(Reading time: 15 - 30 minutes)

காற்றினிலே வரும் கீதம்... - 09 - வத்ஸலா

கோகுல் வீட்டு கார் அவர்கள் வீட்டு வாசலில் வந்து நிற்க, டிரைவர் கோதையின் வீட்டு அழைப்பு மணியை அடிக்க, திடுக்கென தூக்கி போட்டது வேதாவுக்கு. இப்போதெல்லாம் எந்த சத்தம் கேட்டாலும் இப்படித்தான் திடுக்கிடுகிறது உள்ளம்.

கோதை கதவை திறக்க வாசல் பக்கம் செல்ல, ஒலித்தது வேதாவின் கைப்பேசி. அழைப்பு வந்தது சரவணனின் கைப்பேசியிலிருந்து.

'கிளம்பிட்டியா???' என்றது மறுமுனை.

Katrinile varum geetham

'ம்.... கிளம்பிட்டேன்.' என்றவளுக்குள்ளே சின்னதாக ஏதோ ஒரு நெருடல்!!!

'ஆமாம்... ஏன் உங்க குரல் ஒரு மாதிரியா இருக்கு?' யோசனையுடனே கேட்டாள் வேதா.

'அது ஒண்ணுமில்லை கொஞ்சம் தொண்டை கட்டி இருக்கு' பொய் பதிலாக வந்தது ' 'உன்னை நம்பி எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன். என்னை ஏமாற்றிட மாட்டியே???'

'இல்.. இல்லை கோகுல்..'

'அப்படி நீ வரலைன்னா, நாளைக்கு நான் ரயில் முன்னாடி விழுந்திட்டதா நியூஸ் வரும். அதுக்கு அப்புறம் நீ காலத்துக்கும் அழுதாலும் எந்த பிரயோஜனமும் இல்லை.'

'கோகுல் ப்ளீஸ்... நான் கிளம்பிட்டேன். நீங்க ஏன் இப்படி எல்லாம்..'

'சரி அப்போ  நீ உங்க வீட்டிலேயே போன் ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டு கிளம்பு.'

'ஏன் அப்படி?"

'சொல்றபடி செய். நம்ம கல்யாணம் முடிஞ்சதும் போன் ஆன் பண்ணிக்கலாம்'

'ச.. சரி...' என்றாள் அவள். ஆனால் அவள் உள்மனதில் நிறையவே உறுத்தல் பிறந்தது.

'கார் வந்தாச்சுக்கா சொல்லிய படியே...' உள்ளே வந்தாள் கோதை. 'ஏன் உன் முகமெல்லாம் இப்படி இருக்கு???'

'அது ஒண்ணுமில்லைடா...' என்றபடியே கைப்பேசியை அணைத்தாள் வேதா. அது அணைக்கப்படும் முன் அந்த எண் கண்ணில் பட்டது. அது முரளியின் எண். சற்றே வித்தியாசமான எண்ணாக இருக்க அது தன்னாலே மனதில் பதிந்து போனது வேதாவுக்கு.

வள் கைப்பேசியை அணைத்த அதே நேரத்தில் வேதாவிடம் பேசிவிடும் அவசரத்துடன் அவளை அழைத்தாள் கவிதா. தொடர்பு கிடைக்கவில்லை.

'ச்சே...' என்ன பெண்ணிவள்??? எதற்கு அணைத்து வைத்திருக்கிறாள் கைப்பேசியை.???

அதற்குள் இங்கே.....

'ஏன்கா 'பயமா இருக்கா?? என்ன பயம்.?? நான் இருக்கேனோல்யோ. அவாத்திலே எல்லரயையும் நேக்கு நன்னா தெரியும். நீ பேசாம என் கூட வா. நான் சொல்றபடி கேளு எல்லாம் சரியா நடக்கும்.'

வேதா பதில் எதுவும் பேசாமல், உற்சாகமாக பேசும் தங்கையையே  பார்த்தபடி நிற்க, அவர்கள் முன்னால் பூஜை அறையில் சிரித்துக்கொண்டிருந்தான் கண்ணன். அந்த கண்ணனை  பார்த்து திடீரென கேட்டாள் கோதை

'என்ன கண்ணா நான் சொல்றபடி வேதா கேட்டாளானா எல்லாம் சரியா நடக்குமோன்னோ?'

கோதை கேட்ட கேள்விக்கு 'ஆம்' என்ற பதிலுடன் புன்னகை மாறாமல் நின்றிருந்தான் கண்ணன். கோதை மூலமாக மறுபடியும் அவளுக்கு வழிக்காட்டியிருந்தான் கண்ணன். அந்த வழியை  கண் திறந்து பார்க்கும் சக்திதான் இல்லை வேதாவிடம்.

'பாரு கண்ணன் எப்படி சிரிக்கிறான் பாரு. ஆமாம்னு சொல்றான் நீ பேசாம என் கையை பிடிச்சிண்டு என் கூட வா'  கண் சிமிட்டி சிரித்தபடியே சொன்னாள் கோதை.

'அவனுக்கு சிரிக்கறதை தவிர என்ன வேலை...' அலுத்துக்கொண்டாள் வேதா. 'என்னாலே இன்னைக்கு அவாத்துக்கு வர முடியாதுமா. ஆபீஸ்லேர்ந்து போன் வந்தது.'

'ஃபோனா???'

'ஆமாம்பா. நான் இன்னைக்கு ஆபீஸ் போயே ஆகணும். நீ அவாத்திலே ஏதாவது சொல்லி சமாளிச்சுக்கோ. ப்ளீஸ்..'

'என்னக்கா நீ இப்படி கடைசி நிமிஷத்திலே...'

'வேறே வழி இல்லைடா... சமாளிச்சுக்கோ ப்ளீஸ். நான் போயிட்டு சீக்கிரம் வர பார்க்கிறேன்...'

சில நொடி மௌனம் கோதையிடம் 'அப்போ நான் சொல்றதையும் கேட்க மாட்டே. அந்த கண்ணன் சொல்றதையும் கேட்க மாட்டே. போ..... என்னமோ பண்ணு.' முகத்தை திருப்பிக்கொண்டு அவள் சொல்ல, கண்ணனை பார்த்தாள் வேதா.

'ஆழம் தெரியாமல் கால் வைத்துவிட்டேன் என்று தெரிகிறது கண்ணா. ஒரு வேளை நான் தடுமாறி விழுந்துவிட்டால் கரை சேர்ந்துவிட ஒரு படகையாவது கொடு..' கண்ணனை பார்த்து கன்னத்தில் போட்டுக்கொண்டவள் கோதையை பார்த்தாள்

'கோவிச்சுக்காதே நான் சீக்கிரம் வந்திடுவேன். நான் கிளம்பும் போது நீ இப்படி பண்ணேனா அக்காவுக்கு கஷ்டமா இருக்கு.' அவள் கண்களில் நீர் கட்டிக்கொள்ள,

'ஹேய்.. எதுக்கு அழறே இப்போ??? பதறினாள் தங்கை. 'நான் சமாளிச்சுக்கறேன் விடு. சரி எனக்காக இந்த ஹெல்ப்பையானும் பண்ணு'

'என்ன பண்ணனும் சொல்லுடா?"

'அது.......... ' என்று கோதை ஒரு வேலையை செய்ய சொல்ல, சட்டென அதை செய்தாள் வேதா.

இரண்டு நிமிடங்கள் விட்டு மறுபடியும் முயன்றாள் கவிதா. இணைப்பு கிடைக்கவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.