(Reading time: 44 - 87 minutes)

அவள் “ஆமாம்” என்பது போல தலையாட்டினாள்.

“அவளுக்கு அவன் மேல இண்டரஸ்ட் இருக்கா?” என கார்த்திக் கேட்க,

“அய்யோ...இவவாட்டுக்கு ஏதோ திரிச்சி விட்டுருக்கா. அதைச் சொன்னா அவ விடமாட்டா..சொல்லாட்டி இவன் விடமாட்டான். இதுக்கு மே பி ன்னு சொல்ல வேண்டியது தான்” என்று எண்ணிக்கொண்டே தோளை குலுக்கினாள்.

“முக்கியமான கேள்விக்கெல்லாம்  மே பி சொல்லி சேப் சைட்ல லேன்ட் ஆகிடலாம்னு பாக்குறீங்களா? என்னை பத்தி தெரிஞ்சுமா இப்படி சொல்றீங்க” என மிரட்டல் விட, விட்டால் அழுது விடுவது போல  சக்தி  பார்க்க, “நமக்கு அவ கூட தான் பிரச்சனை, ஷக்தி என்ன செய்வாங்க.” என்று அவளை மேலும் நோண்டாமல் விட்டு விட முடிவு செய்தான்.

“சாரி, ஷக்தி. நீங்க ரெம்ப நல்லவங்க தான். ஆனா, உங்க வாழ்க்கைல செஞ்ச ஒரே தப்பு அந்த பேய்க்கு பிரண்ட ஆனது தான். இனி  நீங்க எதுவும் சொல்ல வேண்டாம். நானே பாத்துக்கிறேன். உங்க எம். எஸ். எப்படி இருக்காரு?” என சந்தியா பற்றி அவனது விசாரணைக்கு முற்றுப் புள்ளி வைத்தான்.

“கார்த்திக், ஒன்னு நீங்க நல்லா புரிஞ்சிக்கணும். ஜந்து எனக்கு பிரண்ட்டா கிடைச்சது நான் செய்த புண்ணியம். என்ன கிண்டல் கேலி பண்ணாலும் எங்க ப்ரிண்ட்ஷிப்பை என்னால விட்டுக் கொடுக்க முடியாது. எனக்கு எம். எஸ் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு ஜந்துவும் முக்கியம். அதே மாதிரி ஜந்துவும் எனக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை  உங்களுக்கும் கொடுக்கறா” என்றாள் சக்தி.

அதை கேட்டவனுக்கு உள்ளுக்குள் ஒரு இனம்புரியாத  சந்தோஷம் தான் என்றாலும்  “வாட் டு யு மீன்? ”, என சக்தியின் வாயால் தெளிவு படுத்த விரும்பினான்.

“ஜந்து உங்களை ரெம்ப இன்டிமேட் பிரண்டா நினைக்கிறா.” என்றாள் சக்தி.

“எந்த அளவுக்கு நெருக்கமா நினைக்கிறா? அந்த வசூல் ராஜாவை விடவா?”

என கேட்டான் கார்த்திக்.

“ம்..ஜந்து உங்களைப் பத்தி  சொன்னது உண்மை தான். காரியவாதி கார்த்திக். எதுகை மோனையோட பொருத்தமா இருக்கு. உங்க காரியத்தில குறியா இருக்கீங்க. இந்த கேள்வியை அவ கிட்டவே கேளுங்க. “ என்றாள் சக்தி.

“ஆளுக்கு ஏத்தமாதிரி, நேரத்துக்கு தகுந்த மாதிரி மாத்தி மாத்தி பேசுற சந்தர்ப்பவாதி சந்தியா. இதுவும் கூட  எதுகை மோனையோட பெர்பெக்ட்டா இருக்குதுல. அவ அப்படி நடந்துக்கிறதுனால தான் உங்ககிட்ட க்ராஸ் வெரிபை பண்ண வேண்டியிருக்கு “ என்றான் கார்த்திக்.

சக்தி அதற்கு, “உங்க கேள்விக்கு எனக்கு சத்தியமா பதில் தெரியாது. எனக்கு தெரிஞ்சதை நான் சொல்லிட்டேன். நான் போகலாமா?” என அவனிடமிருந்து விடைபெற வழி பார்த்தாள். சம்மதமாய் தலையசைத்து விட்டு வழி விட்டவன், அவள் அவனை கடந்ததும் “சக்தி, ஐ ரெஸ்பெக்ட் யுவர் பிரண்ட்ஷிப்” என்றான். அவனை திரும்பி ஏறிட்ட சக்தி, “ஜந்துவும் உங்க பிரண்ட்ஷிபை ரொம்பவும் மதிக்கிறா கார்த்திக். எந்த ரிலேஷன்ஷிப்லயும் நம்பிக்கை முக்கியம்.” என்ற சொல்லிவிட்டு அவனது பதிலை எதிர்பார்க்காமல் விறு விறுவென நகர்ந்து சென்றாள்.

அவள் சொன்னது அவன் மனதிற்கு எட்டினாலும், அவளை பற்றி தவறாக கணித்து வைத்திருந்த மூளை  சந்தியாவை நம்பாதே என  மனதை கடிந்து கொண்டது.

 

டைப் பயிற்சி முடிந்து வீட்டிற்கு திரும்பிய கார்த்திக் குளித்து கிளம்பி வர, அவனிடம் ஓடி வந்த நித்தி,  “காதி கிம்மி  ஸ்மைலி எக் “ என கேட்க, அவளை  தூக்கி கொண்ட கார்த்திக்“ஸ்மைலி பேஸ் காமி. உனக்கு ஸ்மைலி எக் தாறேன்.” என்றான். உடனே ஆர்வமாக தலையாட்டிக் கொண்டே விழியை உருட்டிய  நித்திஷா சிரிப்பது போல செய்து காண்பிக்க “க்யூட்டி” என அவள் கன்னத்தை கிள்ளி விட்டு, மறு கன்னத்தில் லேசாக கடித்து வைத்தான். “ஸ்....மாம்....காதி கடிக்குது” என சிணுங்கிக் கொண்டே அவனை விட்டு இறங்கி மீராவை தேடி ஓடினாள்  நித்திஷா.  

மது அவன் முதுகில் ஓங்கி ஒரு அடி வைத்தாள். அவனோ சிறிதும் சலனமின்றி அவளை பார்க்க, “எருமை மாட்டில் மழை பெய்தது நிக்கிற.… கன்னத்தை கடிக்கிற பழக்கம் எப்போ தான் போகுமோ? இப்படி தான் நீ அன்னைக்கு சந்தியாவை அறைந்த தடத்தை பாத்து கடிச்சு தான் வச்சிட்டியோன்னு  தப்பா நினச்சிட்டேன்.” என்று சொல்லிக் கொண்டே  மறுபடியும் மொத்தினாள். அவனோ தூசி தட்டுவது போல தட்டிவிட்டு, “ மொட்டை, இப்படி எல்லாம் யோசிக்க உன்னால மட்டும் தான் முடியும். அறிவு வளராட்டினாலும் உருவத்தில வளந்துட்டியே. அதுனால  கடி வாங்குறதுல இருந்து கிராஜுவேட் ஆகிட்ட. இப்போ நித்தி, நிக்கியை தவிர யாருக்கும் அந்த பாக்கியம் கிடைக்காது.“ என்று பதிலளித்து விட்டு “நித்தி கமான் …” என்று  குரலெழுப்ப கொண்டே அவளை தேட, நித்திஷாவை தூக்கிக் கொண்டு கார்த்திக் முன் எதிர்பட்ட சௌபர்ணிகா, “நித்தி கன்னம் என்னம்மா  சிவந்திருக்கு பாரு? குழந்தையை கொஞ்சுற லட்சணமா இது?” என அவனை அதட்டினார்.

“மம்மி ஒரு நிமிஷம்” என்று விட்டு, நித்திஷாவை பார்த்து, “என்கிட்ட வர்றவங்களுக்கு  ஸ்மைலி எக். யாரு வர்றா? நித்தியா? நிக்கியா?” என அறிவிப்பு வழங்க, “சௌபர்ணிகாவிடமிருந்து “மீ" என்று சொல்லிக்கொண்டே பாய்ந்த நித்திஷாவை  வாங்கிக் கொண்ட   கார்த்திக், அவரிடம் “மம்மி, நீங்க வேற எந்த விஷயத்திலனாலும் கண்டிங்க. நான்  கேட்டுக்குறேன். எனக்கும்  என் மகள்களுக்கும் இருக்கும் கொடுக்கல் வாங்கலை கண்டுக்காதீங்க ப்ளீஸ்” என சொல்ல,  சற்று தள்ளி தினசரி நாளிதழை படித்துக் கொண்டிருந்த  சூர்யா, தனது அம்மாவை நோக்கி  “அவனை பத்தி தெரியும் தானே மம்மி. சின்ன வயசுல மது கன்னத்தை கடிச்சு வச்சு எத்தனை அடி உங்ககிட்ட வாங்கியிருக்கான். ஒரு சிலருக்கு கொழு கொழுன்னு சின்ன பசங்க கன்னத்த பாத்தா, இந்த மாதிரி தன்னை அறியாம டேம்டேஷன் வரும்.. அவன் லேசா கடிச்சாலும், பசங்க கன்னம் சிவந்து போயிடுது. உங்க பேத்திங்களுக்கு மட்டும் நிஜமாவே வலிச்சது  இந்த வீடையே  இரண்டாக்கிடுவாங்க.” என்று கார்த்திக்கிற்கு பரிந்து பேசினான்.

“ம்…சொல்றதை சொல்லிட்டேன். இனி பெத்தவங்க பாடு” என்று பொதுவாக சொல்லி விட்டு சென்றார்  சௌபர்ணிகா.

காலை சிற்றுண்டியை  அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்ண, கார்த்திக் குழந்தைகளுக்கு வட்டமான  வெள்ளை கருவில்  இரு மஞ்சள் கருக்களை கண்கள் போல வைத்து, உலர் திராட்சை பழங்களை முட்டையின் சிரிக்கும் வாயாய்  அழகாக அலங்கரித்துக்  கொடுத்தான். அரைவேக்காடு  முட்டை சிரித்த படி வர, அதை கண்டு குஷியில் நித்திஷாவும், நிக்கிதாவும் குதித்தனர்.   “தேங்க்ஸ் காதி” இருவரும் ஒன்றாக சொன்னார்கள். “காதி சித்தப்பா” என்று அவர்கள் சொல்லவதை திருத்தினார் சௌபர்ணிகா.

பின் அவர், குழந்தைகளிடம்  தமிழில் பேசினால் தான் அவர்கள் தாய் மொழியை பேசப் பழகுவார்கள், இல்லையெனில் அவர்கள் வாரம் ஒரு முறை தமிழ் வகுப்பிற்கு சென்று   படித்தாலும் உபயோகம் இல்லாமல் போய் விடும் என்றார். அப்பொழுது சூர்யா, “நாம சொல்லிக் கொடுத்து பேசுறதை விட, அவங்க வயசு பசங்க கூட சேர்ந்து விளையாடுறப்போ நிறைய கத்துக்குவாங்க.” என்றான்.

“வீட்டில டாக்டர் இருந்தா இது ஒரு வசதி….ப்ரீ அட்வைஸ் கிடைக்கும்.“ என்றாள் மது.

“நான் முதல்ல அப்பா மது. அப்புறம் தான் டாக்டர். “ என்றான்  சூர்யா பொறுப்பாக.

“டாக்டர் சூப்பரா பேசுவாரு. ஆனா பொறுப்பு பேச்சுல மட்டும் தான் இருக்கும். நான் தான் பசங்களை இருபத்தி நாளு மணி நேரமும் பாக்கணும். இவருக்கு டாக்டர் வேலை மட்டும் தான். எனக்கு டிரைவர் வேலை, சமையல்காரி வேலை, தோட்டகாரி வேலை, பேபி சிட்டர் வேலை, வீடு மெயின்டநன்ஸ் வேலைன்னு இந்த லிஸ்ட் இன்னும் நீண்டுகிட்டே போகும்” என்று அலுத்துக் கொண்டாள்  மீரா.

சூர்யா மீராவிடம் திரும்பியவன், “இன்னும் ரெண்டு வருஷம் பொறுத்துக்கோடா. இந்தியாவுக்கு வந்துடலாம். இங்க  எல்லாத்துக்கும் ஆளு போட்டுருவோம். காலையில பிள்ளைங்களை ஸ்கூல்லுக்கு அனுப்பி விட்டு ஊஞ்சல்ல ஏறி உட்காந்தேன்னா அவங்க திரும்பி வர்ற வரைக்கும் ஆடிகிட்டே இருக்கலாம். ஓகே?” என அவன் சொன்னது விளையாட்டிற்கா இல்லை உண்மையாகவா என அறிந்து கொள்ள முடியாத வண்ணம் சொன்னான்  சூர்யா. இருந்தாலும் மீரா அவனை முறைத்தாள்.

 “எனக்கு என்னமோ இதுல உள்குத்து இருக்கிற மாறி தெரியுதும்மா  மீரா” என்று இன்னும் அவளை ஏற்றிவிட்டார்  சதாசிவம்.  பேச்சு திசை மாற, சௌபர்ணிகா “எதுத்த வீட்டு கீர்த்தி பேரன் இவங்க வயசு தான்.” என பேத்திகளை கண்களால் குறிப்பு காட்டியவர், “நம்ம காதி கூட அந்த சின்ன பையன்  நல்லா வாயாடுவான்.  அவன்  கூட விளையாடுவாங்களா?” என கேட்டார். அதற்கு,  “நோ…நோ...யாழு இஸ் மை பிரண்ட். ஐ வான்ட் டு ப்ளே ஒன்லி வித் ஹெர்“ என்றாள் நிக்கிதா. உடனே, “கேன் யாழு வருமா  ஸ்லீப் ஓவர்க்கு” என நித்திஷா மழலையாய் மீராவிடம் கேட்க, அவள் பேசுவது புரியாமல் சௌபர்ணிகா முழிக்க, “அவ கூட தூங்குறதுக்காக, யாழினி..அதான் சந்தியாவோட அக்கா பொண்ணு, நம்ம வீட்டுக்கு வருவாளான்னு கேக்குறா  மம்மி” என கார்த்திக் விளக்கம் கொடுத்தான்.

“மொளச்சு மூணு இலை விடலை. அதுக்குள்ள உனக்கு ஸ்லீப் ஓவர் கேக்குதா?” என மீரா அவளை போலி மிரட்டல் விட, “மது நீ இன்னைக்கு சந்தியாவை பாக்கப் போறப்போ பசங்களை கூட்டிகிட்டு போ.” என்றான் கார்த்திக். “இன்னைக்குமா அங்க போக?” என மது கேட்க, “நம்ம சிக்மா ப்ராஜெக்ட் மஹாவால ரிக்குக்கு டெய்லி ஸ்டேன்ட் அப் கால் பண்ண கஷ்டமா இருக்குன்னு சொன்னாங்க. அதான் உன்னையும் சந்தியாவையும் சேர்ந்து அட்டென்ட் பண்ண சொல்லலாம்ன்னு நினைச்சேன். உனக்கு அங்க போக இஷ்டமில்லையா?”  என கேட்டான்  கார்த்திக்.

“ஹையோ..நான் வேண்டான்னு சொல்லுவேனா? விட்டா அங்கயே ஸ்லீப் ஓவர்  போட்ருவேன். வெரி நைஸ் பாமிலி. என்ன  அவங்க அப்பா மட்டும் கொஞ்சம் டெரரா இருக்கார்.” என்றவள் பூமாவிற்கு பலகாரங்களை அனுப்புவது பற்றி பேசியது  நினைவு வர அதை அவனிடம் சொன்னாள் மது.

“யாரை கேட்டு கமிட் பண்ண? பிஸ்னஸ் டிராவல் பண்றபோ ஸ்நாக்ஸ் தூக்கி சுமக்க சொல்றியா? நான் எப்பவும் கைல ஒரு பேக் மட்டும் தான் கொண்டு போவேன். இப்படி சாப்பாடு ஐட்டம்ன்னா செக் இன் பண்ண வேண்டியிருக்கும். சில சமயம் கஸ்டம்ஸ் செக் அப்படி இப்படின்னு இழுத்தடிச்சா தேவையில்லாத தலைவலி. அதோட நான் போய் இறங்குறது பாஸ்டன். அங்க சூர்யா வீட்டில என்னோட காரை எடுத்துட்டு,  நியூ யார்க் சிட்டி போய் ஹோட்டல்ல ஸ்டே பண்ணனும். இப்படி நான் போற இடத்துகெல்லாம் அந்த பேகேஜயும் தூக்கிட்டு அழைய வேண்டியிருக்கும். அது மட்டுமில்ல அவங்கிட்ட அதை கொடுக்குறதுக்கு வேற அழையணும். வேஸ்ட் ஆப் டைம்.  என்னால முடியாது.” என மறுத்தான்.

மது “ஏன் காதி செல்பிஷ்ஷா இருக்கிற. சும்மா கைய வீசிட்டு போறதுக்கு ஒரு பேகேஜ் சேத்து எடுத்துட்டு போகலாம்ல? பாஸ்டன்ல நாள் முழுதும் ஸ்ர்பிங்க் பண்றேன்னுட்டு  பீச்க்கு போய், தவளை மாதிரி தண்ணிக்குள்ளே தான் கிடப்ப. அதுக்கெல்லாம் உனக்கு நேரம் இருக்கும். ஒரு ப்ரக்னென்ட் லேடிக்கு ஹெல்ப் பண்ணனும்கிற  கர்டசி இல்லையா உனக்கு?” என மது  படபடப்பாக வாதாடி முடித்ததும், அனைவரும் வாய் பிளந்த படி கண்ணசைக்காமல் அவளையே பார்த்தபடி இருக்க, அந்த அதிர்ச்சியில் இருந்து முதலில் மீண்ட கார்த்திக் “ம்... உன்னை நல்லா ட்ரைன் பண்ணி வச்சிருக்கா” என்றான் குரலில் அதிர்ச்சி தொனிக்க.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.