(Reading time: 19 - 38 minutes)

தைஜூவை அழைத்துக்கொண்டு மாடிப்படிகளில் கீழிறங்க ஆரம்பித்தவளின் பார்வை ஜெய்யைத் தேட, அவன் இஷானோடு அமர்ந்திருப்பது தெரிந்தது…

“இதோ தைஜூவும் வந்தாச்சு…” என்ற குரலில் அனைவரும் திரும்பி பார்க்க, இஷான் அப்படியே மெய் மறந்து போனான்…

அவனின் முகத்தினைப் பார்த்த ஜெய், “வாயை மூடுடா… தண்ணி அருவியா கொட்டிட போகுது…” என கலாய்க்க,

“போடா… உனக்கு பொறாமை…” என அவனை வெட்கம் கொண்டு இடித்தான் இஷான்…

“டேய்… இங்கப்பாரு… வெட்கப்படுறேங்குற பேரில் பொறைமைன்னு சொல்லி என் பொறுமையை சோதிக்காத… சொல்லிட்டேன்…” என அவன் முறைக்க,

“விடுடா… விடுடா… ஒருநாள் தான… ஃப்ரெண்டுக்காக அட்ஜஸ்ட் செய்யக்கூடாதா நீ?...”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...

படிக்க தவறாதீர்கள்... 

“டேய்…” என ஆரம்பித்தவன், தைஜூவை பார்த்ததும், “போய்த்தொலை… ஒருநாள் தான… அதுவும் என் தங்கச்சிக்காக விடுறேன்…” என சொன்னதும்,

“எது தங்கச்சியா?... இது எப்போ இருந்து?... சொல்லவே இல்ல நீ எங்கிட்ட?...” என இஷான் ஆச்சரியத்தில் விழிக்க,

“நீ கேட்கவே இல்லையே…” என கையை விரித்ததும், சிரித்த இஷானின் தோளைப் பற்றிக்கொண்டு,

“ஜோக்ஸ் அபார்ட், தைஜூ எனக்கு தங்கை தாண்டா… இன்ஃபாக்ட் நீ அவளைப் பத்தி பேசும்போதெல்லாம், ஓ… என் தங்கச்சியான்னு தான் மனசுல நினைச்சிப்பேன்… வெளியே உங்கிட்டேயும் சரி, அவகிட்டேயும் சரி நான் சொல்லிக்கிட்டதில்லை… அவ்வளவுதான்…” என அவன் மெதுவாக சொல்ல,

இஷான் தன் மீது போட்டிருந்த ஜெய்யின் கைகளை அழுத்தி பிடித்தான் சிரிப்புடன் கூடிய திருப்தியோடு லேசாய் கண் கலங்க…

அவனது விழியைக் கண்ட ஜெய், அவனை இலகுவாக்க, “இங்க பாருடா… இப்பவே சொல்லுறேன் நல்லா கேட்டுக்கோ… என் தங்கச்சி பேச்சுக்கு மறுபேச்சு பேசினன்னு தெரிஞ்சது, மகனே உள்ளே தூக்கி வச்சு முட்டிக்கு முட்டி தட்டிடுவேன் பார்த்துக்கோ… பி கேர்ஃபுல்…” என போலியாய் விரலை நீட்டி மிரட்ட,

“இதோடா…. பாசமலர் சிவாஜிகணேசன் வந்துட்டார்…” என சிரித்தான் இஷான்…

“சரி… சரி… நீ உன் வேலையை நீ கண்டின்யூ பண்ணு… பட் வாட்டர் ஃபால்ஸ் விழாம பண்ணு… சரியா?..”

“டேய்… நீயும் ஒருநாள் இப்படி ஏக்கத்தோடு என் தங்கச்சியை பார்க்கலைன்னா பாரு…” என சொல்லிவிட்டு இஷான் தைஜூவைப் பார்க்க ஆரம்பிக்க,

அவன் சொன்னதின் அர்த்தம் புரிந்து, “வாட்?......” என்ற வார்த்தை தன்னை மீறி வெளிவந்தது ஜெய்க்கு…

ஜெய்யின் வார்த்தைகள் எதுவும் இஷானின் காதில் விழுந்ததாய் தெரியவில்லை… அவன்தான் அங்கே தைஜூவிடத்தில் காதலில் விழுந்து கொண்டிருக்கிறானே…… பின்னே எப்படி மற்றவர்கள் பேசுவது அவன் காதில் ஏறும்?..

தைஜூவை தன் தங்கை என சொன்னது போல் தனக்கு வரப்போகும் மனைவியை அவனது தங்கை என சொல்கிறான் போலும்… என எண்ணிக்கொண்ட ஜெய்க்கு லேசாய் மனம் தடுமாறித்தான் போனது ஒரு விநாடி என்றாலும், அது சதி என்று நினைத்து…

பின்னே சதி தானே இஷானின் தங்கை… சட்டென்று என் தங்கையை பார்க்கலைன்னா பாரு… என சொன்னால் அவனும் சதி என்று தானே பொருள் கொள்வான்… ஆனால் சற்று நேரத்திலேயே விளங்கியது அவன் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்று…

எனினும் சொன்ன வார்த்தைகளை திரும்ப பெற்றுக்கொள்ளும் மிகப்பெரிய வரம் இன்னும் யாருக்கும் கிடைக்கப்படவில்லை என்ற உண்மையும் அவனுக்கு புரிய, இஷானின் வார்த்தைகளில் வெளிப்பட்டிருந்த அந்த வரத்தை அவன் மனது ஏனோ பார்த்திட எண்ணியது…

மெல்ல தலை நிமிர்த்தியவன், எதேச்சையாக அவளைப் பார்ப்பதை போல் பார்க்க, அவளது பார்வையும் அவனிடத்தில் தான் இருந்தது கொஞ்சமும் அகலாமல்…

பார்வையை விலக்க நினைத்தவனால் ஏனோ விலக்க முடியாது போக, அவளது விழிகள் பேசும் பாஷைக்கு கட்டுண்டு கிடந்தான் அவன்…

“சாரிங்க… ரொம்ப நேரம் வெயிட் பண்ணீட்டீங்களா?... சாரி… ப்ளீஸ்….” என அவள் விழிகள் கெஞ்ச இமைக்காமல் அவளைப் பார்த்திருந்தான் அவன்…

“அதான் சாரி சொல்லிட்டேன்ல… ப்ளீஸ்… கோபம் வேண்டாமே…” என அவள் விழிகள் அடுத்த உரையாடலை ஆரம்பிக்க, சட்டென அவனது அதரங்களில் குடிகொண்ட புன்னகையை அதிர்ச்சியோடு எண்ணியவன், பட்டென அவளிடமிருந்து பார்வையை திருப்பிக்கொண்டான் தன்னை தானே திட்டிக்கொண்டு…

“அச்சோ… திரும்பிட்டாரே… இனி எப்படி அவரை மறுபடி சந்திக்க வர சொல்ல?...” என எண்ணியவள் அவனது பாராமுகத்தை பார்த்து முகம் வாடிப் போனாள்…

தைஜூவின் பக்கத்தில் அமர்ந்த சதி, ஜெய்க்கு நேராக அமர்ந்து அவனையே பார்க்க, அவனோ அவள் பக்கம் திரும்ப கூட இல்லை கொஞ்சமும்…

மனது வலிக்க, கவலை தோய்ந்த முகத்தோடு வாசலைப் பார்க்க, சட்டென அவளது முகத்தில் பிரகாசம் வந்திருந்தது…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.