(Reading time: 16 - 32 minutes)

ப்போது மைதிலி பாட்டியிடம், “பாட்டி, என் அத்தை குழந்தைக்கு குல தெய்வத்திற்கு முடியிறக்க வேண்டும் எனறார்கள.; ஷ்யாமின் பிறந்த முடி எடுத்து வைத்துள்ளேன். இதுவரை அவனுக்கு மொட்டை போடவில்லை. அப்படியே நம் குலதெய்வம் கோவிலுக்குச் சென்று வந்து விடலாமா?” என்று கேட்டாள்.

அப்போது எல்லோரும் சரி என்று கூற, ராம் அவர்களின் ரிடர்ன் டிக்கெட்டை கேன்சல் செய்து, மதுரையிலிருந்து பிளைட்டில் புக் செய்ய ஏற்பாடு செய்தான்.

எல்லோரும் டிரெயினில் போகும் போது ஷ்யாமிடம் பேசிக் கொண்டும், அஸ்வினுக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டும் இருந்தனர். ஷ்யாமிற்கு அதிகமாக மழலை இல்லை. தெளிவாகவேப் பேசினான். சற்று நேரத்தில் பெர்த்தைப் போட்டு படுக்க ஆரம்பித்தனர்.

அப்போது அவளருகே வந்த கௌசல்யா, “மைதிலி, அன்று எனக்கு ராமின் சந்தோஷம் மட்டுமே முக்கியமாக இருந்தது. எங்களைப் பொறுத்தவரை அவன் செய்வது எப்போதும் சரியாக இருக்கும் என்றே எண்ணி வந்தோம். இன்னும் சொல்லப் போனால் உங்கள் கல்யாண முடிவு தவிர வேறு  எதற்கும் அவன் எங்களிடம் வாதாடியதில்லை. எங்களில் யாருக்காவது ஒரு விஷயம் பிடிக்கவில்லையென்றால் அதை அப்படியே விட்டுவிடுவான். அதனால் தான் அவனுக்கும் உனக்கும் பிரச்சினை என்றவுடன், உன்னிடம் மட்டுமே தப்பு இருந்ததாக நினைத்தேன். மேலும் உங்கள் திருமணம் அவசரமாக நடைபெற ஜோசியமும் ஒரு காரணம்.

அந்த கோபம் என்பதை விட அவன் முடிவு தவறாகி விட்டதோ என்ற குழப்பத்தில்தான் என்ன பேசுவது என்றில்லாமல் பேசி விட்டேன். பிறகு சபரியின் திருமணம் வந்து விட்டது. சரி எல்லாம் முடிந்த பிறகு உன்னிடம் மெதுவாக பேசலாம் என்று எண்ணியிருந்தேன். அதற்குள் நீ வீட்டை விட்டுப் போவாய் என்று எண்ணவில்லை. நீ சென்ற பிறகு ஒரு பிள்ளைத்தாய்ச்சிப் பெண்ணை இப்படி வருத்தப்படுத்தி விட்டோமே என்று தினமும் எண்ணி மறுகுவேன்.

உன்னைத் திரும்பவும் குழந்தையோடு பார்த்தபிறகு நிம்மதியாக இருந்தது. ஆனால் என் மடத்தனத்தால் இந்தக் குழந்தையோடு கழிக்கும் பாக்யத்தை இந்த நான்கு ஆண்டுகளாக இழந்து விட்டோமே என்று வேதனையாக இருக்கிறதும்மா. நான் ஒருவேளை உனக்கு ஆதரவாக இருந்திருந்தால் உங்கள் இருவரின் பிரிவும் தடுக்கப்பட்டிருக்கும். குழந்தையோடும் இருந்திருப்பேன். என்னை மன்னித்து விடும்மா.” என்றார்

“என்ன அத்தை இது? இப்பொழுது தான் எல்லாம் சரியாகி விட்;டதே. ஏன் பழைய விஷயத்தையே எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். நானும் நீங்கள் சொன்னதற்காக மட்டும் போகவில்லை. அன்றைக்கு இருந்த கோபத்திலும், வருத்தத்திலும் என்னால் இதைத் தவிர வேறு முடிவுக்கு வர முடியவில்லை. இதனால் நீங்களும் பிரச்சினைகளைச் சந்தித்திருப்பீர்கள். இந்த 4 வருடங்களாக என்னைப் பற்றி கேட்பவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் கஷ்டப்பட்டிருப்பீர்கள். அதற்காக என்னை மன்னித்து விடுங்கள்” என்றாள் மைதிலி.

“நீ தனியாக பட்ட வேதனையோடு ஒப்பிடும் போது இதெல்லாம் ஒன்றும் இல்லையம்மா. ஆனால் கண்ணால் கூட பார்த்திராத எங்கள் மீது ஷ்யாம் வைத்திருக்கும் பாசத்தைப் பார்க்கும் போது, நீ எங்களை எவ்வளவு மதிக்கிறாய் என்று தெரிகிறது. இனி எனக்கு நீ மருமகள் அல்ல. நீயும் ஒரு மகளே.”

“சரி அத்தை. போய்த் தூங்குங்கள். காலையில் சீக்கிரம் எழ வேண்டுமே” என்று அனுப்பி வைத்தாள். குழந்தை தூங்கிவிட்டானா என்று பார்க்க வந்த ராம் அவர்கள் பேச்சைக் கேட்டு கண்களில் நீர் மல்கச் சென்றான்.

றுநாள் காலை எல்லோரும் சபரியின் மாமானார் ஊர்க் கோவிலுக்குச் சென்று, முடி இறக்கி, ராமின் மடியில் வைத்து காது குத்தினர். அவர்கள் பதில் மரியாதையாக ராம், மைதிலி மற்றும் ஷ்யாமிற்கும் உடைகள் வைத்துக் கொடுத்தனர்.

பிறகு விருந்து முடித்து விட்டு எல்லோரும் ராமின் சொந்த ஊரான ஸ்ரீவைகுண்டத்திற்கு கிளம்பினர். மதுரையிலிருந்து வேன் ஏற்பாடு செய்யப்பட்டது. எல்லோரும் அவரவர் ஜோடிகளோடு அமர, ராமின் அருகே மைதிலி தயக்கத்துடன் அமர்ந்தாள். இரண்டு பேர் அமரும் சீட்டில் ஷ்யாமை வைத்துக் கொண்டு அமர சிரமபட்டாள். ராம் வேண்டுமென்றோ, அல்லது எதேச்சையாகவோ வசதியாக அமர்வது போல் அவள் தோளைச் சுற்றி கைபோட்டான். மைதிலி அவன் தோளில் சாய்ந்து கொள்;ள தூண்டிய உணர்வை பெரும்பாடுபட்டு அடக்கி நேராக அமர்ந்தாள்.

எல்லோரும் பேசிக் கொண்டும், சந்தோஷ்ஐக் கிண்டலடித்துக் கொண்டும் வந்தனர். தற்சமயம் அவன்தானே புது மாப்பிளளையாகப் போகிறான்.

ராம் “ஹேய் சைதன்யா, நேற்று உங்கண்ணன் விட்ட ஜொள்ளில் மண்டபமே கழுவி விட்டார்களாம்” என்று நகைக்க,

சந்தோஷ் “ ஏன் இந்தக் கொலை வெறி? நானே ஸ்ருதியிடம் பேச அவளைச் சுற்றி சுற்றி வந்தால், எங்க மாமா அவர்கிட்ட பேச வந்ததாக எண்ணி பிளேடு போட்டுத் தள்ளிட்டார்” என்று புலம்ப எல்லோரும் நகைத்தனர்.

இப்படியே பேசிக் கொண்டிருக்கும் போது ராமைப் பாடச் சொல்ல, ராம் யோசித்து விட்டு “செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா” என்று பாடினான். ஊருக்குச் சென்ற போது இரவானபடியால் எல்லோரும் சாப்பிட்டு விட்டு படுத்தனர்.

றுநாள் காலை குலதெய்வம் கோவிலில் ஷ்யாமிற்கு முடி இறக்கும் போது சந்தோஷின் மடியில் உட்கார வைத்தாள் மைதிலி. எல்லோரும் சந்தோஷப்பட்டனர். கையோடு அவன் பிறந்த முடியையும் அங்கே சேர்த்தவர்கள், பிறகு ஷ்யாமிற்கு குளிப்பாட்டி விட்டு புது உடை அணிவித்தனர்.

அப்போது சுபத்ரா “என்னை மன்னித்து விடு மைதிலி. உன் கல்யாணத்தின் போது பெற்றவர்கள் ஸ்தானத்தில் இருந்து உன்னை தாரை வார்த்தக் கொடுத்தேன். ஆனால் உன்னிடம் நான் அப்படி நடந்து கொள்ளவில்லை. ராம் எனக்கு மருமகன்தான். ஆனால் இனி சைதன்யாவைப் போல் நீயும் என் மகள். என்னை உன் அம்மா என்று எண்ணிக் கொள். உன்னுடைய வருத்தம், மகிழ்ச்சியை எங்களோடு பகிர்ந்து கொள்.” என்று கூறினாள். மைதிலியும் சிரித்தவாறே “சரி அம்மா என்றாள்.

அப்போது சுபத்ரா சந்தோஷின் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை கழற்றி ஷ்யாமிற்கு அணிவித்தார்.

ராம் “ அத்தை என்ன இது?” என்றான்.

சுபத்ரா “சந்தோஷ்க்குத் தாய்மாமா அந்தஸ்து கொடுத்திருக்கீங்க. அப்ப சீர் செய்ய வேண்டாமா?” என்றார்.

“அதற்கு இப்படியா? நீங்கள் 100 ரூபாய் கொடுத்தாலும் போதுமே. அவன் கழுத்தில் கிடந்த செயினைப் போய் கழட்டி விட்டீர்களே” என்றான்.

“இல்லடா. இது தான் சரி. நீ சும்மா இரு” என்றார்.

“டேய் சந்தோஷ் நீ உன் மாமனார் வீட்டில் போட்ட செயினை போட்டுட்டு வரலை. அது மட்டும் போட்டிருந்தியோ ஸ்ருதி ஆடியிருப்பா” என்றான்

“நல்ல வேளைடா. அது ரொம்ப பெரிசாருக்கேன்னு வைச்சுட்டு வந்துட்டேன்”  எல்லோரும் சிரித்தபடி கோவிலுக்குக் கிளம்பினார்கள்.

இப்படி பேச்சும் சிரிப்புமாக கோவிலை விட்டு வரும்போது ராமிடம் தயங்கி தயங்கி மைதிலி “பிளைட் எப்போ?” என்றாள். அவன் இரவு 7 மணிக்கு என “இப்போ மணி 11 தான் ஆகுது. நாம திருச்செந்தூர் போக முடியுமா? இல்ல லேட் ஆகும்னா இன்னொரு தடவ போகலாம்” என்றாள்.

அப்போது அங்கே வந்த சந்தோஷ் “தாராளமா போகலாம். ராம் ப்ளீஸ் ஏற்பாடு பண்ணுடா” என்றான்.

“ஏன்டா உனக்கு இத்தனை சந்தோஷம்? உன் ஆள வரச்சொல்லப் போறியா?”

“நாம நேரா அங்கேயே போகலாம். மைதிலி நீ தெரிஞ்சு செய்தியோ தெரியாம செய்தியோ, நீ ரொம்ப நல்லவ. எப்படியாவது அவனைக் கவுத்துமா?”

“ஏன்? அங்கேதான் ஸ்ருதியோட வீடா?” என்றாள்.

“ஆமாம். அதான் மச்சான் உனக்கு சோப் போடறான்.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.