(Reading time: 25 - 49 minutes)

டடா… சற்று தள்ளி நில்லுங்கள்… உங்கள் துர்வாசத்தை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை…”

“அதை விடுங்கள் மகரிஷி… நீங்கள் மூவுலகங்களுக்கும் சென்று வருவீர்களே… ஏதேனும் செய்தி இருந்தால் கூறுங்கள்…”

“எதுவும் இல்லை… நான் மகாதேவரை தரிசிக்கவே வந்தேன்…”

“இருந்துவிட்டு போகட்டும்… எனினும் தாங்கள் எங்களுக்கு ஏதேனும் ஒரு செய்தி அதுவும் சுவாரசியமான செய்தி ஒன்றை கூறிவிட்டு தாராளமாக செல்லுங்கள்… உங்களை யார் தடுக்கப்போகிறார்கள்?...”

“ஓஹோ… தடுக்கும் எண்ணம் வேறு உள்ளதா?... எனில் தாங்கள் இருவரும், கயிலாயபுரத்தின் வாயிற் காவலர்களா?...”

“ஏன் மகரிஷி இந்த வாதம்?... உங்களைப் போன்று நாங்கள் மூவுலங்களுக்கும் சென்று வருவதில்லை… செய்தியை கூறிவிட்டு தாம் செல்லலாம் அல்லவா?.. எங்களின் ஆசையை சற்று நிறைவேற்ற கூடாதா?... எங்கேயோ நடந்த சம்பவங்களை தெரிந்து கொள்ள எங்களுக்கு ஓர் அற்ப ஆசை… அவ்வளவேதான்… நாங்கள் இந்த இடத்தை விட்டு வேறு எங்கும் செல்வதில்லை… தங்களைப் போன்று வருபவர்கள் அதுவும் மகாதேவரை தரிசிக்க வருபவர்களிடத்தில் மட்டும் தான் நாங்கள் இப்படி செய்தியை கேட்கிறோம்… அதுவும் தம்மைப் போன்று நட்பாக நடந்து கொள்பவர்களிடம் மட்டும் தான்… நீங்களும் சொல்லாவிடில் எங்களுக்கு பிரபஞ்ச நிகழ்வுகள் தெரிந்திடவே முடிந்திடாது… அது மட்டும் இன்றி, தங்களைப் போன்ற பெரிய ஞானிகளிடம் பேசும்போதாவது எங்களின் அறிவு விரிவடையாதா என்ற எண்ணமும் தான் எங்களை இப்படி கேட்க சொல்கின்றது…”

இருவரும் மாறி மாறி நெளிந்து கொண்டே கூற, “சரி கூறுகிறேன் கேளுங்கள்… இவ்விடத்திற்கு வெகு சீக்கிரமே ஒருவர் வர இருக்கின்றார்….” என்றார் நாரதர்…

“அது யார்?... மகரிஷி?...”

“ஒரு ஸ்திரீ வரப்போகிறார்…”

“ஸ்திரீயா?.. அதுவும் இந்த பர்வதத்திற்கா?... இங்கே ஸ்திரீ எப்படி வருவார்கள்?... நாங்கள் ஆன்ந்தமாக இங்கே வாழும் வாழ்க்கையில் சுதந்திரம் இல்லாது போய்விடுமே… அதுவும் இன்றி இந்த பர்வதத்தில் ஸ்திரீ வரவேண்டிய நிர்பந்தமே இங்கு ஏற்பட்டதில்லை…”

என அவர்கள் நாரத மகரிஷியோடு வாதம் செய்து கொண்டிருந்த போது,

“இம்சை செய்யாது திருந்தவே மாட்டீர்களா இருவரும்?... செல்லுங்கள் இப்போதே....”

என்ற குரல் கேட்டு இருவரும் ஒதுங்கி போய் நிற்க, நாரதரின் முகத்திலோ புன்னகை வந்திருந்தது…

“வணக்கம் நாரத மகரிஷி… கயிலாயபுரத்திற்கு தங்களை இந்த நந்தி வரவேற்கிறேன்… வாருங்கள்…” என அவரை அழைத்துச் சென்றான் நந்தி… மகாதேவனுடன் எப்போதும் இருக்கும் நந்தி தேவன்… அந்த ஈசனுக்கு நந்தி வாகனம் என்றால், அவரின் அம்சமான இந்த ஈசனுக்கு நந்தியோ எப்பொழுதும் உடன் இருப்பவன்… மகாதேவனின் மீது அளவற்ற பாசமும் நேசமும் கொண்டவன்… கயிலாய மன்னனுக்கும் மேலாக மகாதேவனை திருமண பந்தத்தில் காண வேண்டுமென்று துடிப்பவன்…

பச்சை பசேல் என்ற பசுமை… சுற்றிலும் பல நிற பூக்கள், துள்ளிக்குதித்திடும் நீர்ப்பிரவாகம், அந்த அமைதியான சூழலின் நடுவே இருந்த பாறையின் மீது ஒரு காலை ஊன்றி, மறுகாலை மடித்து அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டிருந்தான் மகாதேவன்… அவனது சூலாயுதம் அவன் வலப்புறம் நிறுத்தப்பட்டிருந்தது…

“சிவ…. தேவா….” என்ற ஓசைகள் காற்றில் அலைபாய்ந்து கொண்டிருக்க, அந்த இடமே ஒரு ஏகாந்தத்தை பரிசளித்துக்கொண்டிருந்தது…

“ஹரஹர மகாதேவா… இந்த அடியவனின் வணக்கத்தை எற்றுக்கொள்ளுங்கள் மகாதேவா….”

குரல் கேட்டு கண் திறந்து பார்த்தான் மகாதேவன்… “வாருங்கள் மகரிஷி….” என்றான் மிகவும் அமைதியாக…”

“மகாதேவா… இந்த பர்வதம் வருவது மிக கடினம்… எனினும் தம்மை ஒருமுறை தரிசித்திட வேண்டுமென்று ரிஷிகளும், முனிவர்களும் பிரயத்தனம் கொண்டு இங்கே வந்து தங்களை பார்க்கும்போது அவர்கள் ஏற்ற துன்பங்கள் அனைத்தும் நொடிப்பொழுதில் விலகிவிடும் தங்களை தரிசித்துவிட்ட பரவசத்தில்….. எப்பேர்ப்பட்ட பரவசம் அது…” என அதில் லயித்தவராய் கூற, நந்தியின் முகமோ ஆனந்தத்தில் ஆழ்ந்தது…

“தம்முடைய சீடர்கள் இருவரை தற்போது தான் சந்தித்தேன்… அவர்கள் என்னிடம் பூலோக நடப்பு நிகழ்வுகளை விசாரித்தார்கள்… அகிலமெங்கும் பெரும் மாற்றங்கள் நிகழ்கிறது என்று கூறினேன்… அவர்கள் அதனையும் என்னவென்று விசாரித்தார்கள்… நான் அதனை எப்படி, என்னவென்று கூறிடுவேன் மகாதேவா?...” என கூறியபடி மகாதேவனைப் பார்க்க, அவனும் அவரைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்…

“ஒருபுறமோ, தட்ச பிரஜாபதி ஒரு வேள்வியினை நடத்தி, அதில் தம்மை சிவனாக பூஜித்து போற்றுவது நியதியன்று என்றார்… மறுபுறமோ பிரஜாபதியின் மகளின் மனதில் ஏராளமான சஞ்சலங்கள் அதுவும் தம்மை தரிசித்ததிலிருந்து… தாங்களும் அவர்களைக் கண்டிருப்பீர்கள்… சிறந்த அழகும், குணமும் கொண்டவர், அவரிடத்தில் நான் தம்மை பற்றிக்கூறியதும், அவர்களின் முகத்தில் ஏற்பட்ட பொலிவினை என்னவென்று கூறுவேன் மகாதேவா?...”

நாரதர் கூறிய வார்த்தைகள் நந்திக்கு உவகை அளித்த அதே நேரம், மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருந்த அந்த இரு சீடர்களும், தங்களது முகத்தினை சுளித்தனர்…

அப்போது, “தங்களின் இந்த வார்த்தைகளினால் தமக்கு கிட்டுவது காலவிரயம் மட்டுமே…” என மகாதேவன் தெளிவாக கூற, அந்த இருவரின் முகத்திலும் புன்னகை… நந்தியோ கவலையுடன் மகாதேவனையும் நாரதரையும் மாறி மாறி பார்த்தான்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.