(Reading time: 15 - 30 minutes)

"பிடிக்கலைன்னா விடுங்க" என்று மலர்க்கொத்தை எடுத்து கைகளில் வைத்துக்கொண்டான் ஜான்.

"அக்கா நாராயணனுக்கு தான் ஒண்ணும் ஆகலையே? நீங்க ஏன் இடிஞ்சி போய் உட்கார்ந்திருக்கிங்க? நீங்க இவ்வளவு சோகமா இருக்கிறத பார்த்தா நாராயணன் இன்னும் போய் சேரலைனு வருத்தப்படுறது போல இருக்கே"

நாராயணன் மேகலாவை முறைத்தார். 

'ஐயோ இவன் நடந்துக்குறத பார்த்தா அப்பாவுக்கு திரும்ப ஹார்ட் அட்டாக் வந்திடும் போலயே'  என பயந்தாள் மேகலா. "டேய்! முட்டாள்தனமா பேசாத" என ஜானிடம் எரிந்து விழுந்தாள் மேகலா.

"மிஸ்டர் நாராயணன்! இதயமே இல்லாத உங்களுக்கு மாரடைப்பு வந்ததை நினைச்சு எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்கு"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜான்சியின் "அமிழ்தினும் இனியவள் அவள்..." - அவனுக்கு அவள் கிடைப்பதற்கரிய அன்புச்சுரங்கம் அவளுக்கோ அவன்...?

படிக்க தவறாதீர்கள்..

"இந்த கிறுக்கன் என்ன சொல்றான்" என மேகலாவை பார்த்தார் நாராயணன்.

மேகலா ஜானை முறைத்தாள். அவள் பார்வையின் அர்த்தத்தைப் புரிந்துகொண்ட ஜான், மழுப்பலான சிரிப்பை உதிர்த்தான்.

"சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் நாராயணன். நேத்தே உங்களை வந்து சந்திக்கணும்னு நெனச்சேன். உங்க வீட்டுக்கு வந்த பொண்ணு திடீர்னு மயக்கம் போட்டு எல்லோரையும் பயமுறுத்திடுச்சு"

"என்ன ஆச்சு?" என்று பதறியபடி கேட்டாள் மேகலா.

"தெரியல, திடீர்னு வசந்த் என் வீட்டுக்கு வந்து அந்த பொண்ணு மயக்கம் போட்டு விழுந்திடுச்சு. எப்படியாச்சும் காப்பாத்தி கொடுன்னு என் கையை புடிச்சு கெஞ்சினான்"

"அப்புறம்?"

"அப்புறம் எனக்கு தெரிஞ்ச டாக்டர் பொண்ணு வச்சு வைத்தியம் பாத்தேன்"

"இப்போ அமேலியா எப்படி இருக்கா?"

"அவ பெரு அமேலியாவா? எப்படி கண்டுபிடிச்சீங்க? உங்க வீட்டுல இருக்க எல்லோரும் அவ கிட்ட அரபிக் கத்துக்குறீங்களா?"

"விஷயத்தை சொல்லுடா, அவ எப்படி இருக்கா?"

"உங்க தம்பி அவளை மடியில படுக்க வச்சு தூங்க வச்சிட்டு இருந்தான். இந்நேரம் நல்லாயிருப்பா"

"என்னது!" நாராயணன் அதிர்ச்சியுடன் கேட்டார்.

"அப்பா , நீங்க டென்ஷன் ஆகாதீங்கப்பா"

"நிஜமா நாராயணன். சின்ன தம்பி பிரபு போல பாட்டு எல்லாம் பாடி எழுப்ப முயற்சி பண்ணான்"

நாராயணன் மேகலாவை விழிகளால் துளைத்தெடுத்தார்.

"சரி, எனக்கு நேரம் ஆச்சு நாராயணன். நான் போயிட்டு வரேன். உடம்பை பத்திரமா பார்த்துக்கோங்க. நீங்க அதிர்ச்சியான விஷயங்களை கேக்கவே கூடாது" என்றபடி அங்கிருந்து விடைபெற்று சென்றான் ஜான்.

"அந்த லூசு பய என்ன சொல்லிட்டு போறான் பாத்தியா?"

"அவன் விளையாட்டுக்கு சொல்றான் பா"

"இல்லம்மா, .அவன் கிறுக்கனா இருந்தாலும் சில விஷயங்கள்ல உண்மைய உளறிடுவான். அறியாத வயசு பத்தி உனக்கு தெரியாது. வாய்ப்பு அமஞ்சிட்டா நிலைமை ரொம்பவே விபரீதமாகிடும். நீ முதல்ல வீட்டுக்கு போ"

"உங்களை யாருப்பா பாத்துப்பா"

"வசந்தை இங்க வர சொல்லு. நான் வீட்டுக்கு வர வரைக்கும் அவனும் வீட்டுக்கு போகக்கூடாது. முதல்ல அந்த பெண்ணை வீட்டை விட்டு அனுப்புற வழியை பாரு" என்று காட்டமாக சொன்னார் நாராயணன்.

காலைப் பொழுது ரம்மியமாக இருந்தது. எட்டு மணி ஆனவுடன் சரியாக அலாரம் அடித்தது. வசந்த் திடுக்கிட்டு கண்களைத் திறந்தான். மெல்ல சோம்பலை முறித்தபடி தன மடியில் தலை வைத்து உறங்கும் அமேலியாவை நோக்கினான்.

மலர் போல் அவள் துயில் கொண்டிருந்தாள். இரவு நடந்த நிகழ்வுகளை மனக்கண் முன்னால் ஓடவிட்டான். அவனையுமறியாமல் அவன் இதழ்கள் புன்முறுவின.

அமேலியாவை மெல்ல படுக்கையில் கிடத்திவிட்டு சிறிது நேரம் அவளையே உற்று நோக்கினான். இதுவரை எந்தப் பெண்ணிடமும் ஏற்படாத உணர்வு அவள் மேல் ஏற்படுவதை அவனால் தடுக்க முடியவில்லை. அந்த உணர்வுக்கு அவனால் பெயரும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால். ஒன்று மட்டும் உண்மை. நேற்று வரை அவள் மேல் இருந்த கோபமும் வெறுப்புணர்வும் இன்று அடியோடு மறைந்து விட்டது.

தன் காலை வேலைகளை முடித்து விட்டு, மன அமைதிக்காக ஜாக்கிங் சென்றான் வசந்த். மனம் முழுவதும் சொல்லமுடியா மகிழ்ச்சி குடியிருந்தது. அன்று அவன் தன் வாழ்க்கையின் முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயமும் இருந்தது. அதை அவன் உணராமல் இல்லை.

ஒரு மணி நேர ஜாகிங்கை முடித்து வீட்டிற்கு வந்தான் வசந்த். நிலா இன்னமும் சோபாவில் உறங்கிக்கொண்டிருந்தாள்.

"நிலா, எழும்பு. நேரம் ஆச்சு" என்று அவளை செல்லமாக தட்டிவிட்டு, சமையலறையில் நுழைந்து தேனீரை தயார் செய்யத் தொடங்கினான். அவனது அலைபேசி சிணுங்கியது. மேகலா தான் அழைத்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.