(Reading time: 15 - 30 minutes)

'ம்... ஆங் ... ஆமாம் மாமா... கும்பகோணம் போயிருக்கார் அப்பா...' தடுமாறி வெளிவந்தது வேதாவின் குரல்.

'அது சரி..... நீ எங்கே இங்கே???'  வந்தது அடுத்த கேள்வி.

'அது நான் ஃபிரண்ட்ஸோட... சும்மா பிக்னிக் வந்தேன். இங்கே... அதான் இங்கே பெருமாள் சேவிக்கலாம்ன்னு...'  எப்படியோ சமாளித்தாள் அவள்.

'வா வா நன்னா சேவிச்சுக்கோ பெருமாளை...' என்றபடி கண்ணனுக்கு கற்பூர ஆரத்தியை காட்டிவிட்டு தட்டுடன் வெளியே வந்தார் ராஜகோபாலன். அதன் பின் அவர் கொடுத்த தீர்த்தத்தை வாங்கிக்கொண்ட படியே

'கோவில் ரொம்ப அழகா இருக்கு மாமா' என்றாள் வேதா. அவள் இருந்த மனநிலையும் தாண்டி அந்த கோவிலின் அழகை ரசிக்காமல் இருக்க முடியவில்லை அவளால்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

ஜெய்யின் "ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

'பழைய காலத்து கோவில்தாம்மா இதுவும். சில வருஷம் முன்னாடி வரைக்கும் ரொம்ப பாழடைஞ்சு போயிருந்தது. பெருமாளுக்கு தினமும் பூ கூட சாத்த முடியலை.  நீ ஜி.கே க்ரூப்ஸ் வாசுதேவன் கேள்விப்பட்டிருக்கியோ?? நோக்கு தெரிஞ்சிருக்குமே... உங்க அப்பா தானே அவாத்து வாத்தியார்...' அவர் சொல்ல ஆச்சரியத்துடன் விரிந்தன வேதாவின் விழிகள்.

'அவா தான்  ஹெல்ப் பண்ணி இந்த கோவிலை இப்படி மாத்தினா.... இது மாதிரி நிறைய கோவில்களுக்கு  ஹெல்ப் பண்றா  மா.. அவா .' அவர் சொல்ல முகம் மலர்ந்து போனது வேதாவுக்கு.

ஜி.கே க்ரூப்ஸா??? 'என் கோகுலின் குடும்பமா??? இத்தனை பக்தி நிறைந்த குடும்பத்தில் வந்தவன் என்னை ஏமாற்றுவானா??? மாட்டான். நிச்சியமாக மாட்டான்.....' சன்னதியில்  சிரித்துக்கொண்டிருந்த கண்ணனை பார்த்து சந்தோஷமாக புன்னகைத்தாள் அவள்.

'காலையில் என் மனதில் இருந்த குழப்பத்தை தீர்த்து வைத்து விட்டாய் கண்ணா...'

'நான் கிளம்பறேன் மாமா....' அவள் மகிழ்ச்சியுடன் கிளம்ப தயாராக..

'இரும்மா.. பிரசாதம் சாப்பிட்டு போ... கோவிலுக்கு வந்தா கொஞ்ச நாழி உட்காரணும்... உட்கார்ந்து கண்ணனோட பேசிட்டு போ... இரு இதோ வரேன்..' உள்ளே சென்றார் ராஜகோபாலன். கண்ணனையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள் வேதா.

சில நிமிடங்கள் கழித்து பிரசாதத்துடன் வெளியில் வந்தார் அவர். அதை அவள் வாங்கிக்கொள்ள, அவளது இன்னொரு கையில் இருந்த குங்குமத்தை பார்த்து விட்டு....

'குங்குமம் மடிச்சுக்க பேப்பர் வேணுமா... இரு தரேன் இரு...' என்றபடியே அங்கே ஓரமாக இருந்த ஒரு நோட்டு புத்தகத்தை எடுத்தார் ராஜகோபாலன். அவர் அதை திறக்க அதிலிருந்து நழுவி அங்கே அமர்ந்திருந்தவளின் மடியில் வந்து விழுந்தது அது!!

அந்த புகைப்படம்!!! அதை எடுத்து பார்த்தாள் வேதா!!!

இங்கே கெஸ்ட் ஹௌசில் வேதா தங்கி இருந்த அறைக்கதவு திறந்து இருக்க, கொஞ்சம் அதிர்ந்து போனான் உள்ளே எட்டிப்பார்த்த விக்கி.

'எங்கே போனாள் இவள்???' கெஸ்ட் ஹவுஸ் முழுவதும் தேடி விட்டு கேட் அருகில் நின்றிருந்த செக்யூரிட்டியிடம் வந்தான் அவன்.

அதற்குள் அங்கே கோவிலில்... திகைப்புடன் அந்த புகைப்படத்தையே பார்த்திருந்தாள் வேதா. சன்னதியிலிருந்து அவளையே புன்னகையுடன் பார்த்திருந்தான் அந்த மாயக்கண்ணன்.

அந்த புகைப்படத்தில் இருந்த அந்த வாலிபனை மட்டும் அவளுக்கு நன்றாக அடையாளம் தெரிந்தது. அன்று கோவிலில் இந்த கோகுல் அவளை சந்தித்த நிகழ்வு கூட மனதிலாடியது.

'இது கோகுல் ஆயிற்றே!!!! நம் கோதைக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை ஆயிற்றே!!!!!

அவனுடன் அந்த புகைப்படத்தில் இருந்த அந்த மற்றவர்களின் முகமும் எங்கோ பார்த்தது போலே தோன்றியது அவளுக்கு..' ராஜகோபாலன் கையில் துண்டு காகிதத்துடன் திரும்ப மெல்ல எழுந்தவள் கேட்டாள்

'இவா யாரு மாமா...'

'என்னமா இப்படி கேக்கறே??? இவாதான் நான் அப்போ சொன்னேனே... ஜி.கே க்ரூப்ஸ் வாசுதேவன்.... அவா குடும்பம் தான்மா... இவர் வாசுதேவன், இது அவாத்து மாமி தேவகி ... இது அவா பையன் கோகுல்.... '

'வாசுதேவன் குடும்பமா... இவன்தான் கோகுலா??? அப்படி என்றால் என்னுடன் பழகியது??? அவள் தலைக்குள்ளே பூகம்பம்..

'மா ... மா இவர் தான் கோ... கோகுலா???? இவாளை எல்லாம் நீங்க நேர்லே பார்த்திருக்கேளா???? அவளது இதயம் தாறுமாறாக துடித்துக்கொண்டிருந்தது.

'ஏம்மா??? நிறைய வாட்டி பார்த்திருக்கேனே... அவாத்துக்கு கூட போயிருக்கேன். சென்னை மாம்பலத்திலே இருக்கா அவா... ' இதயம் வெடித்து போகாதது ஒன்றுதான் குறை வேதாவுக்கு.

'இவ்வளவு தூரம் கோவிலை நன்னா சரி பண்ணி குடுத்திருக்காளே.... அதனாலே இந்த போட்டோவை பெரிசு பண்ணி கோவில்லே எங்கேயாவது ஓரமாவானும் மாட்டி வைக்கலாம்ன்னு அவாத்திலே வேலை பாக்கறவா கிட்டே கேட்டு இதை வாங்கிண்டு வந்தேன். ஆனா அந்த மாமா  கூடவே கூடாதுன்னுட்டார்.. கோவில்லே பெருமாள் மட்டும் தான் இருக்கணும்னுட்டார்... ' அவர் ஏதேதோ சொல்லிக்கொண்டே போக... எதுவுமே அவள் காதில் ஏறவில்லை. புகைப்படத்திலிருந்து அவள் விழிகள் அகலவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.