(Reading time: 23 - 46 minutes)

"ம்மா எப்ப வருவாங்க அத்தே, அப்பா அண்ணா எல்லோரும் என் மேல கோபமா இருக்காங்களா? பிரபாண்ணிய அண்ணா திட்டிட்டானா? ச்சே என்னால எல்லோருக்கும் எவ்வளவு ப்ரோப்ளம்" கண்ணில் நீர் வரட்டுமாவெனத் தேங்கி நின்றது.

" என்னடாம்மா நீ இப்படில்லாம் பேசிட்டு ..." சற்று அதட்டலான குரலில் பேச்சை மாற்ற வைத்தார்.

 மறுபடியும் சேலை விபரம் சொல்ல " நீங்க எது எடுத்தாலும் எனக்கு பிடிக்கும் அத்தே" என்று பதில் கூறினாள்.

" அம்மாவ ஹனிப் பாப்பாவ இங்க கொண்டு வந்து விடச் சொல்றேன். நாங்க வர வரைக்கும் ரெண்டு பேரும் விளையாடிட்டு இருக்கீங்களா?"

 அண்ணன் மகள் வரப் போகிறாள் என்றதும் அவள் முகத்தில் வந்த ஒளிர்வு அவருக்கு திருப்தியைக் கொடுத்தது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

ஸ்ரீயின் "என்னுள் நிறைந்தவனே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

 ஷாப்பிங்க் முடித்து அனைவரும் மாலையில் வீடு வந்துச் சேர்ந்தனர் அனைவரும் இரவு ஜாக்குலின் டெல்லியிலிருந்துப் பேசினாள்." அம்மா நான் நாளைக்குப் புறப்படறேன். உடனே புறப்பட வசதியா அமையல இங்கே உங்க பேரனுக்கு இப்போதான் செமெஸ்டர் நடந்திட்டு இருக்கு. அப்படி என்னாச்சிம்மா? எதுக்கு இப்போ தம்பிக்கு அவசரமா எங்கேஜ்மெண்ட் வச்சிருக்கீங்க? அவன் நெக்ஸ்ட் இயர் தான் கல்யாணம் செஞ்சுப்பேன்னு சொல்லிட்டு இருந்தானே?"

 "அதெல்லாம் சொல்லிட்டு இருக்க இப்போ நேரமில்ல, நீ உடனே புறப்பட்டு வா " என்றவராய் போனை வைத்தார்.

பக்கத்து வீட்டு பரிமளம் வீட்டுக்குள் வந்துக் கொண்டிருப்பதைப் பார்த்து எழுந்து வரவேற்றார்.

வாங்கக்கா..

ம்ம்...

சற்று சாதாரணமாக பேசி கதையளந்த பின் தான் வந்த வேலையை ஆரம்பித்தார் அவர்.

என்ன இந்திரா பையனுக்கு நிச்சயம் வச்சிருக்கியாமே...

ஆமா அக்கா..

எங்களுக்கு அழைப்பு உண்டுமா இல்லையா?..

உங்களை கூப்பிடாமலா அக்கா, பக்கத்தில இருக்கிறவங்களை யெல்லாம் நாளைக்கு கூப்பிடறதா தான் யோசிச்சு வச்சிருந்தோம்.

பார்த்தியா, நீ சொல்லாமலே எனக்கு உன் வீட்டு விபரம் எல்லாம் தெரிஞ்சிருக்கு என்னும் பெருமிதம் அவர் முகத்தில்...

பொண்ணு யாரு...

வேற யாரு அவங்க தங்கச்சி மகதான்...

யாரு அந்த அனிப் பிள்ளயா ...

ஆமா அக்கா...

நான் அந்தப்பிள்ளய உன்வீட்டுல இல்லப் பார்த்தேன், நிச்சயம் ஆகிறதுக்கு முன்னால யாராவது மாமியார் வீட்டுல வந்து இருப்பாங்களா என்ன?

கேட்க வந்ததை கேட்டு விட்ட திருப்தி நிலவியது அந்த பெண்ணின் முக பாவனையில்,

நல்ல வேளை அனிக்கு இவர்கள் பேச்சுக் கேட்டு இருக்காது இந்நேரம் அவள் தூங்கியிருப்பாள் என்று எண்ணிக் கொண்டார் இந்திரா.

அதுக்கென்னக்கா இது அவ மாமா வீடு அவ வந்துப் போறதில என்ன இருக்கு, சின்னப் பிள்ளையிலயே இருந்து இங்கேதான நிறைய நேரம் இருப்பா.... இதைப் போயி பெருசாப் பேசிக்கிட்டு....

அதைக் கேட்டவருக்கு தனக்கு தேவையான பதில் கிடைக்கவில்லை என்ற முகபாவம் தோன்றியது.

"இல்ல, இப்போ அவங்க உங்களை விட வசதி அதிகம், அதான் உங்க வீட்ல பொண்ணை கொடுக்க மாட்டாங்கன்னு தான் பேசிக்குவோம். அதிலயும் ரூபனுக்கு அந்தப் பிள்ளய விட கொஞ்ச வயசு கூட அதினால நாங்க இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கலை".

“ இழவு வீட்டுல பேசுற மாதிரி கல்யாண வீட்டுல வந்துப் பேசுது இந்த பொம்பள" என்றெண்ணி உள்ளூரக் கொதிப்புடன் இருந்தாலும் அந்த தாயின் முகத்தில் சலனமேயில்லை.

 கேட்டுக் கொண்டிருக்கும் இந்திராவின் முகத்தில் ஏதாவது உணர்வுகள் தெரிகிறதா எனத் தேடினார் ஊர்வம்பு பேசும் குழுவிற்கு பிரதிநிதியாக வந்திருந்த அந்தப் பெண்மணி.

கோபம், வெறுப்பு, சலிப்பு, எரிச்சல் என்னும் எந்த உணர்வையும் அங்கே காணமுடியவில்லை சப்பென்றானது அவருக்கு. இதை இப்படியே விட முடியாது, எதையாவது பேசி விபரத்தை தெரிந்துக் கொள்ளாவிட்டால் மண்டை வெடித்து விடும் நிலையில் வந்திருந்ததால்…

 “ அவளக் கட்டிக்கப் போறது ஜீவன்னா கூட பரவாயில்ல ஆனா அந்த ஹாஸ்டல் பிரச்சினைக்கு அப்புறம் ரூபன்னாலே அந்த தாமஸ் அண்ணணுக்கு பிடிக்காதே... கொஞ்ச நாளா அதனால உங்க கூட அவ்வளவா நல்லா பேச்சு வார்த்தைக் கூட இல்லாம இருந்ததே… அப்புறம் எப்படி இந்த கல்யாணத்துக்கு அவர் சம்மதிச்சார்னு தான்….”

பேச்சுக்காகவென்றாலும் ஜீவனை அனியோடு சேர்த்துப் பேசியது, ரூபனை மட்டம் தட்டியது எல்லாம் அளவுக் கடந்த கோபத்தை தூண்டி விட்டிருந்தாலும் மறுபடியும் மௌனம் காத்தார் அவர்.

 "இருங்க அக்கா உங்களுக்கு காஃபி கொண்டு வரேன்", என்றுச் சொல்லி நகர்ந்தார். 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.