(Reading time: 15 - 30 minutes)

'ரி வா ... கிளம்பலாம்...' இருவரும் வீட்டை பூட்டிக்கொண்டு நகர.....

'நீ கேட்ட படகு தேவையான நேரத்தில் உன் கண்ணில் படும்' என்பதாக.... பூஜை அறையில் முதலில் இருந்த புன்னகையில் கொஞ்சமும் மாற்றம் இல்லாமல் நின்றிருந்தான் அந்த மாயக்கண்ணன்

காரில் ஏறி அமர்ந்தவுடன்தான் அக்காவின் கையில் இருந்த அந்த பெரிய பேக்கை பார்த்தாள் கோதை.

'இது எதுக்குகா???'

'அது ... ஆபீஸ் பேக்மா.... லேப்டாப் இருக்கு..'

கார் நகர்ந்தது. தனது கண்ணில் இருந்து மறையும் வரை தனது வீட்டை பார்த்தபடியே சென்றாள் வேதா.

மூன்றாவது முறையாக முயன்ற கவிதாவுக்கு இணைப்பு கிடைக்கவில்லை. வீட்டு எண்ணுக்கு அழைத்து பார்க்கும் எண்ணத்துடன் அந்த எண்ணை தேடி பிடித்து அழைக்க, எந்த பலனும் இல்லை. ஒலித்துக்கொண்டே இருந்தது அது. தோற்றுப்போனவளாக கைப்பேசியை மேஜை மீது வைத்து விட்டு சில நொடிகள் கண்களை மூடிக்கொண்டு அமர்ந்தாள் கவிதா.'

'வீட்டிலும் யாரும் இல்லையா? எங்கே போனார்கள் எல்லாரும்? ஒரு வேளை குடும்பத்துடன் எங்காவது சென்றிருக்கிறார்களா? அதனால் தான் விடுப்பு எடுத்து இருக்கிறாளா அவள்???

தே நேரத்தில் அங்கே கும்பகோணத்தில் கோவிலில் இருந்தார் தந்தை. பெண்கள் திருமணத்திற்கு முன்னால் அவர்கள் வீட்டுக்கு செல்வதில் கொஞ்சமும் உடன்பாடு இல்லை அவருக்கு.

நேற்று இரவு தன்னிடம் பேசிய வாசுதேவனிடம் அதைத்தான் சொன்னார் அவர்.

'கல்யாணத்துக்கு முன்னாடி எதுக்கு அவா உங்காத்துக்கு வந்திண்டு. கல்யாணதுக்கு அப்புறம் எல்லாம் பேஷா நடக்கட்டும். யார் கேட்க போறா?'

'என்ன பேசறேள்? இதுவரைக்கும் கோதை நம்மாத்துக்கு வந்ததே இல்லையான்ன? அவா நம்மாத்து குழந்தைகள். எப்போ வேணும்னாலும் ஆத்துக்கு வரலாம். போலாம். அதுவும் இல்லாம வேதாவை யாரும் பார்க்கலையோன்னோ??? அதனாலே எல்லாரும் . பார்க்கணும்ன்னு ஆசைபடறா. இதிலே என்ன இருக்கு? நீங்க கவலை படாமே ஹோமத்தை முடிச்சிட்டு வாங்கோ' விஷயத்தை முடித்திருந்தார் அவர். அதற்கு மேல் அவரை எதிர்த்து பேசுவதற்கு இயலவில்லை இவரால்.

அவர் பேசி சில நிமிடங்கள் கழித்து, கோதை  வீட்டு தொலைப்பேசியிலிருந்து அழைப்பு வந்தது. அழைத்தது கோதை.

'அப்பா...'

'சொல்லுமா...'

'அது... அது வந்து பா அவாத்திலே... அவருக்கு பிறந்தநாளாம்பா நாளைக்கு. அதனாலே எங்களை...'

'பேசினார்மா வாசுதேவன்...'

'நாங்க போயிட்டு வரவாபா.??? பத்திரமா போயிட்டு வந்திடுவோம்...' மகள் தயங்கி தயங்கி கேட்ட விதத்தில் மறுக்க வேண்டும் என்று நினைக்க கூட முடியவில்லை அவரால்.

ஆனால் இப்போது ஏதோ ஒரு மன உளைச்சல் அவரை வருத்திக்கொண்டிருந்தது. கைப்பேசியை எடுத்து வேதாவின் எண்ணை அழைத்தார். அது அணைக்க பட்டு இருந்தது.

கோதையிடம் ஒரு கைப்பேசி இருக்கிறதே?? யோசித்தவருக்கு அந்த எண் தெரியவில்லை. அதை வாங்கிக்கொண்டிருக்கவில்லை அவர். பல முறை யோசித்த பிறகு வாசுதேவன் எண்ணை அழைத்தார் அப்பா.

'சொல்லுங்கோ ... நான் கோகுல் பேசறேன்...' அப்பாவின் கைப்பேசி அவனிடம் இருக்க அழைப்பை ஏற்றான் கோகுல்.

'மாப்பிள்ளை.... ரெண்டு பேரும் ஆத்துக்கு வந்துட்டாளா?' கொஞ்சம் தயங்கியபடியே கேட்டார் அப்பா.

'வந்துண்டே இருக்கா. கார் அனுப்பி இருக்கேன். பத்திரமா வந்திடுவா. நீங்க கவலை படாம இருங்கோ ' இதமான குரலில் சொன்னான் கோகுல்.

'அவா வந்ததும் என்கிட்டே பேச சொல்றேளா. நேக்கு வேதா நம்பர் கிடைக்கலை.'

'கண்டிப்பா பேச சொல்றேன். நீங்க ஏன் இவ்வளவு யோசிக்கறேள்? அவா ரெண்டு பேருக்கும் நான் பொறுப்பு...' ஏதோ ஒரு வேகத்தில் சொல்லி விட்டிருந்தான் கோகுல்.

'சரி வெச்சிடறேன்...' வைத்துவிட்டார் அவர்.

பின்னர் தான் சொல்லிய வார்த்தை உறைத்தது அவனுக்கு.

'ரெண்டு பேருக்கும் நான் பொறுப்பா? பெருமாளே!!! உளறிட்டேனா?? டேய்... கோகுல்.... பேச்சை குறைடா...டேய்.... தனக்குள்ளே புலம்பியபடியே நகர்ந்தான் கோகுல்.

றுபடியும் வேதாவின் எண்ணை முயன்று தோற்று ஒரு முடிவுக்கு வந்தவளாக தான் இணையத்தில் பார்த்த கோகுல் குடும்பத்தின் புகைப்படத்தையும் அவள் தெரிந்துக்கொண்ட உண்மைகளையும் சேர்த்து வேதாவுக்கு ஒரு குறுஞ்செய்தி, வாட்ஸ் ஆப்பில் ஒரு செய்தி, ஒரு ஈ மெயில் என அத்தனையும் தொகுத்து அனுப்பினாள் கவிதா.

'வேதா தனது கைப்பேசியை உயிர்பித்த மாத்திரத்தில் அவளை உண்மைகள் சென்று அடைந்தாக வேண்டும்'

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.