(Reading time: 16 - 32 minutes)

ராம் அவன் தாய் தந்தையரைப் பார்க்க, அவர்கள் தலையசைக்கவும் சரி என்று 3 மணிக்கு அங்கிருந்து கிளம்பி விடவேண்டும் என்ற நிபந்தனையோடு வேனை திருச்செந்தூரை நோக்கி விடச் சொன்னான்.

இவர்கள் கோவிலைச் சென்றடையும் போது மணி 12.00. காலசந்திக்காக கோவில் மூடப்பட்டிருந்தது. அப்போது ஸ்ருதியும் பெற்றோருடன் வர, சந்தோஷ் தலையிலடித்துக் கொண்டான். மீண்டும் 2 மணிக்கு திறக்கப் படும் எனவும், அனைவரும் கடலில் நீராடச் சென்றனர். குழந்தைகளை பெரியவர்கள் வைத்திருக்க, இளையவர்கள் அனைவரும் கடலில் குளித்தனர். பிறகு நாழிக் கிணறு, வள்ளிக் குகை, சஷ்டி மண்டபம் எல்லாம் பார்த்து விட்டு வந்தனர்.

சரியாக இரண்டு மணிக்கு சிறப்பு தரிசனத்தில் உள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்து சாப்பிட்டு விட்டு மதுரையை நோக்கி புறப்பட்டனர். ஷ்யாமிற்கு முதல் விமானப் பயணம் என்பதால் அவன் மகிழ்ச்சியுடன் எல்லாவற்றையும் ரசித்தபடி வந்தான். இரவு 10 மணிக்கு வந்தவர்கள் அலுப்பிலும் களைப்பிலும் உறங்கச் சென்றார்கள்.

றுநாள் காலை சபரி, சுபத்ரா குடும்பத்தினர் அவரவர் வீட்டிற்குச் சென்றனர். கொள்ளுப் பேரனுடன் இருக்கும் ஆசையில் தாத்தா, பாட்டி மகன் வீட்டிலேயே தங்கி விட்டனர். ராம், அவன் தந்தை இருவரும் அலுவலகம் சென்று விட மைதிலி வீட்டுப் பொறுப்பில் கௌசல்யாவிற்கு உதவினாள். ஷ்யாமிற்கு இங்கு தாத்தா பாட்டியுடன் விளையாடுவதும், தோட்டத்தைச் சுற்றுவதுமாக பொழுது நன்றாகக் கழிந்தது. ஒரு வாரம் சென்றது.

ஷ்யாமை விட்ட க்ரீச்சிலேயே ப்ளே ஸ்கூலும் இருந்ததால் அவன் அங்கேயே நிறைய கற்றுக் கொண்டான். இப்போது அவனுக்கு என்ன செய்வது என்று மைதிலி யோசித்துக் கொண்டிருந்தாள். மைதிலி, ராமின் உறவு அப்படியே இருந்தது. வெளிப்பார்வைக்கு அவர்கள் பேசிக் கொள்வது போல் இருந்தாலும், உள்ளுக்குள்ளே இருவரும் ஒரு தயக்கத்துடனேயே இருந்தனர்.

இரவுகளில் மைதிலியும் ஷ்யாமும் அவளுடைய அறையில் தூங்கினர். ராம் அவனுடைய அறையில் படுத்தான். படுப்பதற்கு முன் ராம் அவள் அறையில் வந்து ஷ்யாம் உறங்கவில்லையெனில் அவனுக்கு குட்நைட் சொல்லி விட்டுப் போவான். உறங்கி விட்டான் என்றால் நெத்தியில் முத்தமிட்டுப் போவான்.

அன்றைக்கும் அதே போல் வந்தவன் ஷ்யாம் உறங்கிக் கொண்டிருக்க அவனை முத்தமிட்டு விட்டுக் கிளம்பவும், மைதிலி “ஒரு நிமிஷம்” என்றாள்.

அவன் நிற்கவும், மைதிலி தயங்கி விட்டு “வந்து ஷ்யாமை ஸ்கூலில் சேர்க்க வேண்டும். ஏற்கனவே அவன் எல்.கே.ஜி படித்துக் கொண்டிருந்ததால் அதை தொடர வேண்டும்.” என்றாள்.

“சரி. ஏற்பாடு செய்கிறேன்” என்றவன் ஒரு நிமிடம் தயங்கி விட்டு “உனக்கு ஏதும் வேண்டுமா” என்று கேட்டான்.

“புரியவில்லை.” என்றாள் மைதிலி.

“இல்லை எப்பொழுதும் ஷ்யாமிற்கே கேட்கிறாயே. என்னிடம் கேட்பதற்கு உனக்கு ஒன்றுமில்லையா” என்றான். இல்லை என்று தலையசைத்தாள்.

“ஆனால் எனக்கு ஒன்று சொல்ல வேண்டும்.” என்றான்.

அவள் என்ன என்று வினவ, அவன் அருகில் வந்து அவளை ஒரு கையால் அணைத்து, ஒரு கையால் முகத்தைப் பற்றி நெற்றியில் மிருதுவாக முத்தமிட்டு “குட்நைட்” என்று கூறினான்.

அவள் திகைத்து நின்றிருப்பதைப் பார்த்து சிரித்துக் கொண்டே சென்றான். சற்று நேரம் உறக்கம் வராமல் திணறிய மைதிலி பிறகு பால்கனியில் நின்று வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்போது கீழே தோட்டத்தில் ராம் தூங்காமல் நடந்து கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு ஒரு பெருமூச்சுடன் உறங்கச் சென்றாள்.

றுநாள் காலை உணவின் போது ராம் அவன் அப்பா, அம்மாவிடம் ஷ்யாமை பள்ளியில் சேர்ப்பது பற்றி பேசினான். ராம் , சபரி படித்த ஸ்கூலிலேயே சேர்க்கலாம் என்று முடிவு செய்தனர். அதன்படி அன்றே பிரின்சிபாலிடம் பேச அவர் நேரே வரச் சொன்னார். அங்கே ஆண்டு நடுவில் ஸ்கூலில் சேர்ப்பது கஷ்டம். ராம் அங்கே மெரிட், ஆல் ரவுண்டராகவும் இருந்ததால், ஷ்யாமை நேரில் பார்த்து விட்டு முடிவு செய்வதாகக் கூறினார்.

அன்று ராமின் அப்பா மட்டும் அலுவலகம் செல்ல, ராம் மைதிலி மற்றும் குழந்தையுடன் ஸ்கூலுக்குச் சென்றான். அங்கே ஷ்யாமின் தயக்கமில்லாத பேச்சாலும், ஓரளவிற்கு அவன் ஏற்கனவே படித்திருந்ததாலும் அவனுக்கு எல்.கே.ஜி சீட் கிடைத்ததது. உடனே ராம் பணத்தைக் கட்டிச் சேர்த்து விட்டு, மறுநாளிலிருந்து ஸ்கூல் அனுப்புவதாக கூறி விட்டு வந்தான்.

அன்றே கடைக்குப் போய் யூனிபார்ம் வாங்கி தைக்கக் கொடுத்து விட்டு, தேவையான மற்றப் பொருட்களை வாங்கினார்கள். மாலை வீட்டிற்கு வந்தவுடன் ஷ்யாம் அன்று வெளியே சென்றதைப் பற்றி எல்லோரிடமும் வளவளக்க, வாங்கி வந்த பொருட்களை தங்கள் அறைக்கு எடுத்துச் சென்றாள் மைதிலி. அப்போது பின்னே வந்த ராம், அவளிடம்

“உனக்கு ஸ்கூல் பிடித்திருந்ததா மைதிலி?”

“ஷ்யாமிற்கு பிடித்தால் எனக்கு சந்தோஷமே

“நாளை நாம் இருவரும் போகலாம். பிறகு ஒரு வாரம் நீ டிரைவரோடு கொண்டு விட்டு வா. அதன் பிறகு ஷ்யாமிற்கு பழகி விட்டால் அவனை டிரைவரோடு அனுப்பலாம்” என்றான்.

“சரி” என்றாள் மைதிலி சுருக்கமாக. பிறகு அவள் உள்ளே சென்று விட்டாள்.

ராம் அவளையேப் பார்த்தான். அவர்களிடையே பிரச்சினை வரும் வரை , ராம் வீட்டிற்கு வந்துவிட்டால் மைதிலி தனியே இருக்க மாட்டாள். ராம் ஏதாவது அலுவலக வேலை பார்த்துக் கொண்டிருந்தால் கூட பக்கத்திலோ அல்லது எதிரிலோ அமர்ந்து ஏதவாது செய்து கொண்டிருப்பாள். ராம் அதற்காக அவளைத் திட்டியிருக்கிறான். ஆனால் அவள் வருத்தப்பட்டால் கூட அவன் இருக்கும் இடத்தில் தான் இருப்பாள். இப்பொழுதோ அவன் எதிரிலேயே வருவதில்லை. மற்றவர் பார்க்கும் போது ஏதாவது கேட்கிறாள். ஒரு பெருமூச்சுடன் கீழே சென்றான்.

மறுநாளிலிருந்து ஷ்யாம் ஸ்கூல் போக ஆரம்பித்தான். நாட்கள் நகர ஆரம்பித்தன. இப்பொழுதெல்லாம் மைதிலி ராமிடம் ஷ்யாமின் படிப்பு, குறும்பு அவனின் தேவைகள் பற்றி தயக்கமின்றி பேச ஆரம்பித்தாள். இந்நிலையில் ஷ்யாமின் பிறந்த நாள் வந்தது.

தொடரும்

Episode 08

Episode 10

{kunena_discuss:887}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.