(Reading time: 15 - 30 minutes)

கார் மாம்பலத்தை நெருங்கிக்கொண்டிருக்க....

'கண்டிப்பா... நீ ஆபீஸ் போய்த்தான் ஆகணுமா??? என் கூட வந்திடேன்.' ..... கெஞ்சலாக சொன்னாள் கோதை.

வேதாவின் மனம் நிலைக்கொள்ளாமல் ஊசலாடியது. கோதை சொல்வதை கேட்டு விடு என்று ஒரு மனம் சொல்லிக்கொண்டே இருந்தது.

அதே நேரத்தில் 'அப்படி நீ வரலைன்னா, நாளைக்கு நான் ரயில் முன்னாடி விழுந்திட்டதா நியூஸ் வரும். அதுக்கு அப்புறம் நீ காலத்துக்கும் அழுதாலும் எந்த பிரயோஜனமும் இல்லை.' அவன் வார்த்தைகள் அவளை இன்னொரு பக்கம் இழுத்தது.

'ஒரு வேளை அவன் நிஜமாகவே ஏதாவது செய்துக்கொண்டால், என்னால் ஒரு உயிர் போய்விட்டால்???' நினைக்கவே முடியவில்லை அவளால்.

ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டு தங்கையை அணைத்து அவள் நெற்றியில் ஒரு முத்தமிட்டுவிட்டு  'நான் போயிட்டு வந்திடறேன்டா.' சொல்லிவிட்டு காரை நிறுத்த சொல்லி இறங்கிக்கொண்டாள் வேதா. அரை மனதுடனே அவளுக்கு கோதை கை அசைக்க நகர்ந்தது கார்.

தெருவில் தனியே நின்றாள் வேதா. ஒரு ஆட்டோவை நிறுத்தி ஏறிக்கொண்டாள் அவள். அவளது உள்ளுணர்வு அவளை எச்சரித்துக்கொண்டே இருந்தது. ஆனால் காரில் வந்த போது இருந்த கலக்கம் இப்போது இல்லை.

எங்கிருந்தோ வந்தது ஒரு தைரியம்!!!!. என்னை மீறி எனக்கு எதுவும் தப்பாக நடந்து விடாது என்ற ஒரு உறுதி!!!!!. இனி நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கவனத்துடன் எடுத்து வைக்க வேண்டும் என்ற முடிவு.!!!! இவற்றுடன் மாம்பலம் ரயில் நிலையத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்தாள் வேதா.

இன்னும் மனம் ஆறவில்லைதான் கவிதாவுக்கு. அதே நேரத்தில் வேதா இப்போது இருக்கும் சூழ்நிலை என்னவென சரியாக தெரியாமல் இந்த விஷயத்தை தேவை இல்லாமல் ஊதி பெரிதாக்கவும் தோன்றவில்லை அவளுக்கு.

தனக்கும் வேதாவுக்கும் தெரிந்த ஒன்றிரண்டு பொதுவான நண்பர்களுக்கு மட்டும் இந்த விஷயத்தை சொல்லி வேதா அவர்களை தொடர்பு கொண்டால் இந்த விஷயத்தை சொல்லிவிடுமாறு சொல்லிவிட்டு  தன்னை கொஞ்சம் நிதானப்படுத்திக்கொண்டாள்.

'பார்க்கலாம். நாளை காலை வரை பார்க்கலாம். எப்படியும் நாளை அலுவலகம் வந்து விடுவாள். தனது குடும்பத்துடன் எங்காவது வெளியில் சென்றிருக்க கூடும்' சின்னதொரு நம்பிக்கையில் தனக்கு தானே சொல்லிக்கொண்டாள் கவிதா.

கோகுல் வீட்டை அடைந்தாள் கோதை. வாசல் வரை வந்துவிட்டவளுக்கு உள்ளே செல்ல ஒரு சின்ன தயக்கம்.. அவள் எப்போது வருவாள் என வாசல் கதவை பார்த்துக்கொண்டே அல்லவா இருந்தான் அவன்??? ஓடி வந்தான் அவளவன்

'வாங்கோ. வாங்கோ. வெல்கம்'..... அடி மனதில் இருந்த சொல்லத்தெரியாத ஏதோ ஒரு கலக்கம் அவன் புன்னகையில் மறைந்து போனதை போல் தோன்றியது கோதைக்கு. கோகுலின் அப்பாவும் அம்மாவும் புன்னகையுடன் எதிர்க்கொண்டனர் அவளை.

'வாம்மா... எங்கே உன் அக்கா???'

'அவ என்கூட தான் கிளம்பினா... திடீர்னு ஏதோ போன் வந்ததுன்னு ஆபீஸ் போயிட்டா...' என்றவள் 'பெரியவா ரெண்டு பேரும் நில்லுங்கோ. சேவிச்சுக்கறேன்...' என்று அவனுடைய அம்மா அப்பா இருவரையும் நமஸ்கரித்தாள்.. கொஞ்சம் நெகிழ்ந்து தான் போனார்கள்.

கோகுலை பார்த்து சொன்னார் அம்மா ..'சார்...... இதெல்லாம் கொஞ்சம் கத்துக்கோங்க. ஒரு நாளைக்காவது அம்மாவை சேவிச்சு இருக்கியாடா நீ ?.'

'என்ன பண்றது. அவாத்து பெரியவா இதெல்லாம் கத்து கொடுத்திருக்கா. நம்மாத்திலே யாருமே நேக்கு கத்துக்கொடுக்கலையே.' அவன் சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு சொல்ல அம்மா அவனை அடிக்க ஓட அங்கே சந்தோஷம் துளிர் விட ஆரம்பித்தது.

சிறிது நேரம் கழித்து அவனது பெரியப்பாவும், பெரியம்மாவும் வந்தனர். வேதா இன்றும் வாராதது அவர்களிடம் கொஞ்சம் ஏமாற்றத்தை விதைத்தது.

எல்லாரும் கோவிலுக்கு சென்று வந்து விட்டு, ஒன்றாய் அமர்ந்து சாப்பிட ஆரம்பிக்க, அருகருகே அமர்ந்திருந்த கோதை - கோகுல் ஜோடி பொருத்தத்தை யாராலும் ரசிக்காமல் இருக்க முடியவில்லை.

சாப்பிட்டு முடித்தவுடன் கோகுல் அவளை மாடிக்கு அழைக்க, அவள் தவிப்புடன் அவனது அம்மாவை பார்க்க

'போ ... போய் கொஞ்ச நாழி பேசிண்டு இருந்திட்டு வா போ...' சட்டென உதவிக்கு வந்தார் அவர்.

தயங்கி தயங்கி அவனது அறைக்குள் நுழைந்தாள் அவள். நேர்த்தியாக இருந்த அந்த அழகான அறையை அவள் விழி விரித்து பார்க்க

'எப்படி இருக்கு நம்ம ரூம்???' அவள் முகத்தருகே குனிந்து புன்னகையுடன் கேட்டான் கோகுல்.

அழகான மென் சிரிப்புடன் தலை அசைத்தவள் ஒரு நிமிஷம் என்று தனது சின்ன பையிலிருந்து எதையோ எடுத்தாள். அது ஒரு சின்ன டிபன் பாக்ஸ்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.