(Reading time: 23 - 46 minutes)

" போச்சுடா இவளவு நேரம்  புருஷன் உயிரை வாங்கினான் .. இப்போ பொண்டாட்டியா ?? " என்று முனுமுனுத்தவன், " என்ன கல்யாண பொண்ணு " என்றான் ..

" எங்களை போட்டோ எடுத்து காட்டேன் ..நிஜம்மா இது நாங்க தானான்னு செக் பண்ணனும் " என்றதும் கார்த்திக்கு கண்ணே கலங்கிவிட்டது ..

" ஏண்டா ரெண்டு பெரும் பேசி வெச்சு என்னை கலாய்க்கிறிங்களா  ? இனி ஜென்மத்துக்கும் செல்போனே  யூஸ்  பண்ண மாட்டேன் போ " என்றான் .. இதையெல்லாம் கவனித்த ஷக்திக்கு  எத்தனை முயன்றாலும்  சிரிப்பதை கட்டுபடுத்த முடியவில்லை .. காரிருள் மேகங்களுக்கு நடுவில் வெண்ணிலவு போல அவன் முகத்தில் வசீகரிக்கும் புன்னகை ..எத்தனை நாட்கள் ஆயிற்று அவனருகில் அமர்ந்து அவனது உளமார்ந்த சிரிப்பை கண்டு ரசித்து .. அவளுக்கு மட்டும் ஷக்தி இருந்திருந்தால் காலனையே நகரதே ஸ்தம்பித்துவிடு என்று ஆணை பிறப்பித்திருப்பாள்.

" மதி அண்ணா, நிலா எங்க ? அவங்க தான் இவளை கண்ட்ரோல் பண்ண முடியும் " என்றான் ஷக்தி..

" நான்பார்த்துக்குறேன் ஷக்தி " என்றபடி அங்கு வந்த நிலா சங்கமித்ராவின் காதில் கிசுகிசுத்தாள் ..

" ஹே வாலு ... "

" என்னடி தேனு .."

" ம்ம்கும்ம் இப்போ மட்டும் கொஞ்சு .. சரி உனக்கு ஷக்தி கூட சந்தோஷமா வாழனுமா இல்லையா "

" கண்டிப்பா கண்டிப்பா "

" அப்போ இந்த சடங்கு சம்ப்ரதாயத்துல எல்லாம் விளையாடாம, கடவுளே இன்னைக்கு பிடிக்கிற கையை நாங்க என்னைக்குமே விட கூடாதுன்னு வேண்டிகிட்டு ஐயர் பேச்சை கேளு .. இல்லைன்னு வெச்சுக்க " என்று அவள் தனது மிரட்டலை முடிக்குமுன்னே  தங்கையின் கலவர முகத்தை பார்த்த மதி

" தாலியை ஷக்தி கையில இருந்து வாங்கி நான் நிலா கழுத்தில் கட்டிடுவேன் " என்று சொல்லி அவளை சிரிக்க வைத்தாள் .. அதன் பிறகு அவள் சொன்னதுபோல் அனைத்து சம்ப்ரதாயங்களிலும் படுசமத்தாய் இருந்தாள்  மித்ரா ..

ஷக்தியே  மதியிடம் " பாவம் அண்ணா , ஓவரா மிரட்டியாச்சோ ? என் மூஞ்சிய கூட பார்க்க மாட்டுரா " என்றான் ..

ஆனால் மித்ராவோ  அந்த உலகிலேயே இல்லை .. இதழ்கள் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தாலும், மனமோ அவசரமாய் கவி வடித்தது..!

என் திருமணம்!

அவனுக்கு பிடித்தது போல அலங்கரித்து கொண்டு,

இதழில் புன்னகையை மட்டுமே நிறுத்தி ,

கண்ணீர் என்பதை துறந்து ,

பிறந்தவீடு புகுந்தவீடு என்ற மொழி மறந்து ,

ப்ரோகிதரின் மந்திரத்தையும் சங்கீதமாய் உணர்ந்து ,

என்னவனின் தோள்  உரச அமர்ந்து ,

வியப்பாய் என்னை நோக்குபவனிடம் ,

திருட்டுத்தனமாய் கண்ணடித்து ,

அவனை அழகாய்  தலையசைத்து சிரிக்க வைத்து,

அந்த சிரிப்பை மனதில் படம் பிடித்து ,

இனி விரியும் அவன் இதழ்கள் புன்னகைக்க மட்டுமே இருக்க வேண்டும் என்றெண்ணி ,

பெருமூச்சுவிட்டு அக்கம் பக்கம் பார்த்து ,

ஆனந்த கண்ணீருடன் நிற்கும் உறவுகளிடம்

நான் மகிழ்ச்சியாய் இருக்கிறேன் என்பதை

தலையசைத்து உணர்த்தி ,

வெட்கப்படு என்று காதில் முணுமுணுக்கும்  தோழிக்கு பழிப்பு காட்டி ,

கர்வமும் காதலும் போட்டியிட ,

நேர்கொண்ட பார்வையில் என்னவனை சிறைபிடித்து ,

ஆதி அந்தமில்லா என் காதலை பார்வையால் உணர்த்தி ,

காற்றில் அசையும் அவன் கேசத்தில் ,

அசையும் ஒரு முடி கூட தவறவிடாமல் ஆழமாய்  நோக்கி ரசித்து ,

என்னடி என்றவன் புருவம் உயர்த்த ,

கண்ணடி  படுமோ சொல்லடி படுமோ என்ற கவலையன்றி

அவன் தோளில்  ஒரு நொடி சாய்ந்து

ரகசியமாய் அவன் விரல் பற்றி

" ஷ்ஷ்ஷ்ஷ் " என்றவன் செல்லமாய் திட்டுவதை ரசித்து ,

என்னவனை,

என்னில் உயிரானவனை

என்னில் கலந்தவனை,

என்னுள் உறைந்தவனை

என்னை அடைந்தவனை ,

என்னை மணப்பவனை

இனி தவணை முறையில் இம்சித்து

தவம்போல இன்னல்களை கடந்து காதலித்து ,

இணைபிரியாமல் இருப்பேன் இறைவா

என்று மானசீகமாய் உரைத்து

நல்ல நேரம் தொடக்கம் என்றும் ஐயர் சொல்ல

ஆம் இனி உன்னுடன்தான் நல்ல நேரம் என நான்

 அவனிடம் சமிக்ஞை செய்ய ,

திருமாங்கல்யத்தை என்னவன் எடுக்க ,

அதுவரை தாழ்த்தாத சிரத்தை அவனுக்காக தாழ்த்தி

ஏனென்று புரியாமலே ஆனந்த கண்ணீரை சிந்தி

அவன் கட்டும் மாங்கல்யத்தை தொட்டுப் பார்த்து சிலிர்த்து

என் அனைத்து  உணர்வுகளுக்கும் இனி நீயே தலைவன் என்றுரைத்து ,

அனைவரும் தூவிடும் அர்ச்சதையை

வானிலிருந்து தேவன் தூவும் ஆசியாய்  பாவித்து

இன்புற்றிருப்பேன் என்னவனுடன் !

என்னவன் தனது விரல்களால்

குங்குமத்தை எடுத்து

அவன் விரல் ஸ்பரிசத்திற்காக காத்திருந்த

நெற்றியில் திலகமிட

இனி தினமும் நீதான் எனக்கு திலகமிடவேண்டும்

என்று அவனிடம் கூறவேண்டும் என்று மனதில் குறித்து கொண்டு

அவன் விரலோடு விரல் கோர்த்து

கொதிக்கும் அக்கினி என் கண்களுக்கு குளிரும் பனியாய்  தெரிய

அக்கினியை வளம் வந்து

எனக்கு மெட்டியிட  அவன் என் பாதம் பற்ற

இயல்பாய் எழுந்த நாணத்திலும் அவன் மீது கொண்ட அன்பினிலும்

மறுப்பாய் நானும் தலையசைக்க

நான்தானே ? என்றவன் பார்வையால் உரிமைக்குரல் எழுப்ப

அவனுக்கு வலிக்குமோ என்பதுபோல் முகம் சுருக்கி

நானே அம்மிமீது பாதம் வைக்க ,

எனக்கு வலிக்குமோ என்ற எண்ணியபடியே மென்மையாய் அவன் மெட்டி மாட்டிட

என்னவனே, இன்றொரு நாள் மட்டுமே

நீ தலைகுனிய நான் சிரித்திருப்பேன்

இனி என் உயிருள்ளவரை உன் வாழ்வில்

அஸ்தமமே  இல்லாமல் பார்த்து கொள்வது

உன்னோடு உயிருக்குயிராய்

சங்கமித்து விட்ட

திருமதி சங்கமித்ரா ஷக்தியின்  வாக்கு !

அவள் கண்களில் பட்டுவிட்ட அட்சதையை உரிமையாய் ஊதிவிட்டான் ஷக்தி , அதேபோல் இங்கு வைஷ்ணவியின் நெற்றி மீது இருந்த அட்சதைகளை சீற்படுத்தினான் ஆதி .. இரு ஜோடிகளையும் பார்த்து பெற்றோர்கள் ஆனந்த கண்ணீர் வடித்தனர்..

அதே நெகிழ்வான தருணத்துடன் நாமும் அடுத்த அத்யாயத்தில் சந்திப்போம்

தொடரும்

Episode # 16

Episode # 18

{kunena_discuss:777}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.