(Reading time: 16 - 32 minutes)

பேத்தியை இறுக பிடித்துக்கொண்டவர், “சேஷூ, இதுக்குமேல ஒரு வார்த்தை பேசின, நன்னாயிருக்காது சொல்லிட்டேன்… சே…. நீயும் ஒரு மனுஷனா?... பெத்த பிள்ளையை விரோதியா நினைக்குறீயே?... உனக்கென்ன புத்தி பேதலிச்சு போச்சா?... என் மாட்டுப்பொண்ணு இறந்ததுக்கும், உன் தோப்பனார் இறந்ததுக்கும் என் பேத்தி எப்படி காரணம் ஆவா?... இனியாச்சும் வார்த்தையில விஷம் தடவி பேசுறதை நிறுத்து… பாவம் பச்ச மண்ணு… அவளை அழ வைச்சு பார்க்காத… அப்புறம் அந்த பாவம் உன்னை மட்டும் இல்ல… நம்ம குடும்பத்தையே சும்மா விடாது…” என அவர் கொதிப்புடன் சொல்ல

“இனியும் விடுறதுக்கு என்ன இருக்கு?... அதான் மொத்தமா கொன்னுட்டே இந்த சனியன்… நம்ம குடும்பத்துக்கு தீராத சாபமா வந்து சேர்ந்திருக்கே இது… என்னைக்கு இது ஒழியுதோ அன்னைக்குத்தான் எனக்கு நிம்மதி…” என வார்த்தைகளை மனம் போல் சிதறிவிட்டு செல்ல,

கோகிலவாணி மகனை ஒருவித வெறுப்போடு பார்த்துவிட்டு, நதியை தன் முன் கொண்டு வர, அவள் முகம் அழுது அழுது ஓய்ந்து போயிருந்தது…

“அழாதடீ நதி… உன் தோப்பனாருக்கு புத்தி பேதலிச்சு போச்சு… அவன் பேசினதெல்லாம் நீ மனசுல வச்சுண்டு அழுதுண்டிருக்காத… பாட்டி சொல்லுறதைக் கேளு…” என அவர் அவளின் முகம் துடைத்து விட,

“நான் என் தோப்பனாருக்கு பாரமா இருக்குறேன் போல… என்னையும் அந்த சாமி கொன்னுடட்டும் பாட்டி… அம்மாவை நான் கொல்லலை பாட்டி… தாத்தாவையும் நான் கொல்லலை… அவர்கிட்ட இதை மட்டும் எனக்காக சொல்லிடு பாட்டி… ப்ளீஸ்…” என ஏங்கி ஏங்கி அழுதவள் கோகிலவாணி பேசும் முன் அங்கிருந்து ஓடினாள் தனதறைக்கு…

சித்ரா-சேஷாத்திரி திருமணம் முடிந்து சில நாளிலேயே தனது மாட்டுப்பொண்ணின் பழக்கவழக்கங்கள், அன்பான குணம், அனுசரனையான பேச்சு, என அனைத்தும் பிடித்து போனது கோகிலவாணிக்கு… தனது மகள் போலவே பாசமாக அவளிடம் அவர் நடந்து கொள்ள, மாமியார் மெச்சும் மருமகள் என்ற பேரோடு சேர்த்து மாமனார் மெச்சும் மருமகளாக பேரெடுத்தார் சித்ரா…

அதே நேரம் கணவனின் ஆருயிர் பத்தினியானார் அவர்… சேஷாத்திரி சித்ரா மீது உயிரேயே வைத்திருந்தார்… மனைவியின் மேல் அப்படி ஒரு காதல் அவருக்கு…. தனக்கு நல்ல மனைவியாகவும், வீட்டிற்கு நல்ல மகளாகவும், மருமகளாகவும் அவர் இருப்பதைக் கண்டு பூரித்து போனார் சேஷாத்திரி…

அந்நிலையில் அவர்களின் அன்புக்கு பரிசாக ஒரு உயிரை தனது வயிற்றில் சுமந்தார் சித்ரா… மனைவியை உடன் இருந்து நேரத்துக்கு கவனித்துக்கொண்டார் சேஷாத்திரி…

சித்ராவிற்கு வளைகாப்பு நடத்தும் நேரத்தில், கோகிலவாணியின் கணவர் வேங்கடாத்திரி பக்கவாதம் வந்து படுத்துவிட, வளைகாப்பிற்கு வந்திருந்த சில பெண்மணிகள் வார்த்தைகளை துச்சமென பிரயோகித்தனர்… சித்ரா-சேஷாத்திரியின் அன்பான வாழ்க்கையைப் பார்த்து பொறாமைப்பட்டுக்கொண்டிருந்த அவர்கள், இது தான் சரியான நேரம் என தங்களது வன்மத்தை தீர்த்துக்கொள்ள அவர்கள் முடிவெடுத்தனர்…

“வயிற்றில் இருக்கும்போதே இப்படி படுக்க வைச்சிட்டு குடும்பத்துல மூத்தவரை… இன்னும் இது பொறந்தா யார் யார் உயிரை காவு வாங்குமோ தெரியலை… ஹ்ம்ம்… இந்த குடும்பத்துக்கு இப்படி சாபம் வாங்கின குழந்தை பொறக்கப்போகுதா… பெருமாளே… நீ தான்ப்பா காப்பாத்தணும்…” என கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாமல் சொல்லிவிட்டு செல்ல,

“தான் இருக்கும்போதே தன் குழந்தைக்கு இப்படி ஒரு அவப்பெயரா?... அதுவும் இன்னும் இந்த மண்ணில் கால் பதிக்கும் முன்னரே… பெருமாளே… இது என்ன சோதனை?... ஏன் எதற்காக இப்படி ஒரு நிலைமை?... என் குழந்தையை இப்படி வாய்க்கு வந்த படி பேசுகிறார்களே… இதை எல்லாம் நான் கேட்கத்தானா என்னை இன்னும் உயிரோடு வச்சிண்டிருக்குற?...” என நினைத்து அழுத மாத்திரத்தில் சித்ரா வயிற்றைப் பிடித்துக்கொண்டு சரிய, சேஷாத்திரி துடித்துப்போனார்…

உடனே சித்ராவை, மருத்துவமனைக்குக்கொண்டு செல்ல, பேச்சு மூச்சின்றி இருந்த சித்ராவிற்கு, சுகப்பிரசவம் நடக்க வாய்ப்பே இல்லை… ஆப்பரேஷன் தான் செய்ய வேண்டும் என டாக்டர்கள் கூற, சேஷாத்திரி துவண்டு போனார்…

சற்று நேரத்திலேயே, குழந்தையை சேஷாத்திரியின் கைகளில் கொடுத்த மருத்துவர், “உங்களுக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கு…” என்றதும்,

“என் சித்ரா எப்படி இருக்குறா டாக்டர்?... அவளை நான் பார்க்கலாமா இப்போ?...” என பரிதவிப்புடன் சேஷாத்திரி கேட்க

“ஐ அம் சாரி… குழந்தையை தான் எங்களால காப்பாத்த முடிஞ்சதே தவிர, உங்க மனைவியை காப்ப்பாத்த முடியலை…” என சொல்லிவிட்டு சென்றதும்,

இன்னும் விழி கூட திறக்காத அந்த மென் தளிரை, “சனியன்… என் சித்ராவை கொன்னுட்டே…” என கதறியபடி கோகிலவாணியிடம் ஒப்படைத்துவிட்டு, மனைவியைப் பார்க்க ஓடினார் உள்ளே…

“சித்ரா… என்னை விட்டு போயிட்டீயே… இனி எனக்கு யார் இருக்கா?... அய்யோ… போச்சே எல்லாமே…” என அவர் துக்கத்தை வெளிப்படுத்த,

“இந்த பச்ச மண்ணைப் பார்க்காமலே கண்ணை மூடிட்டியேடீ பாவி… பாருடீ… உன்னை அப்படியே உரிச்சு வச்சிருக்கா… இவ வளர்ந்து நாளைக்கு அம்மா எங்கன்னு கேட்டா நான் என்னடீ பதில் சொல்லுவேன்… அய்யோ…” என கோகிலவாணி அழ,

“அம்மாவா?... அதுதான் மொத்தமா கொன்னுட்டே இந்த சைத்தான்… இது என் சித்ரா மாதிரி இருக்குதா?.. சீ அப்படி இனி என்னைக்கும் சொல்லிடாத… இது என் சித்ராவை கொன்ன பாவி… சனியன்…” என அவர் கொலைவெறியோடு அந்த குழந்தையை நெருங்க,

வீட்டில் முடியாமல் இருந்த வேங்கடாத்திரி திடீரென தவறிவிட்டதாக பக்கத்து வீட்டு நண்பர் ஒருவர் வந்து சொல்ல, சுத்தமாய் நொறுங்கி போனார் சேஷாத்திரி…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.