(Reading time: 19 - 37 minutes)

ப்பொழுது இவள் மீண்டுமாய் உள்ளே பார்க்க அறையின் உள்பக்கம் பார்வை முடிவில் அமர்ந்திருந்த மரகதம் இவர்களைப் பார்ப்பது அனுவுக்கு தெரிகிறது என்றால் இவள் பார்வையை தொடர்ந்து பார்த்த அதிபன் பார்வையிலும் அம்மா இவர்களைப் பார்ப்பது தெரிகிறது.

மரகதத்தின் பார்வை என்னதான் நடந்து கொண்டிருக்கும் இரண்டாம் மகனின் பெண் பார்க்கும் வைபவத்தை சுற்றிக் கொண்டு இருந்தாலும், அவரது மனம் அவ்வப்போது மூத்த மகனிடம் ஓடிக் கொண்டே தானே இருக்கிறது.

சுழன்ற கண்ணில் அவன் படவில்லை எனும் போது எதை நினைத்து எங்கு நின்று தவித்துக் கொண்டிருக்கிறானோ என அவர் மனம் அலைபாய,  கண்கள் வாசலை அவ்வப்போது தொட்டுத் தொட்டுப் போய்க் கொண்டிருக்கிறதுதான்.

இப்போது அவன் அதுவும் தனியாக இல்லாமல்….துணையுடன்….. அவரது அறிவை மீறி காணும் காட்சியில் ஏதோ ஒரு சந்தோஷமும் சமாதானமும்….

‘கடவுளே இவங்க சேர்றதுதான்  உங்க சித்தம்னா நல்ல படியா முடிச்சு தாங்க…..’ தாய் மனம் அதுவாக வேண்டிக் கொள்கிறது.

என்னதான் அனுவை பிடித்திருந்தாலும் மற்ற நேரமாய் இருந்தால் அவரால் இப்படி நினைத்திருக்க முடியுமா என தெரியவில்லை…. வெவ்வேறு நாடு கலாச்சாரம் என எல்லா பிரிவும் பெரிதாக தோன்றி இருக்கும்தான். ஆனால் அதிபனின் பிடிவாத குணம் அறிந்தவர் அல்லவா அவர். எங்கே அவன் பிடிவாதமாய் திருமணமே செய்யாமல் தனியாக நின்றிடுவானோ என தவித்துக் கொண்டிருக்கும் போது கண்ணில் விழும் இந்த காட்சி இப்படித்தான் அவரை சிந்திக்க தூண்டுகிறது.

“அம்மா கூப்டுற மாதிரி இருக்குது உள்ள போ அனு….” அதிபனின் இவ்வார்த்தைகள் ஒரு வகையில் கெஞ்சல்.

இப்பொழுது அவனோடு உள்ளே நுழைந்தாள் அனுகா.

உள்ளே நுழைந்தவுடன் அந்த மெகா சைஸ் ஹாலின் வாசலை ஒட்டி கிடந்த அந்த சோஃபாவில் சென்று அமர்ந்தாள் அவள். நிச்சயமாய் அங்கிருந்து பார்க்க நடக்கும் நிகழ்ச்சிகள் எதுவும் பெரிதாக தெரியாது.

அவள் தன் அம்மாவுடன் சென்று அமர்ந்தால் அம்மா இவள் இருவருமே இலகுவாக உணர்வார்கள் என்று அதிபன் நினைத்தான் தான், ஆனால் அத்தனை கூட்டத்தில் இத்தனை தயங்குபவளை முன்னே போகச் சொல்லவும் அவனுக்கு மனமில்லை. 

 அவள் அங்கே அமரவும் சற்று தள்ளி  நின்று கொண்டான் அதிபன். நின்றால் தான் இங்கிருந்து விழா நிகழ்வுகளை பார்க்க முடியும்.

அதற்குள் இவன் அருகில் பேச்சு சத்தம். “ஓ இதுதான் மில்காரங்க வீட்டு பெரிய மருமகளா? ….. பையன் வெளிநாட்ல இருந்து வெள்ளக்காரிய கூட்டிட்டு வந்துட்டான் போல.. அதான் மூத்த மருமக பத்தி எதுவும் பேசிக்கலை போல…..” ஏதோ ஒரு பெண் சொல்லிக் கொண்டு போக

‘இப்ப எதுக்கு இந்த கமெண்ட்….’ என இவன் திரும்பிப் பார்க்கும் போது, அனு வீட்டின் வாசலை தாண்டிக் கொண்டிருந்தாள். இனி அவளை உள்ளே வர வைக்க முடியும் என்று அதிபனுக்கு தோன்றவில்லை… சுற்று முற்றும் பார்த்தான் ஆரவ் குட்டிதான் குட்டி வேஷ்டி சட்டையில் க்யூட்டாக அங்கு ஓடிக் கொண்டிருந்தார். 

“குட்டிபா அங்கிள்க்கு ஒரு ஹெல்ப் பண்ணுவீங்களா ப்ளீஸ்….” இவனது வார்த்தையில் குழந்தை இவனிடமாக வந்தான்.

“சின்ன ஹெல்பா பெதிய ஹெல்பா?” கையிலிருந்த ஹெலிகாப்டர் டாயின் மேலே கண்ணை வைத்துக் கொண்டே விசாரித்தார் குட்டி சண்டியர்.

குழந்தை முன் முழந்தாளிட்டு அமர்ந்த அதிபன் “ரொம்ப பெரிய ஹெல்ப் குட்டிபா…. அங்கிளாலயே செய்ய முடியாது அவ்ளவு பெரிய ஹெல்ப்….”

“ஓ அப்ப பெதிய ஹெல்ப்தான்…நான் செய்தேன்…”

“இந்த கீய கொண்டு போய் அந்த ஆன்டி இருக்காங்கல்ல அவங்கட்ட கொடுத்துட்டு கார்லயே வெயிட் பண்ணுவீங்களாம்னு சொல்லிட்டு வருவீங்களா குட்டிபா…”

உடனடியாக கீயை கையில் வாங்கிக் கொண்டாலும் சென்று கொண்டிருக்கும் அனுவையும் அருகில் நிற்கும் அதிபனையும் மாறி மாறி பார்த்துக் கொண்ட ஆரவ் இவனை வலக்கை ஆட்காட்டி ஒற்றை விரலை மட்டுமாய் ஆட்டிக் கூப்பிட்டான்.

வந்த சிரிப்பை இதழ்களில் தேக்கி தன் முகத்தை மட்டும் குழந்தைக்கு இன்னுமாய் அருகில் கொண்டு சென்று புருவங்களை மட்டுமாய் அசைத்து “என்ன?” என்றான் அதிபன் ரகசியம் பேசும் கிசு கிசு குரலில்.

“நம்ம பெதிய ஃப்தெண்ட் நம்மட்ட கோபபட்டாங்கன்னா…..நாமளும் திதும்பி கோப்படுத மாதிதி போய் உட்காந்துக்கனும்…அப்ப அவங்களே நம்மள தேடி வந்து சேத்துப்பாங்க….நான் எப்பவும் நிலுட்ட இப்டித்தான் செய்வேன்….” அவனும் ரகசியம் போன்ற குரலில் சொல்ல முயன்றான்.

சிரித்து விட்டான் அதிபன்.

“ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்….” வாய் மீது ஒற்றை விரல் வைத்துக் காண்பித்தது ஆரவ் குட்டி…. “மீதிய கீ கொடுத்துட்டு வந்து சொல்தேன்…” இப்போது அனுவைப் பார்த்து ஓடினான் அவன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.