(Reading time: 44 - 87 minutes)

அதற்கு, சதாசிவம் சிரித்த படி, “வெல் டன் மது குட்டி. சும்மா கண்ணை மூடிட்டு காதிக்கு சப்போர்ட் பண்றதை விட்டுட்டு இப்போ தான் நீ சுயமா  யோசிச்சு பேசுற” என்றார்.

“ஹூம் ....சுயமாவா? அவ கீ கொடுத்து இவளை பேச வைக்கிறா. மிடில் கிளாஸ் புத்தியே இது தான். நிற்க இடம் கொடுத்தா படுக்க இடம் கேட்பாங்க” என் வெறுப்பை உமிழ்ந்தான்  கார்த்திக்.

அவன் பேச்சு சௌபர்ணிகாவிற்கு கோபமுண்டாக்க, “காதி, இது என்ன பேச்சு?” ஒரு வார்த்தை தான் கேட்டார். அவர் சொல்லிலும் கண்களிலும் அனல் வீச, பாதி சாப்பாட்டில் எழுந்த   கார்த்திக், சமையலறைக்குள் நுழைந்து, அந்த கோபத்திலும் கருமமே கண்ணாக கையோடு தன்  தட்டையும்  கழுவி வைத்து விட்டு, விறு விறுவென படிக்கட்டுகளில் ஏறினான்.

அவன்  சென்ற பின் ஓரிரு வாய் சாப்பிட்ட மது, அதற்கு மேலும் உணவு உள்ளே போக மறுத்ததால் கார்த்திக் செய்ததையே பின்பற்ற, சாப்பிடாமல் அங்கு நடப்பதை கவலையாக பார்த்துக் கொண்டிருந்தார் சௌபர்ணிகா. சதாசிவம் அவரை  கவனித்தவராய், “அடுத்தது நீயா? ஒரு அம்மாவா அவன் வாய் நீளுறப்ப சரியா கண்டிச்ச. இனி அவங்க ப்ரச்சனைய அவங்களே  பாத்துக்குவாங்க. அவங்களுக்காக நீ சாப்பிடாம கிடக்காத” என்று மனைவிக்கு அறிவுறுத்தினார்.

“ஒரு காலத்தில நான் ஸ்டேட்ஸ் பாத்து பழகுவேன். அது தான் அவன் மனசுல இந்த அளவுக்கு பதிஞ்சிருச்சோ? “ என்றார் முகத்தில கவலை ரேகை படிந்த படி. “ம்...எவ்வளவு காசு கொடுத்தாலும் நிம்மதியை விலைக்கு வாங்க முடியாதுன்னு எனக்கு ஒரு வியாதியை குடுத்த பிறகு தான உனக்கு புரிஞ்சது. அதே மாதிரி அவனும் ஒரு நாள் புரிஞ்சிக்குவான். தோளுக்கு மேல வளந்த பிள்ளைகிட்ட நாம சொல்ல மட்டும் தான் முடியும். எது நடக்குமோ அது நன்றாகவே நடக்கும்ன்னு நினைச்சிகிட்டு போய்கிட்டே இருக்கணும். “ என்றார் சதாசிவம்.

அவர்கள் பேசுவதை கவனித்த மீரா, “அத்தை, நீங்க வருத்தப் படாதீங்க. உங்க வளர்ப்பில ஒரு குறையும் இல்ல. சூர்யா என்ன அப்படியா பேசிக்கிட்டு இருக்காரு?. காதியும் அந்த மாதிரி நினைச்சிருந்தா  மதுவை அங்க அனுப்பி இருக்கவே மாட்டான். அவனுக்கு சந்தியா எல்லா விஷயத்திலயும் அவனை விட கெட்டிக்காரியா இருக்கிறது பிடிக்கலை. அதனால அவளை மட்டம் தட்டுறதுக்காக சொல்றான்.” என்றாள் மீரா.

“எப்படி அடிக்கிறா பாரு என் மருமகள். எனக்கு பிள்ளைங்க எப்படியோ, மருமக கெட்டிக்காரி தான்” என்றார்  சதாசிவம் பெருமையாக. “அம்மாவை விடவா?” என கேட்டான் சூர்யா. “இப்போ ஏன்டா என்னை சிக்கல்ல மாட்டிவிடுற..நீயே சொல்லு யாரு பெஸ்ட்ன்னு” என்றார். “ஸ்டெதாஸ்கோப்பை  ரெண்டு காதுலயும்  மாட்டினா எப்படி ஹார்ட் பீட் கிளியரா கேக்குமோ...அதே மாதிரி நான் ரெண்டு பக்கமும் வாழ்க சொன்னா தான் என் ஹார்ட்ல அடைப்பு வராம கிளியரா இருக்கும் டாடி.” என்று சொல்ல அனைவரும் சிரித்தனர்.

லுவலகத்திற்கு கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்த கார்த்திக்கின் அறைக்கு வந்த மது “காதி, எல்லாம் என்னால தான். எனக்கு சந்தியா பாமிலிய பாத்தா நல்லவங்களா தெரிஞ்சது. அதான் ஒத்துக்கிட்டேன்.  நீ  இவ்வளோ தூரம் சொல்றேன்னா சரியா தான் இருக்கும். இனி அங்க போகலை.” என்றாள் மது கண் கலங்கியவாறு.

தனது பர்ஸ்சை பேன்ட் பாக்கெட்டில் திணித்துக் கொண்டிருந்த கார்த்திக், மது சொல்லவதை கேட்டு நிமிர்ந்து, அவள் அருகில் சென்றான். “சரியான க்ரைபேபி” என செல்லமாக தலையில் தட்டி, “இப்போ தான் கொஞ்சம் வளந்திருக்கன்னு நினச்சேன், இல்ல நான்  அப்படியே தான் இருக்கேன்னு ப்ரூவ் பண்ணிட்ட. பிரச்சனை எனக்கும் அந்த பேய்க்கும் தான். நீயா ஏதாவது குழப்பிக்காத. எப்பவும் எனக்கு ஜால்ரா போடுற மொட்டை என்னை எதிர்த்து பேசுனவுடனே என்னை அறியாம கோபம் வந்துடுச்சு. இப்பவும் நான் உன்னை அவ வீட்டுக்கு போ போகாதன்னு சொல்லலை. நீயா யோசி. முடிவெடு. உனக்கு பிடிச்சதை செய். ம்ம்???” என்று விட்டு பதிலுக்காக அவள் முகத்தை பார்க்க, “ம்..” என தலையாட்டியவள், “யோசி்ச்சு சொல்றேன்” என்றாள் .

“யோசிச்சு என்கிட்ட சொல்லாத. செய். ப்ர்க்னென்ட் லேடி மேல  கர்டசி இருக்கோ இல்லையோ இந்த மொட்டைக்காக மச்சான் என்ன வேணாலும் செய்வான். ஆனா, ஒரு பிஸ்னஸ் மேனை  லோடு மேன் ஆக்கி விட்ட பெருமை உன்னைச் சேரும்“ என்று மறுபடியும் தலையில் தட்டினான்..

அவன் சொல்வது புரியாமல் மது விழிக்க “உனக்கு இப்போ புரியாது.“ என்று லேசாக சிரித்தவன், “ம்ம்ம்....சீக்கிரம் கிளம்பு.  சிவா புதுசா ப்ரோஷன் யோகர்ட் பார் ஆரம்பிச்சிருக்கான். கூப்பிட்டுகிட்டே இருந்தான். நாம அங்க சாப்பிட்டு விட்டு  ஆபிஸ் போகலாம்” என்று அவளை கிளம்ப சொன்னான்.

காலையிருந்து அடுத்தடுத்து திட்டமிட்டருந்த வேலைகளுக்கு நடுவில் சந்தியாவிற்கு  மதியம் 2 மணி அளவில் வேலையை பற்றி வீடியோ கான்பரன்ஸ் முறையில் விவாதிக்க தயாராக இருக்குமாறு மின்னஞ்சல் அனுப்பினான் கார்த்திக்.

உணவு இடைவேளையின் போது கார்த்திக்கை சந்திக்க வந்த மது “காதி நான் முடிவெடுத்துட்டேன். சந்தியா வீட்டுக்கு போகலை.” என்றாள்.

அவள் சொன்னவுடன் “ஏன்?” என கேள்வியுடன் கார்த்திக் பார்க்க,

“எனக்கு பிடிக்கலை. அதான்” என்றாள் தோளை குலுக்கிய படி.

 “காலையில் ஸ்லீப் ஓவர் கூட போடுவேன் சொன்ன?“ என அவன் கேட்க,

“அப்போ நான் யோசிக்கலை. காலையில முழுக்க மூளைய கசக்கி யோசிச்சிட்டு முடிவெடுத்தேன்“ என்றாள், தீவிரமாக யோசித்து முடிவெடுத்தது போன்ற பாவனையுடன்.

 கார்த்திக்கிற்கு சிரிப்பு வந்தாலும் அதை வெளிக்காட்டமால்,

 “நித்தி நிக்கி அழுதா உனக்கு பிடிக்குமா?” என கேட்டான்.

“இல்லை. ஏன்?”, மது.

“அவங்க ஈவினிங் அங்க போறோம்னு தான நினச்சுகிட்டு இருப்பாங்க. இப்போ போய் இல்லன்னு சொன்னா அவங்க அப்செட் ஆகிடுவாங்க. அதை யோசிச்சியா?” என அவன் கேட்க,

“ஓ.. அப்படி ஒன்னு இருக்கோ” என்று ஆள்காட்டி விரலை கன்னத்தில் வைத்த படி யோசனை செய்வது போல விட்டத்தை பார்த்த படி நிற்க,

“அங்க பாத்தா என்ன தெரியும்? உண்மை சொல்லு..இங்கி பிங்கி பாங்கி போட்டு தான அவ வீட்டுக்கு போக வேண்டாம்னு முடிவு பண்ண?” என்று குறும்பு கலந்த குரலில்  கார்த்திக் கேட்க,

“ம்...ஆ….ம்ம்..மா” பாவம் போல முழித்துக் கொண்டு நீட்டி முழக்கினாள் மது.

“ஹா..ஹா…” என வாய்விட்டு சிரித்த கார்த்திக், நிரஞ்சனின் நிலைமையை நினைத்தவாறு, “ரொம்ப  கஷ்டம்...” என்று சொல்லி மறுபடியும் சிரித்தான். “ஏய் காதி டாகி சும்மா சிரிக்காத. உனக்கு பிடிக்காம  அங்க போறதுக்கும் மனசு வரலை, அதே நேரம் அதை மிஸ் பண்றதும்   தோணலை. என்னால முடிவு எடுக்க முடியாம தான் இங்கி பிங்கி பாங்கி போட்டேன் தெரியுமா?” என தன் முடிவை நியாயப்படுத்தினாள்.

“மொட்டை, அதான் உன்கிட்ட காலையிலே சொன்னேன்ல எனக்கும் அவளுக்கும் தான் பிரிச்சனை. நீ அங்க போனாலும் போகாட்டினாலும் அது சால்வ் ஆக போறது கிடையாது. இன்பாக்ட், நீ நம்ம பாமிலி சர்கிளை விட்டு மத்தவங்ககிட்டயும் பழகுறது  நல்லது தான. எனக்கு எப்படி பிடிக்காம போகும்?” என அவன் விளக்கம் அளிக்க,

“இப்படி நீ தெளிவா சொல்லியிருந்தா நான் இவ்வளோ நேரம் செலவழிச்சு  யோசிச்சு இருக்க மாட்டேன் தெரியுமா?” என்று மது மீண்டும் தன் செயலை நியாயப்படுத்த,

அதை கேட்டு விருட்டு என எழுந்த  கார்த்திக்கிடம், “என்னாச்சி? எங்க போற?” என மது கேட்க,

“உனக்கு ரைட் சைடுல இருக்கிற கிரீன் பெயிண்ட் அடிச்சிருக்கிற சுவர் தெரியுதா?” என கேட்க, திரும்பி பார்த்த மது “ஆமா. அதுக்கென்ன?” என அவள் வினவ, “அதுல முட்டிட்டு வந்துடுறேன்.” என்று  தீவிரமாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னான்.

அவன் சொல்வது சட்டென புரியாமல்  மது முழிக்க, கார்த்திக் நமுட்டு சிரிப்பு சிரித்த படி “டுயூப் லைட்..உன்னை யோசிக்க சொன்னதுக்கு அதுல போய் முட்டுறது பெட்டர் தான ? ” என்ற படி  அவள் தலையில் தட்ட, அவன் தன்னை கிண்டல் செய்வது புரிந்தவளாய் “யு காதி..” நன்றாக மொத்தினாள்.

“எவ்வளோ வேணாலும் அடி தாங்கிடுறேன்..ஆனா யோசிக்கிறேன்னு மட்டும் சொல்லிடாத….ப்ளீஸ்” என கெஞ்சுவது போல அவளை மீண்டும் நக்கலடிக்க,

 “சை ….எருமை உன்னை அடிச்சு என் கை தான் வலிக்குது” என அலுத்துக் கொண்டாள் மது.

தியம் சந்தியாவிடம் குறித்த நேரத்தில் கார்த்திக் ஸ்கைப்  மூலமாக  வீடியோ கான்பரன்ஸ் போட அவளை அழைத்தும் அவள் பதிலளிக்காததால், செல் போனில் அழைத்தான். “பாஸ்..கொஞ்சம் பிஸியா இருக்கேன். இன்னும் 10 பத்து நிமிஷம் ப்ளீஸ்” என்று அவகாசம் கேட்டு விட்டு  அவள் மடி கணினியில் போட்டிருந்த “டாம் அண்ட் ஜெர்ரி” சிடியை யாழினியுடன்  கர்ம சிரத்தையாக பார்த்துக் கொண்டிருந்தாள்.  

அவள் ஏதோ வேலையாக இருப்பாள் என நினைத்த கார்த்திக், மறுபடியும் கால் மணி நேரம் கழித்து அழைக்க, “பாஸ் இன்னும் பத்தே பத்து நிமிசம்” என அப்பொழுதும் சந்தியா அவகாசம் கேட்க, கார்த்திக் அவ்வளவு பொறுத்ததே பெரிய விஷயம்! எனவே, “அதெல்லாம் முடியாது. என்ன அப்படி தலை போகிற வேலை?” என கேட்டான். “உங்களுக்கு என்ன தலை போகிற வேலை. எனக்கு ஈமெயில் பண்ணுங்க. நானே நைட் உட்கார்ந்து முடிச்சிடுவேன்“ என பதிலளிக்க, எரிச்சலடைந்த அவன் “சரி. உங்கப்பாகிட்ட பேசிக்கிறேன்” என சொல்லி இணைப்பை துண்டித்தான். “அய்யோ..இந்த சகுனி போட்டு கொடுத்தாலும் கொடுப்பான். சொன்னதை வேற செஞ்சுடுவானே “, என பதறிக் கொண்டே  யாழினியிடம் “ஓடு. ஓடு. சித்திக்கு வேலை வந்துடுச்சு. அப்புறம் பாக்கலாம். போய் அரவிந்த் கூட தூங்கு.” என கிளப்பினாள். “சித்தி, சிடியை கொடுங்க. நான் டிவில ஆச்சியை போட்டு விட சொல்றேன்” என அவள்  கேட்க, “போடி. என்னை விட்டுட்டு நீ மட்டும் பாப்பியா? அதெல்லாம் முடியாது. நீ தூங்கி முழிச்ச பிறகு நாம சேர்ந்து ரெண்டு சிடி பாக்கலாம். போறப்போ கதவை சாத்திட்டு போயிடு.” என ஒரு வழியாக அவளை சமாதானம் செய்து அனுப்பி விட்டு போனில் கார்த்திக்கை அழைக்க அவனோ எடுக்கவில்லை.

“இதுல இவருக்கு மொத்தம் 1008 மிஸ்டு கால் கொடுத்தா தான் எடுப்பேன்னு சபதம் வேற. இதுக்கெல்லாம் சேர்த்து வைத்து  வேட்டு இருக்கு. பொறுத்தார் பூமி ஆள்வார்” என மனதிற்குள் சொல்லிக் கொண்டே, அவனிடம் வீடியோ கான்பரன்ஸில் தனது மடிக் கணினியில் அழைக்க, அழைப்பை எடுத்தான் கார்த்திக்.

காதில் ஹெட்போன் மாட்டி அவள்  பேச தயாராகிக் கொண்டிருக்கும் போதே  கார்த்திக்,  எடுத்தவுடன் மட மடவென அவளுக்கு அன்று முடிக்க வேண்டிய வேலைகளை விம் போட்டு விளக்குவது போல தெள்ளத் தெளிவாக விளக்கிக்  கொண்டிருக்க, அவளோ அவன் முகத்தை கணினியில் பார்த்த உற்சாகத்தில்,

“உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல…

உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல”

என தலையாட்டிக் கொண்டே மனதிற்குள் பாடிய படி அவனை ரசித்துக் கொண்டிருந்தாள். கார்த்திக், ஏதோ கேள்வி கேட்க, அப்பொழுதும் அவள்  தலையாட்டிய படி கனவுலகில் டூயட் பாடிக் கொண்டிருந்தாள்.  அவன் பேசுவதை நிறுத்தி விட்டு அமைதியாக அவளை ஏற இறங்க பார்த்தான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.