(Reading time: 44 - 87 minutes)

“நானேதும் தப்பு பண்ணியிருந்தா மன்னிச்சிருடா” என்றவன் சட்டென அறையிலிருந்து வெளியேறிவிட்டான்.  மீண்டும் அவளை இழந்துவிடுவானோ என்ற எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக அவனை ஆக்கிரமித்தது.  அதனால் தான் அவளை வற்புறுத்தி பேச வைக்காது, அதே நேரத்தில் இவன் செயலேதும் அவளை பாதித்திருக்குமோ என்று தோன்ற மன்னிப்பை வேண்டினான்.      

அவன் காலடி சத்தத்தில் கண்விழித்தவளுக்கு அறை வாயிலைக் கடந்து கொண்டிருந்த ஜெய்யின் உருவம் கண்ணீரோடு கலந்து மங்கலாக தெரிய, தன்னால் தானே அவனுக்கு இத்தனை துயர்.  நான் கலங்கினால் துடிக்கிறான்.  நான் அவனை கொல்ல வந்தவளென்று தெரிந்தால் உடைந்துவிடுவான்.  கூடாது...ஒருபோதும் அவன் அறியக்கூடாது.  அதே சமயம், அதை மறைத்து, மறந்து, காதல் மனைவியாக இல்லையென்றாலும் மனைவிக்கான கடமைகளையாவது உறுத்தலின்றி செய்திடமுடியுமா? அவளால் அதுவும் முடியாதே! 

இவளுக்கான தூயக்காதல் வழியும் அவன் கண்களை பார்க்க முடியாது தானே, அவன் பார்வையைத் தவிர்த்துக் கொண்டிருக்கிறாள்.  நெஞ்சையருக்கும் இவள் செயலை தவிர்த்துவிட்டு அவனோடு பேசவும் முடியவில்லயே!

இவையேதும் அறியாது, செய்யாத பிழைக்கு மன்னிப்பு கேட்கிறானே இந்த பாவியிடம்.  இன்னும் எத்தனை காலத்திற்கு இந்த நரகம்? நான் செய்த பாவத்திற்கு இது போதாது.  ஆனால் அன்பை மட்டும் பொழியும் அவனுக்கெதற்கு நரகவாழ்க்கை?     

தன் பிறகான நாட்களில் மாற்றமேதும் இருக்கவில்லை.  ஜெய் வழக்கம் போல் மனைவியை கவனித்துக் கொண்டான்.  அவள் பேசாவிடினும் இவன் பேசுவதை நிறுத்தவுமில்லை.  அவளேன் தன்னிடம் பேசுவதில்லை என்றும் கேட்கவுமில்லை. 

ஒரு மாதத்திலிருந்து இரு மாதங்களாக நீண்டிருந்த மருத்துவமனை வாசத்திலிருந்து வீட்டிற்கு வந்துவிட்டாள்.  வந்தவளை வாசலிலேயே நிறுத்தி ஆலம் கலக்கி திருஷ்டி கழித்து உள்ளே அனுப்பினார் இவர்கள் வீட்டு சமையல்க்கார பாட்டி.

முள்ளாய் மனதை தைத்து கொண்டிருந்த வேதனையின் முன்னால் அவள் உயிர் பிரிந்திருந்தால் எத்தனை நிம்மதியை கொடுத்திருக்கும் என்று அடிக்கடி தோன்றிக் கொண்டிருந்தது.  அதுவும் இவளை பூப்போல் பாதுகாப்பதும், இவளுக்கு தேவையானவற்றை பார்த்து பார்த்து செய்வதுமாக தன்னை தாங்கும் கணவனின் செயல்களில் குற்றவுணர்வு பேயாட்டம் போட்டது. 

வீட்டிற்கு வந்து இருவாராங்கள் கழிந்திருந்த வேளையில், முன்பே யோசித்திருந்ததை செயல்படுத்த முடிவெடுத்திருந்தாள்.

இரண்டு மாதங்களாக தொழிலை தள்ளி நின்று கவனித்திருந்தாலும் இவனே செய்ய வேண்டியிருந்த வேலைகள் குவிந்து கிடந்தன.  மும்முரமாக லேப்டாப்பில் மூழ்கியிருந்தவனை கலைக்காது அவன் முடிக்கட்டும் என்று இவள் காத்திருக்க... நேரம் போனதே தவிர அவன் வேலையை முடிப்பதாக தெரியவில்லை.  இரவு மணி 11 தாண்டியிருக்க, அவன் அமர்ந்திருந்த ஸோஃபாவின் மறுமுனையில் சென்று உட்காரந்தாள்.

இவள் வரவையுணர்ந்து நிமிர்ந்தவன், “தூக்கம் வரலையாடா? ஏதாவது கதை படிக்கட்டுமா?” மருத்துவமனை வாசத்தின் போது அவளுக்கு பிடிக்கும் வகையான கதைகளை இவன் வாசிக்க அவள் கேட்டுக்கொண்டிருப்பாள்.  சில சமயங்களில் அவளையும் அறியாமல் கண்ணயர்ந்ததும் உண்டு.  இன்று நேரம் கழிந்து சரயூ உறங்காமலிருக்கவும் அதையே கேட்டிட....

வழக்கம் போல் தரையை பார்த்தபடி, “நா...ன் வீட்டுக்கு போயி.... மைதி பாப்பாவோட இருக்கலாம்னு....” தயங்கி தயங்கி சொல்ல....

இரண்டரை மாதங்களுக்கு பிறகு மனைவி பேசுகிறாள்.  அதுவும் இவனிடம் ஒன்று கேட்கையில் மறுக்கவா போகிறான்.  ஆனால் அவனை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் தன்னவளை மீண்டும் இழந்திடுவானோ என்ற பயம் புயலாகக் கிளம்பியது. 

அவனிடமிருந்து பதிலுமில்லாமல் போக, நிமிர்ந்து பார்த்தவளுக்கு புருவங்கள் முடிச்சிட ஜெய் யோசிப்பது தெரிந்தது.

நான் நினைத்திருப்பதை கண்டுபிடித்திருப்பானோ? அப்படியிருந்தால் என்ன சொல்வான்? வேண்டாமென மறுத்திடுவானோ என்ற தவிப்போடு காத்திருக்க...

சிறு புன்னகையோடு, “என்ன கேட்டுட்டுதா போகனும்னோ, இல்லை, நான் சொல்லிதா நீ போகனும்னோ இல்லடா.  உனக்கு போகனும்னு தோனினா போயிட்டு வா... ஆனா நீ மருந்தெல்லாம் சாப்பிடனுமே அதான் அத்தை மாமாட்ட என்ன சொல்றதுனு யோசிச்சிட்டிருந்தே.  சரி விடு...அதை நான் பார்த்துக்குறே!” என்று மனதிலிருந்த பயத்தை மறைத்து அவளைப் பற்றி மட்டுமே பேசினான்.

வந்த வேலை முடிந்ததும், அவசரமாக அங்கிருந்து நகர்ந்தவளை தடுத்தது ஜெய்யின், “சீக்கிரமா எங்கிட்ட வந்திரனும்!” மனதின் பயம் அப்படி சொல்ல வைத்ததோ அல்லது மனைவியின் திட்டம் அவனுக்கு எட்டியதோ... சொல்லியிருந்தான் அவ்வார்த்தைகளை.

அதிர்ந்து திரும்பி, அவனை சில நொடிகள் பார்த்தவள், பதிலேதும் சொல்லாது அவளறைக்குள் சென்று மறைந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.