(Reading time: 11 - 22 minutes)

மெரிக்க பெண், அமேலியா கூறியதில் ஒரு வார்த்தையை  மட்டுமே புரிந்துகொண்டாள். அமேலியா தன்னுடைய வார்த்தைகளில் அடிக்கடி ஈராக் என்று கூறிக் கொண்டிருப்பதைக் கேட்டு அமெரிக்க பெண் கோபம் கொண்டாள்.

"ஈராக் என்று சொல்வதை நிறுத்துறியா " என்று கத்தினாள்

அமேலியா அதிர்ந்தாள். எதனால் அப்பெண் கோபம் கொள்கிறாள் என்று அவளுக்கு புரியவில்லை. அமேலியா சற்று நேரம் ஏதும் பேசாமல் மெளனமாக வந்தாள்.

அந்த காரில் சில குழந்தைகளின் புகைப்படங்கள் இருந்தன. அவற்றை எடுத்து ஆசையோடு பார்த்தாள் அமேலியா. "குழந்தைகள் ரொம்ப அழகா இருக்கு" என கூறினாள்.

அமெரிக்க பெண், "இந்த  குழந்தைங்க போல தான் எனக்கும் அழகான குழந்தை பிறக்கும் , நானும் என் கணவரும் குழந்தையோடு சந்தோசமா வாழுவோம்னு பல கனவுகள் கண்டேன். அந்த கனவுகள் கலைஞ்சு போச்சு" என்று அழுதாள். துக்கம் தொண்டையை அடைக்கவே போதை பானத்தை குடித்தாள். கார் தாறுமாறாக சென்றது. அமேலியா பயந்தாள்; நடுங்கினாள்; மெதுவாக செல்லுமாறு பணித்தாள். 

அமேலியாவின் பரிதவிப்பு  போதையில் இருந்தவளின் மூளைக்கு எட்டவேயில்லை. "எல்லாத்துக்கும் காரணம் இந்த ஈராக் தான்" என்று பல்லைக் கடித்தபடி மீண்டும் கத்தினாள்.

ஆனால், அமேலியாவிற்கு ஈராக் என்ற பெயரைக் கேட்டதும் முகத்தில் பிரகாசம் உண்டானது. அமெரிக்க பெண்ணிடம் சைகை மொழியில் கூறினாள் . முதலில் அவளுக்கு அமேலியா என்ன கூற வருகிறாள் என்று புரியவில்லை என்றாலும் பின்பு ஒரு வழியாக புரிந்து கொண்ட அவள், அமேலியாவை அதிர்ச்சியோடு நோக்கினாள்.  வெறிபிடித்தவளை போல அமேலியாவை கன்னாபின்னாவென்று திட்டினாள். அமேலியா பயந்தாள்.  திடீரென தன்னிடமிருந்த துப்பாக்கியை எடுத்து அமேலியாவை குறிபார்த்தாள். அந்நேரத்தில் கார் தன் பாதையை விட்டு விலகி தாழ்வான பகுதியில் வேகமாய் சென்று மரத்தில் மோதி நின்றது.

அமேலியாவின் தலை பயங்கரமாய் வலித்தது. ஆஹ் வென்று கத்தியபடி கண் விழித்தாள். சுமார் அரைமணி நேர மயக்கத்தில் இருந்து எழுந்த அவள், என்ன நடந்தது என்று தெரிந்துகொள்ள சில நிமிடங்கள் ஆனது. அமெரிக்க பெண் இன்னமும் மயக்க நிலையில் இருந்தாள். அவளை காரில் இருந்து கீழே இழுத்து போட்ட அமேலியா சுற்றும் முற்றும் பார்த்தாள். தூரத்தில் போலீஸ் கார்கள் சைரன் ஒலியோடு வந்து கொண்டிருந்தன. அமேலியா அங்கிருந்து ஓடினாள்.

ந்த வீட்டில் ஆழ்ந்த அமைதி நிலவி இருந்தது.மூவர் இருந்தும் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளவில்லை. எப்படி தொடங்குவது என்பது வந்தவர்களுக்கு பிரச்சனை,  வந்தவர்களுக்கு என்ன பதில் கூறுவது என்று படுக்கையில் படுத்திருந்தவருக்கு குழப்பம். 

இவை ஏதும் அறியாமல் தனக்கு கிடைத்த பொருளை தரையில் உருட்டியபடி வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த மாலிகாவையே பார்த்துக்கொண்டிருந்தான் ராணுவ வீரனான ஜான்சன் .

மாலிகாவின் பாட்டி பார்வை இல்லாததாலும் வயதின் மூப்பு காரணமாகவும் நடக்க சிரமப்பட்டு தரையில் விழுந்து நெற்றியில் கடுமையான காயம் ஏற்பட்டு படுக்கையில் இருந்தார்..இந்த விவரத்தைக் கேட்ட ஜான்சன் மாலிகாவை எண்ணி கவலையுற்றான். பார்வை இழந்த பாட்டி இன்னும் எத்துணை நாள் தான் மாலிகாவிற்கு துணையாக இருப்பார்? அவள் காலம் முடிந்துவிட்டால் மாலிகாவின் நிலை? இந்த கேள்வி தான் இன்று அவனை மாலிகாவின் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளது.

ஜான்சனை அழைத்து வந்த முகமது ஜின்னா பேச்சை தொடங்கினார். எழுபது வயதைக் கடந்த அவரது முகத்தில் காலதேவனின் சுருக்கங்கள் மிகுதியாய் நெளிந்தன.

"இன்னும் பதில் சொல்லாம மௌனமா இருந்தா எப்படி? உன்னுடைய பேத்தி  எதிர்காலத்தில் நல்லபடியா இருக்கணும்னு உனக்கு விருப்பம் இருக்கு தான?"

மாலிகாவின் பாட்டி  என்ன பதில் கூறுவது என்று குழம்பினாள். "என்னங்க அய்யா இப்படி கேக்குறீங்க. என் பேத்தி நல்லா இருக்கக்கூடாதுனு நான் நினைப்பேனா?" அதைக் கூறும்போது அவளது முகத்தில் நடுக்கத்துடன் கலந்த கவலை மேலோங்கியது.

"அப்போ உன் பேத்தியை இவருக்கு தத்து குடுத்திடு"

"எல்லாமும் தெரிஞ்ச பெரியவங்க நீங்க இப்படி பேசலாமா? நம்ம மதம் வேற அவங்க மதம் வேற. அதுவும் நம்மளை துன்புறுத்துற நாட்டை சேர்ந்தவர் அவரு. அங்க எப்படி என் பேத்தி நல்லா இருப்பா? வாழ்வோ சாவோ இந்த மண்ணுலயே இருக்கட்டும்".

முகமது ஜின்னாவிற்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை

"அந்த தம்பிகிட்ட சொல்லுங்க. என் பேத்திக்கு எதுவும் வாங்கி குடுக்கவேண்டாம்"

"சரிம்மா, நாங்க கிளம்புறோம் உடம்பு பாத்துக்க" என்று கூறிவிட்டு ஜான்சனோடு வீட்டை விட்டு வெளியே வந்தார் ஜின்னா.

விளையாடிக்கொண்டிருந்த மாலிகா ஜான்சனை பார்த்ததும் ஓடி வந்து கட்டிப் பிடித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுகத்தினாள்..ஜான்சன் அவளை பாசத்தோடு அரவணைத்து சில முத்தங்களையும் கொடுத்து அவளிடம் இருந்து விடைபெற்று சென்றான்.

பாட்டி கூறியவற்றை ஆங்கிலத்தில் அவளுக்கு எடுத்துரைத்தார் ஜின்னா. ஜான்சனின் முகம் சோகமானது . "இன்னும் சிறிது காலம் செல்லட்டும். பிறகு  பார்த்துக்கொள்ளலலாம்" என்று ஜான்சனை தேற்றிவிட்டு சென்றார் ஜின்னா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.