(Reading time: 23 - 46 minutes)

"னக்கெல்லாம் என்ன பதில் சொல்றது? நீ இதுவரைப் பேசியது பேசியது போதும் கிளம்பு" என்பதுப் போல இருந்தது அவரது நடவடிக்கை.

 இந்திரா கொடுத்த ட்ரீட்மெண்ட்டில் "ம்க்கும் ரொம்ப அழுத்தம் தான்" என மனதில் நொடித்துக் கொண்டவராக திரும்பினார் அந்த ஊர்வம்பு பெண்மணி..

 இந்திராவுக்கு அவர் கிளப்பிச் சென்ற எரிச்சல் தீரவே வழியில்லாமல் ஆயிற்று. அதென்ன எல்லோரும் இந்த ஒன்றையேச் சொல்லி அவனை மட்டம் தட்டும் படி ஆயிற்று. மனிதன் தவறே செய்யாமலிருக்க முடியுமா? ஒரு முறை ஒருவன் செய்த தவறை சுட்டிக் காட்டி காட்டி அவனை நிரந்தரமாக மனதளவில் முடமாக்க வேண்டிய தேவையென்ன? அதிலும் ரூபன் தன்னை அறியாமல் செய்த தவறுக்காக எத்தனை அவமானப் பட்டிருப்பான். 

 இப்போது சுயபுத்தியோடு திடமாக பிரச்சினைகளை எதிர் கொண்டது போல நான் அப்போது ஏன் எதிர் கொள்ளவில்லை? எது என்னைத் தடுத்தது. பிறரிடம் அறிவுரைக் கேட்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும், ஆனால், முடிவு எடுப்பது நாம் தானே எடுக்க வேண்டும். எனக்கு ஏன் அது முன்பு தெரியாமல் போயிற்று? என நொந்துக் கொண்டார்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

மீராவின் "கிருஷ்ணசகி" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

 ரூபன் ஹாஸ்டல் செல்லும் முன் வேண்டாமென்று அழுதது அவர் கண்முன் வந்து நின்றது. மற்றப் பிள்ளைகளைப் போல என்னுடன் வைத்துக் கொள்ளாமல் நான் ஏன் அவனை அங்கு படிக்க அனுப்பினேன் என எண்ணியவரின் சிந்தனை பின்னோக்கி பயணித்தது.

 அப்போது இந்திராவின் கணவர் வெளிநாட்டில் பணிபுரியச் சென்று ஓரிரு வருடங்கள் ஆகியிருந்தன. வருடத்திற்கு ஒரு முறை ஓரிரு வாரங்கள் அவர் வந்துச் செல்வது வழக்கம். எல்லாமே நன்றாகச் சென்றுக் கொண்டிருக்கையில் திடீரென ஜீவனுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. பிறந்ததிலிருந்தே நோஞ்சானாக இருந்த அவனுக்கு மூளையில் சின்னதான ஒரு பாதிப்பு எனக் கண்டறியப் பட்டது, அது சரிப் படுத்தக் கூடியதும், ஓரிரு வருடங்கள் தொடர்ந்து மருந்து உட்கொண்டு வர முற்றிலும் குணமாகக் கூடியதும் என அறிந்துக் கொள்ளவே அவர்களுக்கு ஒரு ஆண்டு ஆயிற்று.

 ஒரு தாய்க்கு தன்னுடைய எல்லாக் குழந்தைகளுமே உயிருக்கு நிகரானவை என்றாலும், அதில் ஒரு குழந்தைக்கு மட்டும் ஏதேனும் துன்பம் வருகையில் தன்னுடைய மற்ற குழந்தைகளைக் கூட மறந்து அந்தக் குழந்தையின் பின்னே தான் அவள் மனம் நிலைக்கும். அங்கே நிகழ்ந்ததும் அதுவேதான்.

 ஜாக்குலினும், தீபனும் பெரியப் பிள்ளைகளாக தங்கள் வேலைகளை செய்துக் கொள்பவர்களாக இருந்ததால் அவருக்கு அவர்களுக்காக நேரம் செலவழிக்க தேவை ஏற்படவில்லை. ரூபனைக் குறித்தும் அவருக்கு எப்போதும் எந்த சிரமமும் தோன்றியதில்லை. சிறு வயதிலிருந்தே அவனுக்கு எந்த உடல் நலக்குறைவும் ஏற்ப்பட்டதில்லை என்பதோடு, படிப்பிலும் சிறந்தவனாக இருந்ததால் அவனைக் குறித்து பொதுவாகவே அவருக்கு கவலை எதுவும் இல்லை என்றேச் சொல்ல வேண்டும்.

 ஆனால், ரூபனைக் குறித்து கவலைப் பட வேண்டிய நாளும் வந்தது. அவனின் ஸ்கூலில் இருந்து அவன் பெற்றோரை அழைத்து வரச் சொல்லி அழைப்பு வந்தது. அங்குச் சென்று அவனுடைய பிரின்ஸிபலைச் சந்தித்த போது அவனைக் குறித்து அவர் மிக நல்ல விதமாகவே கூறினார். சமீப காலமாக அவனுடைய மார்க்குகள் எதிர்பார்ப்பிற்கு குறைவாகவே இருப்பதாக சுட்டிக் காட்டினார். அவன் ஸ்கூலின் மிகவும் நன்றாக படிக்கும் மாணவன் என்பதால் ஏதாவது பிரச்சினை இருக்குமானால் அதை அவன் பெற்றோருக்குச் சொல்ல வேண்டிய கடமை இருப்பதால் கூப்பிட்டு அனுப்பியதாக கூறினார்.

 அவரின் பேச்சைக் கேட்டு வந்தவருக்கு தான் சின்னவன் மேல் மட்டுமே கவனம் செலுத்துவதும், ரூபனைக் கவனிக்க நேரம் எடுத்துக் கொள்ளாமல் இருப்பதுமே காரணம் என்றுத் தெள்ளத் தெளிவாகப் புரிந்தது. ஆனால், அவரும் என்னச் செய்வார், சமீபத்தில் தான் ஜீவனின் ட்ரீட்மெண்ட் இன்னும் சில வருடங்கள் கூடுதலாக எடுத்துக் கொள்ளும் என்று தெரியவும் வந்திருந்தது. ராஜ் தன்னுடைய வேலையை மாறுதல் வாங்கி வர முடியாத சூழ்நிலையில் இருந்தார்.

 தன்னுடைய கவலையை சாராவுடன் பகிர்ந்துக் கொண்டிருந்த போது தான் தாமஸ் தன் அலுவலிலிருந்து திரும்பி வந்திருந்தார். அவர் சில வருடங்களுக்கு முன்பாகவே தன்னுடைய அரசாங்க வேலையை விட்டு விட்டு அரசாங்க கட்டிடங்களை கட்டிக் கொடுக்கும் காண்டிராக்ட்களை எடுத்து நடத்திக் கொண்டிருந்தார். 

 ராஜின் குடும்பம் கிராமத்து பராம்பரியம் மிக்கது என்றால், தாமஸின் உறவினர்களோ பெரிய தொழிலதிபர்களாக இருந்தனர். அவர்களின் துணை மற்றும் தன்னுடைய அரசாங்க வேலை மூலம் கிடைத்த அரசியல்வாதிகள், பெரிய மனிதர்களின் ஆதரவை தகுந்த நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளும் சூட்சுமம் தெரிந்தவராக இருந்தார்.எனவே, ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறினாலும் தற்போது தாமஸ் வெற்றியின் படிக்கட்டுக்களில் ஏறிக் கொண்டு இருந்தார்.

 அவருடைய வெற்றிகள் அவருக்கு மிகவும் தன்னம்பிக்கையை ஏற்படுத்தி இருந்தது. பிறருக்கு உதவி செய்வதில் எப்போதும் முன் நிற்கிறவர்தான் ஆனாலும், அவரிடம் ஆலோசனைக் கேட்பவர்கள் அவர் சொல்வதை அப்படியேக் கேட்டுப் பின்பற்ற வேண்டும் என்ற ஆதிக்க மனப்பான்மை அவரில் உண்டு. யாரைக் குறித்தும் ஒரு முறை ஏதாவது அறிய வந்தால் அந்த ஒன்றிலேயே நிலைத்திருக்கும் குணம் அவருக்கு. எவனொருவன் நல்லவனாக அறியப் படுகின்றானோ அவனை கண்ணை மூடிக் கொண்டு நம்புவார். அதே நேரம் ஒரு முறை யார் மீதாவது நம்பிக்கை இழந்து விட்டால் வாழ் நாள் முழுக்க அந்த மனிதனை நம்ப மாட்டார் இப்படி அவரைக் குறித்துச் சொல்லிக் கொண்டேப் போகலாம். 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.