(Reading time: 20 - 39 minutes)

       ந்தருக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன ஆயிற்று? இவ்வளவு நேரம் விடாமல் பேசிக் கொண்டிருந்த இனியாவிற்கு. “என்ன ஆயிற்று மேடம். இங்கு தான் இருக்கிறீர்களா” என்றான்.

       அதற்குள் தன்னை திடப்படுத்திக் கொண்ட இனியா, “இல்லை உங்கள் அண்ணன் தான் இங்கிருக்கிறாரா, அதானே பார்த்தேன். ஆன்ட்டி இருந்திருந்தால் உங்களை தனியே விட்டுவிட்டு சென்றிருக்க மாட்டாரே” என்று நினைத்தேன் என சமாளித்து ஏதோ கூறினாள்.

அவளை பார்த்து முறுவலித்தான் இளவரசன். அவளுக்கு மறுபடியும் அவன் கனவில் சிரித்தது நினைவு வந்தது. இப்படி தானே கனவிலும் சிரித்தான். இப்போது எதற்காக இப்படி சிரிக்கிறான் என நினைத்தாள்.

       அவள் கேட்காமலேயே இளவரசனே பதிலளித்தான். “சந்துரு நான் யாரும் எனக்கு பயிற்சி தராமலேயே அவர்களை பார்த்தே பேசக் கற்றுக் கொண்டு விடுவேன் என நினைக்கிறேன். தன் மனதில் இருப்பதை மறைப்பதற்கு எதிராளியை குற்றம் சொல்ல வேண்டும் என்பது முதல் பாடம் நினைவில் வைத்துக் கொள்” என கூறிவிட்டு திரும்ப அந்த வெற்றி புன்னகையை வெளியிட்டான்.

இனியாவிற்கு தான் எரிச்சலாக வந்தது. அதை இவன் மட்டும் இருந்தாலாவது காட்டலாம். கூட சந்தரும் அல்லவா இருக்கிறான். எனவே அதை வெளிக்காட்டவும் வழியில்லை.

எனவே சமாளித்து, “சந்தர் இவருக்கா பேச கற்றுக் கொடுக்க வேண்டுமென கேட்டாய். இவரை பார்த்தால் ஊருக்கே கற்றுக் கொடுப்பாரென்று தான் அப்பவும் இப்பவும் நினைத்தேன்” என கூறி அவனை பார்த்தாள்.

       சளைக்காமல் எதிர் பார்வையை பார்த்தான் இளவரசன். கடைசியில் இனியா தான் வேறு பக்கம் திரும்ப வேண்டியிருந்தது.

கடைசியில் இனியாவை காப்பாற்ற ரவி அங்கு வந்து சேர்ந்தான். இனியா தப்பித்தோமென நினைத்து ஒரு பெருமூச்சை விட்டாள். கண் தானாக இளவரசனை பார்த்தது. அவன் இவள் மனதை படித்தவன் போல ஒரு கள்ள சிரிப்பை வெளியிட்டான். இனியாவிற்கு தன்னை நினைத்தே கோவமாக வந்தது. சைக்காலஜி படித்தது தானா அவனா என்று யோசித்தாள். அவன் என்னவென்றால் இவள் நினைப்பதை எல்லாம் தெரிந்துக் கொண்டு பரிகாசிக்கிறான்.

       ரவி வந்த கடமைக்கு சந்தரை பரிசோதித்து விட்டு இனியாவிடம் “அந்த சிறுவன் கார்த்திக் உன்னையே கேட்டுக் கொண்டிருக்கிறான். மருந்து மாத்திரை எல்லாம் எடுத்துக் கொள்ள மாட்டேன் என ஒரே அடம் பிடிக்கிறான். நீ போய் கொஞ்சம் அவனிடம் பேசு இனியா” என கேட்டுக் கொண்டான்.

அதைக் கேட்டுக் கொண்டிருந்த இளவரசனோ, “எல்லா இடத்திலும் இனியா மேடத்தின் சேவை தேவையிருக்கிறது போல” என கேட்டான்.

அந்த மேடத்தில் அவன் அழுத்தம் கொடுத்ததாக இனியாவிற்கு தோன்றியது.

                ஆனால் ரவி அதை கவனிக்காமல், “ஆமாம் இளவரசன் நிஜமாகவே இனியாவின் தேவை இங்கு நிறைய உள்ளது. முன்பெல்லாம் சைக்காலஜிக்கென்று வரும் பேஷன்டின் தேவைக்கேற்ப சைக்காலஜி டாக்டரிடம் அப்பாய்ண்மன்ட் வாங்கி அந்த நேரத்தில் மட்டும் தான் சைக்காலஜி டாக்டரை வரவைப்போம். ஒரு சமயம் எங்களின் ரெகுலரான சைக்கலாஜி டாக்டர் வர இயலாமல் போனதால் இனியாவை எங்கள் டைரக்டர் வரவழைத்தார்.

       அப்போது தான் இனியா படிப்பை முடித்திருந்தார். எனக்கு அவர் கவுன்சிலிங் பற்றி சிறிதளவும் நம்பிக்கையே இல்லை. வந்திருந்த பேஷண்ட் எனக்கு தெரிந்தவர். பெரிய இயக்குநர். எனவே எனக்கு மனசே சரியில்லை. இந்த நேரம் பார்த்தா இந்த சைக்காலஜிஸ்ட் வர இயலாமல் போக வேண்டுமென புலம்பிக் கொண்டிருந்தேன். எனவே இனியா கவுன்சிலிங் செய்வதை நானும் கண்காணிப்பேனு அடம் பிடித்து நானும் கூட இருந்தேன்.

       அவரோ பெரிய இயக்குநர். எனக்கு உறவினர். ஆனால் எனக்கே அவர் கிட்ட பேச கொஞ்சம் பயமாக தான் இருக்கும். ஆனால் இனியா கவுன்சிலிங் கொடுத்த விதத்தை பார்த்து நான் அசந்தே போயிட்டேன். நம்ம இயக்குநரும் ரொம்ப பாராட்டினாரு. அவருக்கு ரொம்ப சந்தோஷமாயிடுச்சி. எனக்கு ரொம்ப நன்றி சொன்னாரு. இப்பவும் அடிக்கடி இனியா கிட்ட பேசுவாருனா பாத்துக்கோங்களேன்.

       கவுன்சிலிங் முடிஞ்சி நான் அவரை போய் வழி அனுப்பிட்டு வரலாம்னு இனியாவை கொஞ்சம் வெயிட் பண்ண சொல்லிட்டு போயிட்டேன். வர கொஞ்சம் நேரம் ஆயிடுச்சி. வந்து பார்த்தா இனியா அங்கே இல்லை.

எங்க போனாங்கனு தேடி போனா ஐசியு பக்கத்துல இருக்காங்க. அங்க ஒரு பையன் ஆக்சிடெண்ட்னு அட்மிட் பண்ணி இருக்காங்க. அவங்க பேரண்ட்ஸ் கொஞ்சம் கத்தி கூச்சல் போட்டுட்டு இருந்தாங்க. நம்ம இனியா அவங்க கிட்ட உங்க பையன் பிழைக்கனும்னு தான் இங்க சிகிச்சை பண்ணிக்கிட்டு இருக்காங்க. நீங்க இங்க அழுது கத்தி கூச்சல் போடறதால யாருக்கு என்ன லாபம். பாஸிடிவா நினைங்க. உங்க பையன் பிழைக்கனும்னு நீங்க ஆழமா நினைக்கிறதால, உங்க எண்ணத்துனால தான் உங்க பையன் பிழைப்பாங்கனு பேசின விதத்துல அவங்க அமைதியாகிட்டாங்க.

       அது மட்டும் இல்ல. அப்படியே அவங்க பையனுக்கு ஆபத்தில்லைனு தெரியற வரைக்கும் அவங்க கூடவே இருந்து அப்புறம் தான் கிளம்புனாங்கனு ரவி சொல்லிக் கொண்டிருக்கும் போதே இடையில் புகுந்த இனியா, போதும் ரவி எதுக்கு இப்ப என்ன பத்தி பேசி அவங்களை போரடிக்கிறீங்க என்று பேசி பேச்சை மாற்றினாள்.

       சந்தர், “இல்லையே மேடம், எங்களுக்கு போரடிக்கவே இல்லையே, உங்களோட பெருமையை கேட்கறதுக்கு எங்களுக்கு மிகவும் சந்தோஷமாக தானே இருந்தது” என்று கூறினான்.

இனியா இளவரசனை பார்த்தாள். இளவரசன் அமைதியாக புன்னகைத்துக் கொண்டிருந்தான். இனியாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

       அந்த நேரம் பார்த்து இனியாவை காப்பாற்ற லட்சுமி வந்து சேர்ந்தார். அவர் வந்தவுடன் பேச்சு மாறி போனது. இனியா சிறிது நேரம் அவர்களிடம் பேசி விட்டு சென்றாள்.

       னியா நேரே கார்த்திக் என்ற சிறுவன் இருக்கும் அறைக்கு சென்றாள். அந்த அறையின் வெளியில் ஒரு நிமிடம் நின்ற இனியா ஒரு நிமிடம் தன் மனதை தயார் செய்து கொண்டு அதன் பின்னே உள்ளே சென்றாள்.

       கார்த்திக்கிற்கு தொண்டையில் புற்று நோய். அதற்கு கீமோதெரபி சிகிச்சை செய்வார்கள். அதை பெரியவர்களாளே தாங்கி கொள்ள இயலாது. அந்த சிகிச்சைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டவர்களும் உண்டு. அதை இந்த சிறுவனை தாங்கி கொள்ள பக்குவபடுத்துவது மிக பெரிய விஷயம். என்றும் போல இந்த சிறுவனுக்கு ஏன் கடவுளே இவ்வளவு பெரிய நோயை தந்தாய் என்று வினா எழுப்பியவாறே அறையின் உள்ளே சென்றாள் இனியா.

       கார்த்திக்கின் முகம் சுறுங்கி கிடந்தது. இனியாவிற்கு அவனை பார்க்கவே மிகவும் கஷ்டமாகி போனது. அதை மறைத்து சிறித்தவாறே அவனை நோக்கி சென்றாள். வாங்க மேடம் என அவன் தாய் அவளை வரவேற்றாள். இனியா கார்த்திக்கிடம், “என்ன கார்த்திக் என்ன செய்து கொண்டிருக்கிறாய்” என வினவினாள்.

       கார்த்திக், “நான் என்ன செய்ய முடியும் அக்கா, வெளியே போய் விளையாட முடியுமா, எனக்கு பிடித்ததை செய்ய தான் முடியுமா? நான் இங்கே மட்டும் தானே இருக்க முடியும். இங்கே வேறு என்ன என்னால் செய்து விட முடியும். எப்போதும் இந்த அறையின் சுவர்களை பார்த்துக் கொண்டிருப்பதை தவிர” என்று கூறினான்.

       இனியாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சிகிச்சையின் கஷ்டம் அவள் அறிந்தது தான். ஆனால் கார்த்திக் எப்போதுமே கொஞ்சம் சுறுசுறுப்பானவன். எல்லோரையும் விட தன்னம்பிக்கையானவன். அதை வைத்து தான் அவனை இதுநாள் வரை தேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

 அவன் தாயை வெளியில் அழைத்துக் கொண்டு சென்று என்ன நடந்தது என்று வினவினாள். கார்த்திக் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அவன் வகுப்பில் அவனே முதல் மாணவனாக வருவான். படிப்பில் மட்டுமில்லாமல் பாட்டு, நடனம், ஒவியம் என எல்லாவற்றிலும் ஆர்வம் அதிகம். அனைத்திலும் அவனுக்கு பரிசு கிடைத்து விடும்.

அவனுடனே படிக்கும் இன்னொரு மாணவனும் அவன் தாயும் கார்த்திக்கை பார்க்க வந்திருந்தார்களாம். வந்திருந்தவர்கள் கார்த்திக்கிற்கு ஆறுதலாக பேசாமல் எல்லாவற்றிலும் முதல் இடம் பெறுகிறானே எப்படி தான் பெறுகிறான் என்று எண்ணியிருந்தேன். இப்படி இடையில் நிகழும் என்பதால் தான் கடவுள் எல்லா அதிர்ஷ்டத்தையும் இவனுக்கு அள்ளி கொடுத்திருந்தார் போலும் என்று கூறி விட்டு சென்றிருக்கிறார் அந்த வகுப்பு தோழனுடைய தாய்.

இனியாவிற்கு ஒரு தாயாக இருந்து இப்படியும் பேசுவார்களா என்றிருந்தது. ஒருவனின் துயரை துடைக்கவில்லை எனினும் பரவாயில்லை. அவனை இன்னும் பெரும் துயரில் ஆழ்த்த எப்படி இவர்களால் முடிகிறது. அதிலும் அவன் பதினொன்றே வயதான சிறுவன். அவனால் இதை தாங்கி கொள்ள முடியுமா, இதை கூட கருத்தில் கொள்ளாமல் எப்படி இவர்களால் இப்படி பேச முடிகிறது.

இனியா அவள் மனதை தயார் படுத்திக் கொண்டு மறுபடியும் அவன் அறைக்குள் நுழைந்தாள். திரும்பவும் அவனிடம் பேச்சு கொடுத்தாள்.

“ஏன் கார்த்திக் இவ்வாறு உள்ளாய். எனக்கு தெரிந்த கார்த்திக் மிகவும் சுறுசுறுப்பானவன். கலகலப்பானவன். இன்று அவனை காணவில்லையே” என்று.

கார்த்திக் ஒரு நிமிடம் அமைதி காத்து பின்பு பேச ஆரம்பித்தான். “நான் சுறுசுறுப்பானவனாக இருந்தேன் அக்கா. அப்போது எனக்கு செய்வதற்கு வேலைகள் இருந்து கொண்டே இருக்கும். வீட்டுப் பாடம் செய்து முடிப்பேன். செஸ் விளையாட செல்வேன். பாட்டு, நடனம் என எல்லா வகுப்புகளுக்கும் செல்வேன். எனக்கு அப்போது நேரமே இருக்காது. இப்போது நான் இந்த அறையை விட்டு வெளியேவே செல்வதில்லையே அக்கா. நான் சோம்பலாகி தான் போவேன். எப்படி சுறுசுறுப்பானவனாக இருப்பேன்.”

“அக்கா உங்களுக்கு தெரியுமா எனக்கு பாட்டு என்றால் எவ்வளவு பிடிக்கும் என்று, என்னால் இப்போது சரியாக பேச கூட இயலவில்லை அக்கா என்று கார்த்திக் அழுதே விட்டான்.”

 இனியாவின் கண்களிலும் தானாக கண்ணீர் வந்துவிட்டது. அவனை கட்டியணைத்து அழுது விட்டாள்.

சிறிது நேரத்தில் மீண்டு விட்ட இனியா அவனை சமாதானபடுத்த முயன்றாள். “இப்போது என்ன ஆகிவிட்டது கார்த்திக். நீ இன்னும் கொஞ்ச நாட்களில் திரும்ப பாட தான் போகிறாய். நீ மேடையில் பாடுவதை நான் பார்க்க தான் போகிறேன். ஆனால் அப்போது இந்த அக்காவை மறக்காமல் கூப்பிடுவாய் தானே கார்த்திக்” என அவனிடம் கேட்டாள்.

இதை கேட்டுக் கொண்டிருந்த கார்த்திக், “நிஜமாகவா அக்கா, அது மாதிரி நான் பாடும் நாள் வரும் தானே” என்று கேட்டான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.