(Reading time: 20 - 39 minutes)

னியா, “நிச்சயமாய் கார்த்திக்” என அவனுக்கு உறுதி அளித்தாள். “அது போன்று ஒரு நாள் நிச்சயமாய் வரும். அன்று நான் முதல் வரிசையில் அமர்ந்து உன் பாடலை ரசிக்க போகிறேன் பார்” என்று கூறினாள்.

“இப்போது உனக்கு என்ன பிரச்சினை. உனக்கு இங்கு போர் அடிக்கிறது அவ்வளவு தானே. அதற்கு நான் ஏதாவது ஒரு வழி செய்கிறேன் சரியா, ஆனால் நீ எங்களை முழுமையாக நம்ப வேண்டும். உன் அறிவை, திறமையை பார்த்து பொறாமை பட்டு பேசுபவர்களின் பேச்சை நீ கருத்தில் கொள்ளக் கூடாது. சரியா” எனக் கேட்டாள்.

கார்த்திக்கும் சரி அக்கா என அவளுக்கு வாக்களித்தான்.

“சரி நான் போய் விட்டு அப்புறம் வருகிறேன், இப்போது நீ ஒழுங்காக உன் உணவையும் மருந்துகளையும் அடம்பிடிக்காமல் உண்ண வேண்டும்” என கூறி விட்டு சென்றாள்.

வெளியே சென்ற இனியாவிற்கு மனதே சரியில்லை. வெளியே போடபட்டிருந்த நாற்காலியில் அப்படியே அமர்ந்து விட்டாள். அவள் மனதில் கார்த்திக்கிற்கு எப்படியாவது நன்றாக ஆகி விட வேண்டும் கடவுளே என்ற பிரார்த்தனை மட்டுமே இருந்தது.

அந்த நேரத்தில் சீப் டாக்டரிடம் பேசிக் கொண்டே வந்த இளவரசன் இனியாவை பார்த்து விட்டு அப்படியே நின்று விட்டான். இளவரசனோடு வந்த டாக்டர் ராதா கிருஷ்ணணும் இனியாவை கவனித்து விட்டார்.

இனியாவிடம் திரும்பிய ராதா கிருஷ்ணன் “என்ன இனியா இங்கு ஏன் அமர்ந்திருக்கிறாய்?” என வினவினார்.

மெதுவாக இனியா எழுந்து நின்றாள்.

அதற்குள் கார்த்திக்கின் அறையை கவனித்த ராதா கிருஷ்ணன், “கார்த்திக்கின் அறையில் இருந்து வருகிறாயா இனியா?” என கேட்டார்.

இனியா ஆம் என தலையசைத்தாள். இளவரசனுக்கோ அவளின் கவலை தோய்ந்த முகத்தை பார்த்து மனதுக்குள் மிகவும் வருத்தமாக இருந்தது.

அதற்குள் ராதாகிருஷ்ணனே, “நீ மிகவும் உன்னை வருத்திக் கொள்கிறாய் என்று நினைக்கிறேன் இனியா, நம் புரொபஷனில் இது போன்ற கேஸ்கள் வருவது சகஜம். எல்லாவற்றிற்கும் நீ உன்னை வருத்திக் கொள்வதானால், உன்னால் உன் வாழ்க்கையை வாழ இயலாது. நான் உன்னை என் மகளாக பாவித்து உனக்கு அறிவுரை கூறுகிறேன்” என கூறினார்.

இனியா, “இல்லை டாக்டர். கார்த்திக் மிகவும் சிறியவன். பெரியவர்களாலேயே அந்த சிகிச்சையை தாங்க இயலாது. அவனால் எப்படி அதை தாங்க இயலும். அவனுக்கு பாட்டு என்றால் மிகவும் பிடிக்குமாம். இப்போது அவன் பேச கூட அவனால் முடிவதில்லை, சில நேரம் அவன் பேசுவதே புரிவதில்லை. அவனால் இந்த மாற்றங்களை தாங்க முடியவில்லை. பெரியவர்கள் என்றால் அவர்களுக்கு இதை புரிய வைக்கலாம். அந்த சிறுவனிடம் போய் என்னவென்று சொல்வது” என கேட்டாள். அவள் கண்ணில் நீர் துளிர்த்தது.

தை பார்த்துக் கொண்டிருந்த இளவரசனால் தாங்க இயலவில்லை. அவள் கண்ணீரை துடைக்க வேண்டம் போல் அவன் கரங்கள் துடித்தது.

அவனுக்கு அவனையே புரியவில்லை. இது என்ன மாதிரியான உணர்வு. இவளை நேற்று தான் பார்த்தோம். பார்த்த முதல் சந்திப்பும் அவ்வளவு இனிமையான ஒன்றில்லை. அதன் பிறகும் அவளிடம் சண்டை, வாக்குவாதம் தான். இன்று ஏன் நான் இவ்வாறு உணர்கிறேன் என்று அவன் சுய அலசலில் ஈடுபட்டிருந்தான்.

அவள் முகத்தில் கண்ணீரை பார்த்த ராதாகிருஷ்ணணாலும் அதை தாங்க முடியவில்லை. “என்ன இனியா நான் உன்னை என்னவோ என்று எண்ணியிருந்தேன். மிகப் பெரிய பிரபலங்களுக்கு எல்லாம் அசராமல் கவுன்சிலிங் தருகிறாய். இந்த விஷயத்தில் இவ்வளவு வருந்துகிறாயே” என்று கூறினார்.

“கார்த்திக்கை குணபடுத்துவதற்கு நாங்களும் எங்களால் இயன்றதை செய்து கொண்டு தான் இருக்கிறோம். அவர்கள் வசதியானவர்கள். அதனால் பண பிரச்சனையும் இல்லை. நீ அவன் மனதை மட்டும் கொஞ்சம் தைரியப்படுத்தி வை. அதில் உன் மனதை வீணாக கலவரப்படுத்திக் கொண்டிருக்காதே சரியா?” என கூறிவிட்டு சென்றார்.

இனியா சரி என தலையசைத்து விட்டு அப்போது தான் அங்கிருந்த இளவரசனை பார்த்தாள்.

ராதாகிருஷ்ணன் சென்று விட இளவரசன் மட்டும் நின்று கொண்டிருந்தான். இனியாவிற்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை.

இளவரசனே இனியாவிடம் அந்த சிறுவனுக்கு என்ன வியாதி என விசாரித்தான்.

இனியா, “அவனுக்கு தொண்டையில் புற்று நோய்” என கூறினாள்.

இளவரசனுக்கும் அந்த சிறுவனை நினைத்து கஷ்டமாக இருந்தது. இந்த சிறு வயதில் அவனுக்கு இப்படி ஒரு நோய் வந்திருக்க கூடாது என எண்ணினான்.

இனியாவின் முகம் இன்னமும் தெளியவில்லை. கவலையின் சுவடுகள் அவள் முகத்தில் தெரிந்து கொண்டே இருந்தது. நேற்றைய அவளின் முகத்தை எண்ணிப் பார்த்தான் இளவரசன்.

அவன் அன்னையிடம் பேசும் போது ஒரு அமைதி, அடக்கம், பொறுப்பு அவள் முகத்தில் தென்படும். அவன் தம்பியிடம் பேசும் போது அவள் முகத்தில் ஒரு குரும்பு தென்படும். ஏதாவது பேசி அவனை நார்மலாக்க வேண்டும் என்பது போல் பேசுவாள்.

நேற்று அவன் அவள் யாரென்று தெரியாமல் கையை பிடித்து இழுத்துக் கொண்டு போன போது அவள் முகத்தில் கோபத்தின் ரேகைகள் இருந்தது. அப்போதும் அவள் அழகாக தான் இருந்தாள் என எண்ணிக் கொண்டான்.

இன்று காலையில் இருந்து அவள் தன்னை பார்க்கும் போது அவள் முகத்தில் என்ன இருந்தது என இளவரசன் யோசித்தான். ஆனால் அவனால் குறிப்பிட்டு ஏதும் கூற முடியவில்லை.

அவன் எண்ண அலையில் இருந்து மீண்டு இனியாவை பார்த்தான். அவள் என்ன செய்வதென்று புரியாதவாறு நின்றிருந்தாள்.

இளவரசன் இனியாவிடம், “அந்த சிறுவனுக்கு சரியாகிவிடும் இனியா, நீ அந்த ஆக்ஸிடெண்ட் ஆனவர்களுக்கு கூறியது தான். நம் எண்ண அலைகளுக்கு ஒரு சக்தி இருக்கிறது. அவனுக்கு நன்றாக ஆகி விடும் என நீ பலமாக நம்பு, மற்றவர்களுக்கும் நம்பிக்கை கொடு, உன் எண்ணத்தினால் அவன் பிழைத்து வருவான்”.

என் தந்தை ஒரு விபத்தில் இறந்து விட்டார். நான் அப்போது தான் கல்லூரி இறுதியாண்டு படித்திருந்தேன். அதுவரையிலும் எனக்கு அப்பாவின் தொழில்களை பற்றி எதுவும் தெரியாது. திடீரென்று அப்பா இறந்து விட எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அம்மாவிற்கு வீடும் நாங்களும் தான் உலகம். அப்பாவின் இழப்பையே அவர்களால் தாங்கி கொள்ள முடியவில்லை. தம்பியும் மிக சிறியவன். என்னால் இவர்களிடம் எதையும் கூறவும் முடியவில்லை.

அப்போது எனக்கு ஆறுதல் சொல்வதற்கு கூட ஆளில்லை. மிக நெருங்கியவர்களும், நம்பிக்கையானவர்களுமே அப்போது துரோகிகளாகி விட்டனர். அப்பாவின் மரணத்தை பயன்படுத்தி எங்கள் தொழிலை வீழ்த்த எண்ணினர். எனக்கு உதவுகிறேன் பேர்வழி என்று என்னை எல்லா நிறுவனங்களையும் விற்க தூண்டினர்.

சிலர் என் தந்தை பிஸினஸை விரிவு படுத்த அவர்களிடம் கடன் பெற்றுள்ளதாக வந்து நிற்கின்றனர். அவர்களின் உண்மையான முகத்தை அறிந்து அவற்றிலிருந்து எல்லாம் சமாளித்து வருவதற்குள் நான் ஒரு வழியாகி விட்டேன் என்று தான் சொல்ல வேண்டும்.

அப்போதெல்லாம் நான் ஒன்று தான் நினைத்துக் கொள்வேன். நானும் என் தம்பியும் பிறக்கும் போதே பணக்காரர்களாக தான் பிறந்தோம். ஆனால் என் தந்தை அவ்வாறில்லை. அவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவர். அவரின் கஷ்டங்களை எங்களுக்கு சொல்லியே என் தந்தை எங்களை வளர்த்திருந்தார். என் தந்தை அந்த ஏழ்மையான நிலையிலிருந்து இந்த அளவுக்கு வந்திருக்கிறாரெனில் அவருக்கு எவ்வளவு மனதிடம் இருந்திருக்கும். 

அதே மனதிடம் தான் என்னை காப்பாற்றும் என்று நான் முழுவதுமாக நம்பினேன். நான் இதிலிருந்து மீண்டு வருவேன் என முழுவதுமாக நம்பினேன். அந்த என் எண்ணமே என்னை அந்த பிரச்சனையிலிருந்து மீட்டுக் கொண்டு வந்தது மட்டுமில்லாமல் அதை விட பல மடங்காக இப்போது என்னை உயர்த்தி இருக்கிறது.

அது போல அந்த சிறுவன் குணமாவான் என நீயும் நம்பு. உன் நம்பிக்கை வீண் போகாது தானே என அவளுக்கு ஆறுதல் கூறினான்.

. “இனியும் இவ்வாறு கலங்கி நிற்க மாட்டாய் தானே” என அவளிடம் கேட்டான்.

இனியாவிற்கு மிகவும் ஆச்சரியாமாகி போனது. இவன் இந்த அளவுக்கு பேசுவானா? இதற்கு முன்பு வரை அவன் மேல் ஏதோ ஒரு கோபம் அவன் மேல் இருந்து கொண்டே இருந்தது. ஆனால் இப்போது அவன் மேல் ஏதோ ஒரு மதிப்பு உருவாகி இருந்தது. அதுவும் அவன் கூறிய ஆறுதல் மனதிற்கு மிகவும் தெம்பாக இருந்தது.

இதற்கு முன்பு வரை இருந்த துன்பம் மறைந்து மிகவும் சந்தோஷமாக இருந்தது. அவன் கூறியது போல கார்த்திக்கிற்கு முழுதும் குணமாகி விடும் என்று இப்போது தைரியம் வந்தது.

அவனை பார்த்து “ஆம் என்பது போல தலையசைத்து” அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். இளவரசனும் இனியாவின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தான். 

தொடரும்

En Iniyavale - 02

En Iniyavale - 04

{kunena_discuss:679}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.