(Reading time: 18 - 36 minutes)

ன் தாயின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் சந்துரு.

“என்னம்மா ஏதோ நினைவாவே இருக்கீங்க. கொஞ்சம் எல்லாத்தையும் ஒத்தி வச்சிட்டு சாப்பாடு போடுங்க.”

“ம்ம்ம்” என்றவாறே ராஜலக்ஷ்மியும் அவனுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தார். ஆனால் ஏதும் பேசவில்லை.

சந்துருவின் போனிற்கு அழைப்பு வர அவன் தன் அண்ணனாக தான் இருக்கும் என்று எண்ணி எடுக்க அதிலோ அவன் நண்பன் அழைத்தான்.

அதை எடுத்து பேசிக் கொண்டிருந்தவன் திடீரென்று “ம்ம்ம். ஆமாடா அம்மா அப்பான்னா பசங்களோட விருப்பம் தெரிஞ்சி நடந்துக்கணும். ஆனா எங்கே, இப்ப எல்லாம் மோஸ்ட்லி அப்படி யாரும் நடந்துக்க மாற்றாங்க. நம்ம படிக்கற படிப்புல இருந்து, பார்க்கற வேலை, அப்புறம் கல்யாணம்ன்னு எல்லாமே அவங்க இஷ்டப்படி தான் இருக்கணும்ன்னு நினைக்கறாங்க. அப்பா அம்மா மனசை கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு நினைக்கற நாம தான் கடைசி வரைக்கும் அவங்க இஷ்டப்படியே நடக்கறோம். பாரு அங்கங்கே பசங்க அப்பா அம்மா இஷ்டப்படி இல்லாம என் இஷ்டம் என் விருப்பம், நாங்க இப்படி தான் இருப்போம்ன்னு இருக்காங்க. ஆனா அப்படி இருக்கறவங்களுக்கு தான் இப்ப எல்லாம் காலம். பசங்க அப்படி போனாலும் கொஞ்ச நாளுக்கு அப்புறம் பேரன்ட்ஸ் அவங்க கூட ஒத்து போயிடுவாங்க. ஆனா நம்மள மாதிரி அப்பா அம்மா இஷ்டத்துக்கு நடக்கரவங்களுக்கு தான் எப்பவும் நல்ல பேர் கிடைக்கறதில்லை” என்றான்.

அவ்வளவு நேரமும் தலை குனிந்து ஏதோ யோசித்துக் கொண்டிருந்தவர் நிமிர்ந்து அவனை பார்த்தார்.

சந்துருவோ போனை வைத்து விட்டு சாவகாசமாக சாப்பிட ஆரம்பித்தான்.

“யாரு போன்ல” என்றார் ராஜலக்ஷ்மி.

“நம்ம அருண்ம்மா”

“ம்ம்ம். அவனுக்கென்னவாம்”

“அவன் ஏதோ பிசினெஸ் பண்ணணும்ன்னு ஆசையாம். ஆனா அவங்கப்பா இவனை ஜாப்க்கு போனா போதும்ன்னு சொல்றாராம்.” என்றான் நல்ல பிள்ளை போல் முகத்தை வைத்துக் கொண்டு.

அவன் முகத்தில் ஏதாவது தெரிகிறதா என்று உற்றுப் பார்த்தார் ராஜலக்ஷ்மி.

ஆனால் அவன் தான் பால் குடிக்கும் பிள்ளை போல் சாதுவாக முகத்தை வைத்துக் கொண்டிருந்தானே.

அவன் தன்னை தான் ஜாடையாக சொல்லி இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் இருந்தது. அதனால் திரும்ப திரும்ப அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்.

சந்துருவோ சாப்பிடுவதில் மும்முறமாக இருப்பவன் போல் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். திடீரென்று முகத்தை உயர்த்தி “என்னம்மா” என்று வேறு கேள்வி கேட்டான்.

அதனால் ராஜலக்ஷ்மியால் எதையும் உறுதி செய்ய இயலவில்லை.

ஆனால் அவன் மனதில் அப்படி நினைத்து சொன்னாலும் சரி இல்லையென்றாலும் சரி. அவன் கூறியது என்னவோ உண்மை தானே. காதல் திருமணம் என்ற பெயரில் பெற்றோரிடம் அவர்களின் கருத்துக்களை கூட கேட்காமல், தானே திருமணம் செய்து கொண்டு பின் அவர்களிடம் சொல்லும் பிள்ளைகளும் இருக்க தானே செய்கிறார்கள். அவர்களையும் பெற்றோர் பின்பு ஏற்றுக் கொள்கிறார்கள் தானே.

ஆனால் இங்கோ இருவருமே வீட்டின் சம்மதம் எதிர்பார்த்து தானே அமைதியாய் இருக்கிறார்கள். அதிலும் இன்று இனியா என் சம்மதம் கேட்டு பேசியதில் அவளின் வருத்தம் எவ்வளவு இருந்தது.

ஒரு பெண் குழந்தை இல்லை என்று எவ்வளவு வருந்தி இருப்பேன். இனியாவை பார்த்த பின் எவ்வளவு சந்தோசப்பட்டேன். நானே முதலில் என் அண்ணன் மகள்களை என் வீட்டு மருமகள் ஆக்கி இருப்பேன் என்று கூறினேன் தானே. ஆனால் இப்போதோ அவளே வந்து கேட்கும் போது கூட சரி என்று ஒரு வார்த்தை கூறாமல் விட்டு விட்டேனே என்று வருந்திக் கொண்டிருந்தார்.

“ம்ம்ம். யோசிங்க. யோசிங்க” என்று மனதினுள் எண்ணி சிரித்துக் கொண்டிருந்தான் சந்துரு.

ராஜலக்ஷ்மி எழுந்து சென்று காலெண்டரை பார்த்தார்.

சந்துருவிற்கு உடனே சந்தோஷம் பீறிட்டுக் கொண்டு வந்தது.

உடனே எழுந்து ஓடி சென்று தன் அண்ணனிடம் கூற போன் செய்தான். ஆனால் அவன் போன் திரும்பவும் கிடைக்கவில்லை. இனியாவிற்கு போன் செய்து பார்த்தான். ஆனால் அங்கு ரிங் போய் கொண்டிருக்கிறதே தவிர எடுக்கவில்லை.

சந்துருவிற்கு வெறுப்பாக இருந்தது. ஒரு நல்ல செய்தியை யாரிடமாவது கூறலாம் என்று பார்த்தால் யாரும் கிடைக்கவில்லையே என்று.

கடைசியாக ஜோதிக்கு போன் செய்தான்.

“ஹலோ. சொல்லு சந்துரு”

“அண்ணி ஒரு விஷயம் சொல்லணுமே”

“சொல்லு. என்ன விஷயம்”

“ம்ம்ம். அதை அவ்வளவு சீக்கிரம் சொல்லிடுவேனா”

“அப்புறம் எதுக்கு போன் பண்ண.”

“அட சொல்ல தான் அண்ணி பண்ணேன். ஆனா அவ்வளவு சீக்கிரம் சொல்லிடுவேனா”

“சொல்லாம என்ன பண்ண போற”

“அதை சொன்னா நீங்க எனக்கு என்ன தருவீங்கன்னு தெரிஞ்சா தான் சொல்லுவேன்”

“இதை முதல்லவே கேட்க வேண்டியது தானே. அது நீ சொல்லும் செய்தியை பொறுத்து உனக்கு சன்மானம் கொடுக்கப்படும் மகனே” என்றாள் நாடக பாணியில்.

“சரி அண்ணியாரே. உங்களின் தங்கையின் திருமணம் பற்றிய செய்தியாக இருந்தால் எமக்கு என்ன தருவீர்கள்”

“ஹேய் சந்துரு என்ன சொல்லற”

“ஆமா அண்ணி. வெரி இம்போர்டன்ட் நியூஸ்”

சரியாக அப்போது லக்ஷ்மி “ஹேய் ஜோதி. இங்க வா. யார் வந்திருக்காங்கன்னு பாரு” என்று குரல் கொடுத்தார்.

“சந்துரு யாரோ வந்திருக்காங்க போல, நான் கொஞ்ச நேரம் கழிச்சி வந்து கூப்பிடறேன். சரியா”

“ஐயோ என்ன அண்ணி. இப்படி சொல்றீங்க. கொஞ்ச நேரம் இருங்க அண்ணி”

“ஹாஹஹா. சந்துரு நீ பேசறதை பார்த்தா உனக்கு இதை சொல்ல வேற ஆளே கிடைக்கல போலருக்கே. அப்படியா”

‘ஐயய்யோ. இவங்க எல்லாம் எப்படி தான் கண்டுபிடிக்கரான்களோ’ என்று எண்ணியவாறே “இல்லையே அப்படி எல்லாம் இல்லையே” என்றான்.

“அது சரி. நீ சொல்றதுலையே தெரியுது. நான் திரும்பி கூப்பிடறேன். வெயிட் பண்ணு”

“அண்ணி. நிஜமா எனக்கு பொறுமையே இல்லை அண்ணி. ப்ளீஸ்”

“அப்படின்னா சரி. நீ கிளம்பி இங்கே வா. நாம நேர்ல பேசலாம். ஓகே வா”

“ம்ம்ம். சரி அண்ணி. நேர்ல வரேன்”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.