(Reading time: 17 - 33 minutes)

சில நிமிடங்கள் கழித்து இந்து இருந்த அறையை அடைந்தாள் புவனா.

'ஐ ஆம் டாக்டர் புவனா..' என்றாள் அவளை ஆராய்ந்தபடியே

ஒரு முறை இந்துவின் புருவங்கள் உயர்ந்து இறங்க அவள் பார்வை அவசரமாக வாசலை தொட்டு திரும்பின.

'யாரு விஷ்வாவை தேடறீங்களா..' கேட்டாள் புவனா.

இந்து மெல்ல ஆமென தலையசைக்க 'அவன் இனிமே வரமாட்டான்' என்றாள் அவள் இதழ்களில் ஓட தவித்த புன்னகையை மறைத்தபடியே.

'ஏன்???' இந்துவின் கண்கள் அவசரமாக கேட்க..

'அது ... அவன் டாக்டர் தொழிலை விட்டு சந்நியாசம் வாங்கிக்க போறானாம். அதான்... இனிமே வரமாட்டான். நீங்க தேடாதீங்க அவனை .' அவள் சொல்ல திருதிருவென விழித்தாள் இந்து.

.'இன்னும் நான்கு நாட்களில் அவளுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருக்கும். அதற்கு கூட வராமல் இருப்பானா என்ன இந்த விஷ்வா??? நாம வர வெச்சிட மாட்டோமா என்ன??? இந்து அறியாமல்  சிரித்துக்கொண்டாள் புவனா.

ப்படியே மூன்று நாட்கள் கடந்திருந்தன....

அன்று காலையில் அபர்ணாவும் அவளது தோழி ப்ரியாவும் ஒன்றாக அலுவலகத்துக்குள் நுழைந்த நேரத்தில் சட்டென எதிர்பட்டான் அருண். அவள் முகமெங்கும் பூத்து போனது பூக்காடு. இத்தனை நாள் நடந்தது எல்லாம் மறந்தே போனவளாக புன்னகைத்தாள் பெண்.

'அருண்... எப்போ வந்தீங்க???'

இப்போதாவது பதில் பேசி இருக்க வேண்டாமா அவன்??? பேசவில்லை!!! ஒரு முறை இருவரையும் மாறி மாறி பார்த்து விட்டு நகர்ந்தான். பளாரென கன்னத்தில் அறைந்த உணர்வு அபர்ணாவுக்கு. ப்ரியா திரும்பி அபர்ணாவின் முகம் பார்க்க

சட்டென சமாளித்துக்கொண்டு 'ஒண்ணுமில்லை. அருணுக்கு என் மேலே சின்னதா ஒரு கோபம். ஒரு வாரமா என்கிட்டே பேசலை. அவ்வளவுதான். அருண் ரொம்ப நல்லவர்தான் 'நீ உடனே எனக்கு அட்வைஸ் பண்ண ஆரம்பிக்காதே உனக்கும் வேறே யாருக்குமோ முடிச்சு போட்டிருக்குன்னு. அபர்ணா படபடவென சொல்ல..

சில நொடிகள் அவளையே பார்த்துக்கொண்டிருந்தவள் மெல்ல புன்னகைத்தாள் 'நான் உன்கிட்டே எதுவுமே கேட்கலியே அபர்ணா. நீ ஏன் இப்போ டென்ஷன் ஆகுறே???'. 'உனக்கு என்கிட்டேதான் பாய முடியுது. அங்கே எதுவும் முடியலை இல்லையா???'

கொஞ்சம் திகைத்து போனவளாக அபர்ணா அவளை பார்க்க...

'எனக்கென்னமோ நீ இப்போதான் யோசிக்க ஆரம்பிச்சிருக்கேன்னு தோணுது. நான் உன்னை அருணை விட்டுட்டுன்னு சொல்லலை. பட் நீ வெரி நைஸ். அண்ட் வெரி குட்...' சொல்லிவிட்டு நகர்ந்தாள் ப்ரியா.

தனது இருக்கையில் வந்து அமர்ந்தாள் அபர்ணா. அவள் மனமெங்கும் கொஞ்சம் எரிச்சல் பரவிக்கிடந்தது. 'இன்னும் நான் என்னதான் செய்ய வேண்டுமென எதிர்பார்க்கிறான் இந்த அருண்!!!' முதல் முறையாக ஒரு கேள்வி எழுந்தது அவள் மனதில்

அதே எரிச்சலுடன் தனது கணினியை இயக்கியவளை வரவேற்றது அந்த மின்னஞ்சல். பொதுவாக சாஃப்ட்வேர் துறையில் இருக்கும் அனைவரையும் மகிழ செய்யும் அந்த மின்னஞ்சல். அவளது வாழ்க்கையை கொஞ்சம் மாற்றி அமைக்க போகும் மின்னஞ்சல்..

அதை படிக்க படிக்க அவளது முகம் கொஞ்சம் கொஞ்சமாக சோர்வாக மாற துவங்கியது. அவர்களது ப்ராஜெக்ட் சம்மந்தபட்ட விஷயங்களுக்காக அவள் அமெரிக்கா செல்ல வேண்டுமாம். ஆறு மாதங்கள் முதல் இரண்டு வருடங்கள் வரை அங்கே இருக்க வேண்டி இருக்கும்.

கடந்த இரண்டு வருடங்களில் இது மூன்றாவது வாய்ப்பு. கடந்த இரண்டு முறை வந்த வாய்ப்புகளையும் மறுத்தாகி விட்டது.  சொர்க்கலோகம் என்கிறார்கள் அமெரிக்காவை.. ஆனால் அவளுக்கு சொந்தபந்தங்களை இங்கே விட்டுவிட்டு அங்கே சென்று பணத்தில் புரள்வதில் கொஞ்சம் கூட நாட்டம் இல்லை.

'என் நிம்மதியும் சந்தோஷமும் இருப்பது இங்கே அல்லவா??? வந்திருக்க கூடாது. இந்த வேலைக்கு வந்திருக்கவே கூடாது' மனம் அங்கலாய்க்க அந்த மின்னஞ்சலை வெறித்தபடியே அமர்ந்திருந்தாள் அபர்ணா.

அப்போது அவளது கவனத்தை கலைத்தது தினேஷின் எள்ளலான குரல். அவன் அவளது ப்ராஜெக்ட் லீடர்..

'என்ன அபர்ணா. மெயில் செக் பண்ணிட்டு அப்படியே உட்கார்ந்துட்டீங்க??? இந்த தடவையும் போகாம இருக்க என்ன சாக்கு சொல்லலாம்னு தேடிட்டு இருக்கீங்களா??? கணினியை விட்டு விழி நிமிர்த்தினாள் அவள்.

'உங்களை மாதிரி ஆளுங்க வீட்டிலே அடுப்படியிலே குப்பை கொட்டத்தான் லாயக்கு. இங்கே ஐ.டிக்கு வந்து ஏன் எங்க உயிரை வாங்கறீங்க??? யூஸ்லெஸ் க்ரீசரஸ். பேசாம பேப்பர் போட்டுட்டு வீட்டுக்கு போங்க.' சொல்லிவிட்டு போய்விட்டான் அவன்.

'ஆம் அவளுக்கு பிடிக்கவில்லைதான். வெளிநாடு செல்ல பிடிக்கவில்லைதான்!!!'

'யூஸ்லெஸ் க்ரீசரஸ்' உடல் முழுவதும் தீப்பற்றிக்கொண்ட உணர்வு அவளுக்கு. இவன் மட்டும் அல்ல, இந்த துறையில் இருக்கும் எல்லாரும் இதையே தான் சொல்லக்கூடும். அருண் உட்பட!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.