(Reading time: 15 - 30 minutes)

அமேலியா - 17 - சிவாஜிதாசன்

Ameliya

மேலியா தன் அறையின் முன் மயக்கமடைந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியோடு நோக்கினான் வசந்த். அமேலியாவின் அருகில் சிந்தியிருந்த தேநீரையும், உடைந்த தேநீர் கோப்பையையும் கண்டான்.

'எதுக்காக இங்க வந்து இவ மயக்கம் போடணும்? இருக்குற பிரச்னை போதாதுன்னு இது வேற ' என்று அலுத்துக்கொண்டான் வசந்த். அவன் இதயம் லேசாக படபடத்தது. 

அமேலியாவின் முகத்தில் தண்ணீரைத் தெளித்தான்.  அமேலியா அசையவில்லை.  அவன் பயம் அதிகமானது. மேற்கொண்டு என்ன செய்வது என்று புரியாமல், அவளின் கன்னத்தில் லேசாக தட்டினான்.

"ஏய் எழுந்திரு. இங்க பாரு ஏய்"

அமேலியாவிடம் எந்த மாற்றமும் தெரியவில்லை. அமேலியாவைத் தூக்கி தனது படுக்கையில் படுக்கவைத்துவிட்டு, 'எல்லாம் என் நேரம்' என்று வெறுப்போடு அலுத்துக்கொண்டவன், தனது இரவு உடையை மாற்றி வேறு உடை அணிந்துகொண்டு வேகமாக மாடிப்படியில் இறங்கி கீழே வந்தான். 

நிலா சோபாவில் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அவளை எழுப்ப முற்பட்டவன், 'நிலா மட்டும் என்ன செய்துவிட முடியும்' என்று அவளை எழுப்பாமல் விட்டுவிட்டான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

வத்சலாவின் "வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

வாசல் கதவைத் திறந்தான். வானில் நிலாவையோ  நட்சத்திரங்களையோ காண முடியவில்லை. பனித்திரை அனைத்தையும் மறைத்து கடும் குளிரை அளித்துக் கொண்டிருந்தது. வாசல் கதவை மீண்டும் தாளிட்டவன் ஜெர்கினை இழுத்து சரிப்படுத்திக்கொண்டே கார் ஷெட்டிற்கு சென்றான்.

குளிர் காலமாதலால் கார் கிளம்பாமல் அடம்பிடித்தது. "இது கூட எனக்கு நல்லது பண்ணாது. உலகத்திலேயே பாவப்பட்ட பிறவி நானா தான் இருப்பேன்" என்று கூறியபடியே காரை ஒருவாறாக கிளப்பி சாலையில் ஓட விட்டான்.

சாலையில் போக்குவரத்து மிகவும் குறைந்து காணப்பட்டது. சிலர் மட்டும் சாலையின் ஓரத்தில் நடந்து சென்றுகொண்டிருப்பது அவன் கண்களுக்கு புலப்பட்டது.

செல்பேசியை எடுத்து ஜான் நம்பருக்கு அழைப்பை விடுத்தான் வசந்த். சில நொடிகள் கழித்து அழைப்பு ஏற்கப்பட்டது.

"சொல்லுடா" .ஜான் குரலில் தூக்கத்தின் கலக்கம் அப்பட்டமாக தெரிந்தது.

"கொஞ்ச நேரத்துல உன் வீட்டுல இருப்பேன். ரெடியா இரு"

"எதுக்குடா"

"சொன்னதை செய்" என்று இணைப்பை துண்டித்தான் வசந்த்.

பத்து நிமிடத்தில் ஜான் தங்கியிருக்கும் அப்பார்ட்மெண்ட் முன்  கார் நின்றது. காரில் இருந்து அவசர அவசரமாக இறங்கிய வசந்த்,படியில் ஏறிச் சென்று ஜான் வீட்டின் கதவைத் தட்டினான்.

"ஜான்!..ஜான்!"

"வரேன்! வரேன்!" என்று கூறியபடி கதவைத் திறந்தான் ஜான்.

"என்னடா அவசரம்? ஏதாச்சும் பிரச்சனையா?"

"வா, கார்ல போய்கிட்டே பேசுவோம்" என்று அவனை இழுத்துக் கொண்டு காரில் ஏறிச் சென்றான் வசந்த்.

"சொல்லுடா, என்ன ஆச்சு?"

"அந்த பொண்ணு திடீர்னு மயக்கம் போட்டுட்டாடா. பயமா இருக்கு"

"யாருடா, அந்த ஈராக் பொண்ணா?"

"ம்ம்"

"எதுக்கு மயக்கம் போட்டா?"

"தெரியலடா. திடீர்னு என் ரூம் முன்னாடி மயக்கம் போட்டு கிடக்குறா"

"அவ ஏன் உன் ரூம்க்கு வரணும்?"

"சும்மா சும்மா கேள்வி கேக்காத. எனக்கு உதவி பண்ணு"

"ஏண்டா, எதுக்கு எடுத்தாலும் என்னையே சிக்கல்ல மாட்டிவிடுற?அவ மயக்கம் போட்டுட்டான்னா டாக்டர் கிட்ட கொண்டு போய் காட்டு. தூங்கிட்டு இருந்த என்ன எதுக்கு தொந்தரவு பண்ணி கூட்டிட்டு போற?"

"அவ யாருனு டாக்டர் கேட்டா நான் என்ன சொல்லுவேன்?

"ஏதாச்சும் சொல்ல வேண்டியது தான். தங்கச்சின்னு சொல்லு"

"எனக்கு தங்கச்சியெல்லாம் வேணாம்"

"அப்போ கட்டிக்க போற பொண்ணுன்னு சொல்லு"

ஜானை முறைத்தான் வசந்த்.

"பொய் தான. சொல்லுறது எல்லாம் நடக்குமா என்ன?"

"நடக்காத காரியத்தை சொல்லிட்டு இருக்காத. உனக்கு தெரிஞ்ச, கேள்வி கேக்காத டாக்டர்ஸ் யாராச்சும் இருக்காங்களா?"

"நீ சொல்லுறத பாத்தா கண்ணு தெரியாத காது கேக்காத வாய் பேச முடியாத டாக்டரை தான் கண்டுபிடிக்கணும்"

"ப்ளீஸ் டா ஏதாச்சும் ஐடியா கொடு" 

ஜான் சிறிது நேரம் சிந்தித்தான். "எனக்கு தெரிஞ்ச டாக்டர் பொண்ணு இருக்கு. ஆனா படிச்சிட்டு இருக்கு.இது கடைசி வருஷம்"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.