந்தாள். 

“இந்த பைத்தியக்கார முடிவை எடுக்கதா இங்க வந்து உட்கார்ந்திருக்கியா? உனக்கு என்னதான்டி பிரச்சனை? யாருக்காக இதையெல்லா செய்துட்டிருக்க? அந்த வேதிக் பண்ண முட்டாள் தனத்துக்கு என்னை ஏன் தண்டிக்க நினைக்கிறடி? உன்னை காதலிச்சதை தவிர நான் எந்த தப்பும் செய்யலைனு, ஒரு முறை கூடவா தோனலை?“ அவளை பிடித்து உலுக்கியவனின் கேள்விகளில் மூடிய இமைகளிலிருந்து கண்ணீர் வழிய நின்றிருந்தாள் சரயூ.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.