(Reading time: 23 - 46 minutes)

17. இத்தனை நாளாய் எங்கிருந்தாய் - புவனேஸ்வரி கலைச்செல்வி

னதிற்குள் பதட்டமாய் உணர்ந்தாள்  முகில்மதி.. முதல் முறையாக அன்பெழிலனின்  வீட்டிற்கு செல்ல போகிறாள் அவள் .. தனது வருங்கால அத்தை மாமாவை பார்க்க போகிறாள் .. மகிழ்ச்சியும் பதட்டமும்  ஒருங்கே அவள் மனதில் தோன்றி நர்த்தனம் ஆடியது .. அதை புரிந்துகொண்டே, எழிலும் காவியாவும் அவளது பதட்டத்தை குறைக்க எண்ணி ஏதேதோ கதை பேசிக் கொண்டு வந்தனர்..

காரை வீட்டின்முன் நிறுத்தினான் எழிலன். ஆடம்பரமும் இல்லாமல், சாதாரணமாகவும் இல்லாமல் கண்கவரும் வண்ணம் இருந்தது அவனது இல்லம் .. அன்பெழிலனின்  தாயார் சிற்பக்கலையில் ஆர்வமிக்கவர் என்று அடிக்கடி அவன் சொல்லி இருந்தான் அவன் ..அது உண்மைதான் என்பது போல வீட்டின் முன்னே வெள்ளை வெண்ணிற கற்களினால் செதுக்கபட்ட சிலைகள் அங்கங்கு இருந்தன.. பார்த்தவுடனே கண்கவரும் வண்ண வண்ண பூக்கள் பூத்திருக்கும் தோட்டம்.. அங்கு விளையாடிக்கொண்டிருந்தது எழிலின் செல்ல நாய் குட்டி   பைரவ் .. காரை விட்டு இறங்கியவன் காவியா , முகில் இருவரையும் வரவேற்கும் முன்பே அவனது காலைச்சுற்றி  வந்தது பைரவ்.

" ஹே பைரவ் ,இங்க வா " என்றபடி நாய்குட்டியை தூக்கி கொண்டாள்  காவியா ..

Ithanai naalai engirunthai

" உங்களுக்கும் பைரவை  தெரியுமா அண்ணி ?"

" தெரியுமாவா ?" என்று விழிவிரித்த காவியா, எழிலை முறைத்துவிட்டு முகில்மதியிடம்

" இந்த எருமை பண்ணின்ன  அலும்பலில் எப்படி மதி பைரவை  தெரியாமல் போகும் ? "

" ஆஹா இதுக்கு பின்னாடி பெரியா வரலாறே இருக்கு போல ? கொஞ்சம் எடுத்து விடுங்க அண்ணி ?"

தோழி காதலி இருவரும் சட்டென போட்ட கூட்டணியில் திணறித்தான் போனான் எழில் ..

" அட லூசுங்களா ! வாசலில் நின்னு பேசுற விஷயமா இது ? அம்மா அப்பா வைட் பண்ணுவாங்க வாங்க முதலில் உள்ள போகலாம் " என்று பேச்சை மாற்றினான் அவன் ...

" அதெல்லாம் அவசரம் இல்லை .. கதையை கேட்டுட்டே வாங்க " என்று உள்ளிருந்தபடியே குரல் கொடுத்தார் எழிலின் தந்தை ராகவன் ..

" டாடி யூ டூ ?" என்றபடி எழில் உள்ளே நுழையுமுன்னே மீண்டும் குரல் வந்தது உள்ளிருந்து .. இம்முறை பேசியது அவனது அன்னை விஜயராகவி ..

" டேய் அங்கேயே நில்லுங்க மூணு பேரும் ..நான் ஆரத்தி கரைச்சு கொண்டுவரேன் ... காவியா விடாதே அதுக்குள்ளே இவன் பண்ணின சேஷ்டையை சொல்லிடு ..நான் கொஞ்சம் லேட்டாகவே வாசலுக்கு வரேன் " என்றவரும் வாரவும்  கன்னத்தில் கை வைத்துகொண்டு வாசலிலேயே அமர்ந்தான் எழில் .. அன்பெழிலன் இயல்பாகவே கலகலப்பானவன் என்றாலும் கூட, தனது வீட்டில் அவன் இன்னும் இயல்பாய் இருப்பது போல இருந்தது முகில்மதிக்கு .. அவனது சோகமான முகத்தை பார்த்த பைரவ், காவியாவிடமிருந்து  ஓடி அவன் காலை சுற்றி நின்றது ..

" சரி அது என்ன கதைன்னு சொல்லுங்க அண்ணி " என்று மீண்டும் அதிலேயே வந்து நின்றாள்  முகில்மதி ..

எழிலை முறைத்து கொண்டே கூறினாள்  காவியதர்ஷினி .." இதோ இங்கிருக்கானே இந்த எருமை , காலேஜ்ல எனக்கு ப்ரண்ட்  ஆன புதுசில் இருந்து, உன்னை பார்க்கும்போது பைரவ் ஞாபகம் வருது .. உனக்கு என்மேல எவ்வளவு பாசம் பைரவ் மாதிரியே , பைரவ்வை ரொம்ப மிஸ் பண்ணுவேன்னு நினைச்சேன் ஆனா நீ வந்ததும் அந்த கவலை போச்சுன்னு சொல்லுவான் "

அவள்  சொன்ன பாவனையிலேயே சிரிக்க தொடங்கி விட்டாள்  முகில்மதி..

" அப்பறம் என்னாச்சு அண்ணி ?"

" நானும் பயபுள்ளைக்கு பைரவ்ன்னு நண்பன் இருக்கான் போலன்னு நினைச்சே ஒரு மூணு மாசமா சுத்தினேன் .."

" அட முருகா ? மூணு மாசமா ?"

" ஆமா " என்ற காவியாவின் காதில் இருந்து புகை வராத குறைதான் ..

" அப்பறமா என்னாச்சு  ?"

" நான் ஒரு நாள் , இவன் போனை பிடுங்கி ஆன்டி அங்கிள் கிட்ட பேசும்போது தான், எனக்கே தெரியும் பைரவ்  இவனுடைய நாய்குட்டின்னு "

கண்களை சுருக்கி கோபமாய் பெருமூச்சு விட்டு அவள் சொன்ன விதத்தில் அன்றைய நினைவுகளில் அவனும் சிரிக்க, அவனை அடிக்கிறேன் என்று இவள் துரத்த முயற்சிக்க

" ஹே சப்பானி  போதும்டி  " என்று அவளை மேலும் வம்பிழுக்க இருவருக்கிடையே மாட்டி கொண்டது முகில்மதிதான் ..

" ஹே போதும் டா விளையாட்டு ..என் மருமக பாரு எப்படி பயந்து போயி பார்க்குறான்னு "

என்றபடி ஆரத்தியுடன் வந்தார் விஜயராகவி.. பார்த்தவுடனே பிடித்துவிடும் மங்களகரமான முகம் .. அதையும் தாண்டி அவர் முகத்தில் குடிகொண்டிருந்த சாந்தம் பெண்கள் இருவரையுமே ஈர்த்தது .. ஒரு கணமேனும் அன்னையை நினைவுகூற வைக்கும் முகம் .. அவரின் பின், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி வந்தார் ராகவன்.. முன்னால் இராணுவவீரர்.. அன்பெழிலனின்  தூண் !

அம்மா என்றால் அன்பு

அப்பா என்றால் அறிவு  என்பதற்கேற்பவே

அவன் அன்பிற்கு பின்னாடி இருக்கும் ரகசியம் ராகவி என்றால் அறிவு கூர்மைக்கு பின்னால் நிற்பவர் ராகவன்..

ஆரத்தி எடுத்து இருவரையும் உள்ளே அழைத்து சென்றார் ராகவி .. இருவரும் பாதங்களையும் வணங்கி ஆசி பெற்றாள்  முகில்மதி .. அவள் முகத்தை ஆசையாய் வழித்து

" நிஜம்மாகவே என் மருமக நிலவு மாதிரி இருக்கா டா " என்று சிரித்தார் விஜயராகவி .. மகன் தனக்கு தெரியாமல் காதலித்து விட்டால் கோபப்படும் பெற்றோரைத்  தான் அவள் கேள்வி பட்டிருக்கிறாள் .. அதுவும் தன் மகன் தன்னிடம் கூட கேட்காமல் ஒரு பெண்ணை விரும்பிவிட்டானே என்று மனம் வெம்பும்  பெண்களில் தனித்து நின்றார்  விஜயராகவி .. ஆசையாய் அவரை அணைத்து  கொண்டாள்  முகில்மதி .. ஒரு கையால் அவளை அரவணைத்தவர் இன்னொரு கையால் காவியாவையும் கட்டிக்கொள்ள, அந்த அழகான காட்சியை போனிலும் பிடித்து வைத்து கொண்டான் அன்பெழிலன் ..

ஆறு  நாட்கள், அசுர வேகத்தில் ஓடி போனது .. தினமும் காவியாவுக்கு துணையாய் முகில்மதியை  தன் வீட்டிற்கு அழைத்து வந்தான் அன்பு .. அப்பா, அம்மா, காவியா, முகில்மதியுடன்  மதிய உணவு உண்டு முடித்திருந்தான் அன்பெழிலன்... மனம் முழுக்க சந்தோசம் .. " இந்த மித்ரா குரங்கும் இருந்திருந்தா எவ்வளவு நல்லா இருக்கும் ? கல்யாணம் முடியட்டும் இவளுக்கு வேப்பிலை அடிச்சே தீரனும் " என்று கங்கணம் கட்டிக் கொண்டான் .. சரியாய் அதே நேரம் ஷக்தி போனில் அழைக்க

" அதானே, ஹீரோயினுக்கொரு ஆபத்துன்னா மட்டும் ஹீரோ உடனே வந்திடுவாரே " என்று சிரித்தான் ..

" சொல்லுங்க ஷக்தி .. "

" எனக்கு இப்போ தான் சென்னைல இருந்து போன் வந்திச்சு அன்பு .."

" வாவ் .. அவ்வளவு சீக்கிரமா ? உங்க அத்தை பொண்ணு தானே கூப்பிட்டா ? குரங்கு எப்போ  வர்றாளாம் ?" என்றான் ..

" இல்லை அன்பு .. கால் பண்ணி இருந்தது, மிதுவுடைய ப்ரண்ட்  வீட்டில் இருந்து "

" ஏதும் பிரச்சனையா ? "

" மாமா போன் பண்ணி கல்யாணம் பற்றி மிது கிட்ட சொன்னதும் அவ ஒரே அழுகை போல.. அவளுக்கு தெரியாமல்  என் நம்பர் எடுத்து எனக்கு கால் பண்ணினாங்க "

" அய்யோ , ஒரு வில்லன் ரேஞ்சுக்கு நினைச்சு உங்களை காய்ச்சி எடுத்திட்டாங்களா ?"

" ச்ச்ச்ச ச்ச்ச மதி அண்ணா அப்படி எல்லாம் இல்லை "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.