(Reading time: 25 - 49 minutes)

43. மருவக் காதல் கொண்டேன்... - மீரா ராம்

Maruva kathal konden

காதேவனை நாரதர் சந்தித்து சதி பற்றி கூற, அவன் முகம் மலர்ந்தது அழகாய்…. அவன் நடந்த நிகழ்வினை நினைவுபடுத்தி பார்த்திட்டு, அவளையேப் பார்த்திட, அவளுள் புதிதாய் ஒரு தயக்கம் எழ, அவள் அதனோடு போராடி தயங்கி நின்றாள்… அவனின் அமைதியான முகமும், பார்வையும் அவளுள் தாக்கத்தினை ஏற்படுத்த, அவள் அதில் சிக்கிக்கொண்ட நேரம், அவனையே அவள் பார்த்திருந்தாள் நேரம் காலம் கடந்து….

இரவு பொழுதும் எட்டிட, அவன் அந்த நிலவோடு சேர்ந்தவனாகி தன் நர்த்தனத்தினை நிகழ்த்த, அதில் மெய் மறந்து போனவளாய், அவள் திகைத்து நின்றிருக்க, அவனது முகத்தினை மறைத்து நின்றிருந்த அவனது கரங்கள் நகர்ந்த போது அருகே தெரிந்த அந்த விழிகளில் அவள் தன்னை தொலைத்திருக்க, இங்கே உறக்கத்தில் ஆழ்ந்திருந்த சதியின் விழிகள் விழித்துக்கொண்டது பட்டென….

தேகம் எங்கும் வியர்வை வழிந்திருக்க, தனது படுக்கையில் இருந்து எழுந்து நின்று சாளரத்தின் வழி பார்த்தபோது தூரத்தே அன்று அவள் சென்று வந்த அந்த பர்வதம் தென்பட, கலங்கி போனாள் அவள்…

பார்வையை அதிலிருந்து விலக்கி, அவள் தனதறையில் பதித்திட, பைகளில் இருந்த தாமரை மலர்கள் அவள் கண்களுக்கு தென்பட, அதிர்ச்சியில் உறைந்து போனாள் சதி…

“என்ன இது?... சோதனை?....” என்றவள் நிலத்தில் தட்டென்று அமர்ந்தாள்…

காலையில் சிற்பி குடும்பத்தினரினைக் கண்டு அவள் வேதனையுற்ற போது, பணிப்பெண்கள் அவர்கள் கயிலாயபுரத்தினை நாடிச்செல்வதையும், அங்கு யாதொரு குறையும் இன்றி அவர்கள் வாழ்வார்கள் எனவும் கூற, மலர் சேகரித்து வந்து களைப்பில் அயர்ந்தவளுக்கு ஆழ்மனதில் அந்த வார்த்தைகளே உலவ, ஒரு சொப்பனம் வந்தது…

அதில், தன் தண்டனையை நிறைவேற்றி, நந்தவனம் சென்று அவனால் மயங்கி, அவனே அதனை தெளிவிப்பது போலவும், காட்டு மிருகத்திடம் சிக்கிக்கொண்ட போது அவன் வந்து காப்பாற்றியது போலவும், அவனிடத்தில் தன்னை தொலைத்து மட்டுமல்லாமல், அவனது நடனத்தில் மெய்மறந்து நின்றதை போலவும் நீண்ட நெடிய சொப்பனம் வர, சோர்ந்து போனாள் சதி…

இதில் தந்தை அரசவையில் பேசிய நிகழ்வும், கூடவே நாரத மகரிஷியும் வந்து சென்றதும் ஏன்?.... இது எதனின் அறிவிப்பு?... என குழம்பி போய் நின்றாள் சதி…

“என்ன நேர்ந்தது எனக்கு?.. மீண்டும் மீண்டும் அவரது உருவம் என் கண்களுக்குள் வருவதும் ஏன்?... யாரை நான் நினைத்திட மாட்டேன் என என் தந்தைக்கு வாக்களித்தேனோ அவர் தொடர்புடைய விஷயங்கள் என் மனதினை விட்டு நீங்காமல் இருப்பதும் ஏனோ?... இது ஏன்?... எதனால்?...”

என அழுதவள், “நான் ஏற்ற பிராயசித்தத்தினை தடுப்பது யாராக இருப்பினும் அதை நான் அனுமதியேன்… உறக்கத்தில் ஆழ்வதால் தானே அந்த சிவனின் சொப்பனம் எனக்கு தோன்றுகிறது… நான் உறக்கத்தினையே தவிர்த்துவிட்டால், யார் எனக்கு என்ன துன்பம் விளைவித்திட முடியும் என்று நானும் பார்க்கிறேன்?...”

பிடிவாதத்துடன் நெஞ்சுரம் கொண்டு சதி கூறிவிட்டு, அன்றைய தினமும் பணிப்பெண்களின் உதவியுடன் மலர் சேகரிக்க சென்று விட்டு அரண்மனை திரும்ப, அங்கே நாரத மகரிஷியைக் கண்டு ஆணியடித்தாற் போல் நின்றாள் சதி….

கனவில் வந்தது போலவே அவரும் உரையாட, அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை… பணி இருக்கிறது என்று அகன்றவள், அவர் செல்லும் திசையையேப் பார்த்திருந்துவிட்டு, அரண்மனையில் நடந்தவற்றை பற்றி விசாரிக்க, கனவில் பிரஜாபதி கூறியது போலவே, பூஜிக்க வேண்டிய தெய்வங்கள், பிரம்மனும், விஷ்ணுவும் என்றே நிஜத்திலும் கூறியிருக்க, ஓய்ந்து போனாள் அவள்…

கனவில் பார்த்திட்ட இரண்டு விஷயங்கள் நடந்து முடிந்துவிட்டனவே… எனில் மீதி நிகழ்வும் நடந்திடுமா?....

கேள்வியுடன் பயமும் எழும்ப, அப்படியே அமர்ந்திருந்தாள் அவள் சிலையாக…

வள் கனவை மெய்ப்பிப்பது போல், நாரதரும், மகாதேவரைத்தான் தேடிச் சென்றார் அந்நேரம்…

கயிலாயபுரத்திற்கு வருகை தந்த நாரத மகரிஷி, அதன் அழகில் மெய் மறந்து நின்றார்…

“ஆஹா…. கயிலாபுரத்தின் அழகை எண்ணிப்பார்க்கையில் ஆனந்தம் ஊற்று போல் எழுகிறதே உள்ளத்தில்… இந்த சூழல் எனக்கு எப்பொழுதும் குளிர்வினை தர மறுத்ததே இல்லை… அனைத்து பற்றுகளையும் துறந்து முக்தி அடைந்து, வாழ்வியல் சிந்தனையின்றி, மரண பயமின்றி, ஆழ்ந்த அமைதியுடன் தம்மை நினைத்து தவத்தினை ஈடுபவரை காண்கையில்,… ஆஹா….. நாராயணா… நாராயணா…”

என அந்த ஈசனின் அம்சமான மகாதேவனின் புகழ் பாடிக்கொண்டிருந்த நாரதர்,

கயிலாயபுரத்தில், மகாதேவன் வசிக்கும் அந்த பர்வதத்தில், பல துறவிகளும் இருக்க,

“சதி தேவியோ மாட மாளிகையில் ஆடம்பரத்தின் நடுவே வாழ்பவர்… அவர் இங்கே இந்த துறவிகளிடையே எப்படி வாழப்போகிறார்?... அதே நேரம், அரண்மனை என்று ஒன்று இருப்பதையே மறந்து இருக்கும் மகாதேவன், இங்கே இந்த பர்வதத்தினையே தன் வசிப்பிடமாக்கி வாழ்ந்து கொண்டிருக்கிறார்… ஆஹா… நாராயணா… நாராயணா….”

அவர் வாய்விட்டு கூறியபடி நடந்து செல்ல, அப்போது அவரை ஒட்டி உரசிக்கொண்டு வந்து நின்றனர் இருவர்…

“வணக்கம் நாரத மகரிஷி… தாங்கள் மகாதேவரை சந்திக்க செல்லுகிறீர்களா?... எனில், தாங்கள், என்னையும், இவனையும் நிச்சயம் சந்தித்தாக வேண்டும்…”

அதில் ஒருவன் சிரித்துக்கொண்டே கூற, மற்றொருவனோ அவனது பேச்சினை ஆமோதித்தான்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.