(Reading time: 23 - 46 minutes)

" ஹே என்னடா இது ?? மாப்பிளையோடு சேர்ந்து வா ..தாராளமா ஆசிர்வாதம் பண்றேன் " என்றான் அவன் சந்தோஷமாய் ..! அதற்குள் அங்கு வந்த ரகு யாருக்கும் கேட்காத குரலில்  மதியிடம்

" ஷக்தி உங்களை தேடுறான் சீக்கிரம் வாங்க " என்றான் ..

" இதோ வரேன் " என்றவன் தேன்நிலாவின் கைகளை டக்கென சிறைபிடித்தான் ..

" மது, என்ன இது ?  கல்யாணம் நமக்கா இல்லை உன் தங்கச்சிக்கா ?"

" கல்யாண மேடை, தாலி , நாதஸ்வரம், சொந்த பந்தம், பக்கத்துல லட்டு மாதிரி என் ஜாங்கிரி , மாமனுக்கு தாலி கட்ட மூட் வராதா " என்றான் அவன் கிறக்கமாய் ..

" யோவ் , வாய வெச்சுகிட்டு சும்மா இரு .. யாராச்சும் காதுல விழுந்துட போகுது .. "

" அடடா , அப்பா அம்மா முன்னாடி எனக்கு முத்தம் கொடுத்த பொண்ணு தானே நீ " என்றவன் கண் சிமிட்ட அவன் வாயை பொத்தினாள் நிலா .. அவள் கரங்களில் முத்தம் பதிக்க அவனை செல்லமாய் முறைத்தாள் நிலா .

ஒரு பக்கம் நாதஸ்வரம் இசை , இன்னொரு புறம் மெல்லிய ஓசையில் பாடல் ஒலித்தது .. மனம் கொடுத்து மனம் பெற்ற காதல் ஜோடிகள் தத்தம் ஜோடிகளுடன் இணைந்து பாடலை ரசித்தனர் ..

கல்யாண தேதி வந்து கண்ணோடு ஒட்டிக்கிச்சு

பெண் நெஞ்சில் ஆனந்த கூத்தாச்சு

பாருங்கடி பொண்ண பாருங்கடி

வெட்கத்தில் அவ கன்னம் சிவந்திருச்சு

இடிச்ச பச்சரிசி புடிச்ச மாவிளக்கு

அரைச்ச சந்தனமும் மணக்க

மதுரை மல்லிகைப்பூ சிரிக்கும் செவ்வந்திப்பூ

செவந்த குங்குமப்பூ மயக்க

தை மாசம் வந்துடுச்சு கால நேரம் சேந்துடுச்சு

ஜோடி ஒண்ணா ஆயிடுச்சு மேளச்சத்தம் கேட்டுடுச்சு

மேகம் கருத்துருச்சு மாரி மழை பெஞ்சுடுச்சு

மண்ணில் மணம் ஏறிடுச்சு மஞ்சள் நிறம் கூடிடுச்சு

கலகலப்பான பெண்களின் சிரிப்போசையுடன் மேடையில் ஏறினர் தேவதைகள் .. நம்ம வைஷு மிது தான் !

ஆதியின் மின்சாரம் தாக்கும் பார்வையில் நாணத்தின் ஒட்டு மொத்த உருவாய் அவனருகில் அமர்ந்தாள் வைஷ்ணவி ..

மது, கீர்த்தனா, மீனா, மலர், ப்ரியா, ஜானகி, சுபி, மீரா , நித்யா என தோழிகள் அனைவரும் புடைசூழ கேலியும் கலாட்டாவுமாய் மித்ராவை மணமேடைக்கு அழைத்து வந்தனர்.. இப்படியே எங்காவது ஓடிவிட முடியாதா ? என்பது போல மூச்சு முட்டியது அவளுக்கு ... ஒரே மேடையில் தானே அவளுக்கும் வைஷுவுக்கும் திருமணம் .. ? அப்படி என்றால் ஷக்தி மேடையில் தானே இருப்பான் ? அவன் இன்னொருத்தியின் கணவன் ஆகும்முன், தான் யாரோ ஒருவனின் மனைவி ஆகும்முன் அவன் முகத்தை பார்த்து விட்டால் தான் என்ன ? என்று தோன்றியது அவளுக்கு ... ஆனால் அவளது விழிகளோ, திரண்டுவரும் கண்ணீர்த்துளிகளை முதலில் மறைத்துவிடு என மூளைக்கு கட்டளையிட்டது ..

கண்களை சிமிட்டி, சிணுங்கும் செவ்விதழை நேர்படுத்தி, பொங்கிவரும் கண்ணீரை மறைத்து வைப்பதின் விளைவாய் தொண்டையில் லேசாய் வலி எடுக்க, சுவாசம் நின்றுவிடகூடதா என்ற தவிப்புடன் அடிமீது அடிவைத்து மணமேடையில் ஏறினாள் சங்கமித்ரா ..தங்க நகைகள் மினுமினுக்க, பச்சைநிற புடவையில் தேவதையாய் மிளிர்ந்தவள் ஷக்தியின்  கண்களுக்கு ஆயிரம் சூரியகாந்தி பூ போல பிரகாசமாய் தெரிந்தாள் .. " மிது " என்று அவன் மனதிற்குள் அழைத்த மறுநொடியே, விழிகள் உயர, அதற்குள் அடிமனம் போதும் உன் கனவுகள் என்று மிரட்ட, உடலில் ஜீவனே இல்லாதது போல மணமகனை பாராது அவர்களுக்கிடையே இரண்டடி இருப்பது போல தள்ளி அமர்ந்தாள்  ..

" ஹே லூசு ... உனக்கு தாலி மாப்பிளை கட்டுவாரா ? இல்ல ப்ரோகிதர் கட்டப்போறாரா ? ஏனடி அவர் பக்கத்துல உட்காருர என்று அடிக்குரலில் சீறினாள் மது ..

" எல்லாம் என் நேரம், சுண்டகாயெல்லம்  எனக்கு கட்டளை போடுது " என்று பெருமூச்சுவிட்டவள் லேசாய் அவனருகில் நகர்ந்தாள் .. அதற்காகவே காத்திருந்தவன்

" பொண்ணுக்கு மாப்பிளையை பிடிக்கலையோ ? இப்போ என்ன பண்ணலாம் " என்றான் .. அவன் குரலை செவிகள் உணருமுன்னே , அவன் வார்த்தையை மூளை பத்தி செய்யுமுன்னே அவனருகில் அமர்ந்ததின் பலனாய்  அவனை முற்றிலும் உணர்ந்தவள் முகமெங்கும் விகாசிக்க ஆனந்த கண்ணீர் பெருக்கெடுக்க  ஷக்தியை  நிமிர்ந்து பார்த்தாள் ..

பாடல் தொடர்ந்தது ..

நெனச்சக் கனவு ஒண்ணு நெஜமா நடந்துடுச்சு

உன்னோட நான் சேருறது பலிச்சாச்சு

விதைச்ச விதையும் இங்கு செடியா முளைச்சிடுச்சு

பூவும் இல்ல காயும் இல்ல கனியாச்சு

கல்யாணத் தேதி வந்து கண்ணோடு ஒட்டிக்கிச்சு

என் நெஞ்சில் ஆனந்தக் கூத்தாச்சு

கண்டாங்கி சேலைக் கட்டி என் கைய நீ புடிச்சு

நாம் சேரும் நாளு இங்கு வந்தாச்சு

வார்த்தையால் வர்ணிக்க முடியாத உணர்வில் சிக்கி இருந்தால் சங்கமித்ரா ..

அன்பெழிலன், முகில்மதி , தேன்நிலா, மதியழகன், காவியா , கதிர் , பெற்றோர்களும் சேர்ந்து அவள் முகபாவனையை புன்னகையுடன் ரசித்தனர் ..

அரசர் , அரசியார், சேவகர்கள், ஒற்றர்கள், சேனாதிபதி படைத்தளபதிகளின், காவலில் ராஜ குமாரனின் கரம் பிடிக்கும் ராஜகுமாரியாய் அவள் இருந்தாள்..

" மாமா ..... ஷக்தி மாமா ... நான் உன்கிட்ட வந்துட்டேனா ? நீதான் மாப்பிள்ளையா ? என் காதல் ஜெயிச்சுருச்சா ? நான் உன் மனைவி ஆகா போறேனா ? என் உயிர் என் கிட்ட திரும்பி வருதா ? இது ஒன்னும் கற்பனை இல்லையே ? உனக்காகவே உயிர் வளர்த்தவள் இன்னைக்கு ஊரறிய உன் கரம் பிடிக்க போறேன்னா ? அதுவும் மனசு நிறைய சந்தோஷத்தோடு  நம்ம எல்லாரும் வாழ்த்து றாங்களா ...? நீ என் ஷக்தி தானா ? " என்று அவள்  உள்மனம் கூக்குரலிட்டது ..

" ஹே மித்ரா .. என்ன அச்சு .. என்னடி " என்று சித்ரா உலுக்கவும்தான் இயல்புக்கு வந்தாள் அவள் .. அத்தனை பேருக்கு நடுவில் அமர்ந்திருக்கிறோம் என்ற எண்ணமே இல்லை அவளுக்கு .. அவன் மட்டும்தான் இருக்கிறான் ..அந்த மேடை அவனும் அவளும் மட்டும்தான்  இருக்கிறார் என்பதுபோல உணர்வு .. ஆள்காட்டி விரலால்  அவன் கன்னத்தை தொட்டுப்  பார்த்து விழிகளை விரித்தாள்  சங்கமித்ரா ..

அவசரமாய் அவள் விரலை சிறைபிடித்தவன் சன்ன குரலில்

" ஹே என்னடி பண்ணுற ?" என்றான் ...

" டேய் நிஜம்மா சொல்லு ..  நீ என் ஷக்தி மாமா தானா ? இல்லை அவரை மாதிரி மாஸ்க்  எதுவும் போட்டு இருக்கியா ?" என்றதும் வாய்விட்டே சிரித்தான் ஷக்தி .. வழக்கம்போல அவள் தலையில் செல்லமாய் தட்டி

" நான்தாண்டி .. மானத்தை வாங்காம மந்திரத்தை சொல்லுடி" என்றான் ..

" அட மந்திரத்தை விடுடா .. " என்றவள் அவசரமாய் தேட, அங்கு கார்த்திக் செல்போனோடு நின்றிருந்தான் ..

" ஹே கார்த்திக் இங்க வாயேன் "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.