(Reading time: 29 - 57 minutes)

 “ட்ரெஸ் மாத்தனும்னா மாத்திக்கோ….சேரின்னுதான் இல்ல…. உன் வசதிப்படி எதுனாலும்…….” இவன் சொல்லிக் கொண்டிருக்க இன்று வெகு நேரத்திற்குப் பின் இப்போது அவனை முறைத்தாள்…

“இல்ல பொண்ணு….நம்ம வீட்டு பார்க்கிங்லயே கார்ல ஏறிடுவ……அங்க போய்தான இறங்குவ….. ஜீன் கூட போடலாம்….அங்க அது வசதியா இருக்கும்….”

வெண் நிற ஷிஃபானில் பிஸ்தா க்ரீன் நிற பூக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தெளித்திருந்த ஒரு ஃப்ளேர்ட், வி ஹிப்ட்  சல்வார் செட் அணிந்து அடுத்த 15 வது நிமிடம் அவனோடு அவனது SUV யில் கிளம்பி இருந்தாள் வினி….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

சித்ராவின் "நெஞ்சோரமா என் நெஞ்சோரமா..." - காதல் கலந்த குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்...

டுத்து ஆற்றின் குறுக்காக ஓடிய ஒரு பாலத்தின்  அருகில், சாலையிலிருந்து இறங்கி பாதை இல்லா அந்த மண் பரப்பில், கரையில்லா ஆற்றுக்கு பக்கவாட்டில் அவன் காரை செலுத்த ஆரம்பித்த நேரம் மஞ்சள் வெயில் சிந்தியபடி மறைய தொடங்கி இருந்தான் ஆதவன்….

“இந்த இடத்தை ஆத்தங்கரை வயல்னு சொல்லுவோம்……” என்றபடி அவன் காரை நிறுத்திய இடம் ஆற்றின் அருகில் இருந்த ஒரு மேடு….

கண் கண்ட காட்சியை சுற்றிப் பார்த்தாள் நிலவினி….இரு புறமும் இளம் பச்சை நிற புதர்காடு….. ஆங்காங்கு பெயர் தெரியா பெரு மரங்கள்….. அதை தொடர்ந்து நெல்வயல். பார்வை தொடும் தூரத்தில் இரண்டு மலை குன்றுகளுக்கு இடையே வளைந்தது ஆறு.

ஆட்கள் என்று இவர்களை தவிர எங்குமே யாருமே இல்லை….. ரம்யம் அது அத்தனையிலும் நிறைந்து வழிந்தது…..  

“இந்த இடம் எனக்கு ரொம்பவே பிடிக்கும் வினு” என்றபடி காரைவிட்டு அவன் இறங்க…. இவள் புற கதவை திறந்து இறங்கிய இவளுக்கும் பிடித்திருக்கிறது இந்த இடமும் இந்த நொடியும்….

காரின் பின்  கதவை திறந்து மூடிவிட்டு….காரை சுற்றி இவளிடமாக வந்தவன் எடுத்து நீட்டியது….. இடைவெளியின்றி நெருக்கி தொடுத்த முல்லை பூ சரம்…..

‘இது இவளுக்கு பிடிக்கும்னு இவனுக்கு யாரு சொன்னா…..’ என்ற நினைவோடு அவனை நிமிர்ந்து பார்த்தாள் நிலவினி…

“சல்வார் போடுறப்ப பூ வைப்பதான…? “ அவன் கேள்விக்கு பதிலாக அதை வாங்கி தலையில் சூட தொடங்கினாலும்….

“என்னை எப்டி தெரியும் உங்களுக்கு…?” ஆவலாக கேட்டாள். “எங்க பார்த்தீங்க என்னை….? காலேஜ்லயா…. அங்க நான் அவ்ளவா பூ வச்சுறுக்க மாட்டேனே…?” அவன் எப்போது இவளை விரும்ப தொடங்கினான் என்று தெரிந்து கொள்ளும் ஆவல் இவளுக்கும் இருக்கும் தானே….

யவியோ கண் சிமிட்டினான் இப்போது…. “அதெல்லாம் கண்டிப்பா சொல்லுவேன்……ஆனா அதுக்கு முன்ன நீ போன டைம் பாதியில விட்ட கதைய சொல்லி முடி….. பல்ப் வாங்குனா மீதிய சொல்லுவேன்னு ஒத்துகிட்டு இருக்க…”

இப்போது வீட்டில் வைத்து சொன்ன பல்ப் பதத்துக்கும் சேர்த்து முறைத்தாள் இவள்…. முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு எதிர் திசையில் வேகமாக நடக்கவும் தொடங்கினாள்….. ‘இருக்குடா உனக்கு இதுக்கும் சேர்த்து கவனிச்சுகிறேன்…’

ஆற்றின் நீரை தொட்டபடி கிடந்த இரண்டு பாறைகளில் ஒன்றில் போய் நின்று கொண்டாள்….அதை தாண்டி போக முடியாதே….. அதுக்கு பொண்னுக்கு ஸ்விம்மிங் தெரியனுமே…..

“ஹேய் நீயுமா…” என்றபடி இப்போது இவளுக்கு அடுத்த பாறையில் வந்து நின்றான் அவன்….

என்னது இவளுமா….புரியாமல் அதற்குமாக அவனை முறைத்தாள்…

“இல்ல இந்த இரண்டு பறையும் பார்க்க அப்டியே ஜெயின்ட் பொடேடோ மாதிரி இருக்குதுல்ல…… சின்ன வயசில இங்க வர்றப்பல்லாம் இதுக்கு நாங்க மூனு பேரும் போட்டி போடுவோம்….யார் முதல்ல வந்து இதப் பிடிக்கிறாங்கன்னு….”

அவனோட சைல்ட் ஹூட் பத்திலாம் இதுவரை ரெண்டு பேருமே பேசிக்கொண்டது கிடையாதே…..ஆசையாகவே கவனிக்க தோன்றியது இவளுக்கு….ஆனாலும் அதெல்லாம் காமிச்சுகலாமா…..கூடாதே….

“நீ நிக்றியே அதுதான் என்னோடது……” சொன்னபடி இப்போது இவள் நின்ற பாறைக்கே மாறி வந்தான்.

இத்தனை சின்ன பாறையில் இவளுக்கு பின்னால் மிக மிக அருகில் அவன்…..  “ஈவ்னிங் டைம் பூ ஸ்மெல் ரொம்ப நல்லா இருக்குதுல்ல…..” அவன் தான்.

இப்போது திரும்பி அவனைப் பார்த்தாள் நிலவினி….. முறைக்க நினைத்தாள். கோபமா இருக்கேன்னு காமிக்றதுதான் அவளோட ப்ளான்…..ஆனாலும் அந்த மஞ்சள் மாலை நேரத்திற்கும்… இந்த புது முல்லை வாசத்திற்கும்….. அவனது அத்தனை அருகாமைக்கும்….  காற்றோடு  போராடிக் கொண்டிருந்த அவன் கற்றை முடியில் கட்டவிழ்ந்து இவள் மனம் கலைய…. அவசரமாய் திரும்பிக் கொண்டாள்.….

“ ரொம்ப சார்மிங்கா இருக்கேன்ல….” தன் சீண்டலுக்கு வந்திருந்தான் அவன் இப்போது. பின்னே அவனை இப்டி சைட் அடிச்சுட்டு திரும்பிகிட்டா அவன் கேட்க மாட்டானாமா?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.