(Reading time: 25 - 49 minutes)

சுதாரித்துக்கொண்ட நாரதரும், “மகாதேவா… நான் இங்கே வந்ததே, பிரஜாபதி தங்களுக்கு எதிராக செய்யும் சூழ்ச்சியைப் பற்றி தெரிவிப்பதற்காகத்தான்…” என கூற,

“என் மேல் விரோதம் கொண்டிருந்தால் அது தட்சரது கவலை… எனக்கு எந்த கவலையும் இல்லை…” என்றான் மகாதேவன்…

“ஆனால், சதி தேவி… அவரைப் பற்றி தங்கள் அறிய விரும்பவில்லையா?...”

“சதியா?... அவள் நிலை என்ன நாரதரே….”

“அதனை என்னவென்று கூறுவேன் மகாதேவா?... தங்களைப் பற்றிய எண்ணங்களிலேயே அவர் உழன்று போய் இருக்கிறார்.. உணவு, நீர் என எதனையும் தொடவில்லை… இப்படியே போனால், அவர்களின் நிலை என்னாகும் மகாதேவா?...”

நாரதர் தன் வார்த்தைகளினால் மகாதேவனை தன் வசம் இழுக்க முற்பட,

“தட்சனின் மகள், அன்று என்னை உள்ளத்தால் பக்தியுடன் தியானித்து பூரணமாய் அழைத்தாள்… அதனாலேயே நான் அவ்விடம் செல்ல நேர்ந்தது… பக்திக்கு கட்டுப்பட்டே நான் அன்று அங்கு பிரவேசிக்க நேர்ந்தது… என்னையும் அவள் காண நேர்ந்தது… இதில் வேறு எந்த எண்ணங்களுக்கும் இடம் கிடையாது…” என அழுத்தம் திருத்தமாக மகாதேவன் கூற, அவனது இரு சீடர்களும் ஆனந்த கூத்தாடிவிட்டு, நாரதரின் அருகில் வந்து நின்றனர்…

சற்றே கவலை கொண்ட நாரதர், “எனினும், தாங்கள் எத்தனை நாள் தான் இன்னும் இந்த சித்த கோலத்திலேயே நீடிப்பீர்கள் மகாதேவா… பிரம்மா-சரஸ்வதி, விஷ்ணு-லஷ்மி… போன்றவர்களை போல் தாங்களும் அந்த பந்தத்தினை ஏற்கமாட்டீர்களா?..” என நாரதர் கேள்வி எழுப்ப, அவன் மௌனம் காத்தான்….

“தேவி சரஸ்வதி, மற்றும் தேவி லஷ்மியின் சுபிக்ஷ கடாட்ஷம் பிரம்மலோகத்திலும், விஷ்ணுலோகத்திலும் கிட்டுவது போல், இந்த கயிலாயத்திலும் அன்னையின் பாதம் பதிந்தால் மகிழ்க்சிகள் கிட்டுமே… அதை சற்று பரிசீலிக்கலாமே பிரபு… தம்மை சூழ்ந்திருக்கும் இந்த தனிமையும், ஏகாந்தமும் மாற வேண்டும் என்று நினைக்கமாட்டீர்களா பிரபு?...”

நந்தி தன் மனதிலிருப்பதை தன்மையாக கூற,

“மீள இயலா பந்தத்தில் இணைக்கும் அந்த சாகரத்திற்கு சித்த புருஷர்களின் வாழ்வில் இடம் கிடையாது என்பது தாம் அறியாததா?…”

“எனில் சித்த புருஷ வாழ்வில், பாசம் எனும் அன்பிற்கு இடமே கிடையாதா மகாதேவா?...”

நாரதர் ஆதங்கத்துடன் கேட்க,

“மகத்துவம் வாய்ந்த பாசத்திற்கு பஞ்சமே இல்லையே… எனது பக்தர்கள்:… என்னுடன் இருக்கும் பூத கணங்கள்… சீடர்கள்… இவர்களுக்கு என் மீது உள்ள தொடர்பு பாசத்தின் வெளிப்பாடு தானே… யாராக இருந்தாலும் சரி, நான் யார் மீதும் பாரபட்சம் பார்ப்பதில்லை… எனினும் தான் கூறும் பாசம், சுயநலம்… அது அகங்காரத்திற்கும் வழிவகுத்துவிடும்… நான் அது இரண்டினின்றும் விலகி தியான வாழ்வினையே விரும்புபவன்… அது மட்டும் அல்லாமல், அனைவரும் என்னை பந்தங்களுக்குள் பிணைக்க முயற்சிப்பதையும் நான் அறிவேன்… எனினும் நான் அது எதனுள்ளும் சிக்க முயலாமல் பூரணத்துவத்தினையும் பெற்று, தியான பரவசத்தில் ஆழ்ந்திருக்கிறேன்…. ஆகையால் தங்களின் எண்ணத்தினை கைவிடுங்கள்…. ” என்றவன் தன் விழிகளை மூடிக்கொண்டு, மீண்டும் தன் தியானத்தினுள் மூழ்க,

கவலையோடு ஒருவரை ஒருவர் முகம் பார்த்துக்கொண்டனர் நாரதரும், நந்தியும்…

சிவ சிந்தனையிலும் தான் கண்ட கனவிலும் குழம்பி பயந்து போயிருந்த சதி, இரவு முழுவதும் உறங்கிடவே இல்லை….

மறுநாள் விடிகையில், யாரிடமும் கூறாமல் மலர்களை சேகரிக்க அவள் சென்றுவிட, அவளைத் தேடி அலைந்தாள் அவளின் சகோதரி அதிதி…

“அக்கா… சதியை காணவில்லை… அறை முழுவதும் தேடிவிட்டேன்… அவளைக் காணவில்லை…”

அதிதி, தன் சகோதரி கியாத்தியிடம் கூற,

“என்ன கூறுகிறாய் அதிதி?... அரண்மனை முழுவதும் தேடினாயா?… அவள் இங்கு தான் இருப்பாள்….” என்றாள் கியாத்தி…

“இல்லை அக்கா… அவள் இங்கு எங்கும் இல்லை… அவள் மலர் சேகரித்து வரும் பையும் அவளது அறையில் இல்லை… ஆதலால் அவள் யாரிடத்திலும் கூறாமல் தாமரை மலர்களை சேகரிக்க சென்றிருப்பாள் என்றே எனக்கு தோன்றுகிறது…”

“என்ன மலர் சேகரிக்கவா?... இந்த நிலையிலா?...”

“ஆம் அக்கா… அவளின் காயங்கள் இன்னும் ஆறியிருக்கவில்லை… எனினும் அவள்….”

“அதிதி… வெளியே கடுமையான மழைப்பொழிவு வேறு நிகழப்போகிறதே… வானத்தைப் பார்… இருட்டிக்கொண்டு நிற்கிறது… இந்த நேரத்தில் யாரும் வெளியே செல்ல மாட்டார்கள்… எனினும் நம் சதி?...”

“அவள் இருக்கும் நிலையில் மழையில் வேறு நனைந்திட்டால், அவளது உடல்நிலை மேலும் மோசமாகிவிடும் அக்கா… அதனால் விரைந்து ஏதேனும் செய்யவேண்டும் அக்கா….”

“நம் தந்தைக்கு அவரின் நியதிகளே சரி…”

“நான் மகரிஷி காசியப்பரிடம் இதுகுறித்து விவாதித்தேன் அக்கா… அவர் நம் தந்தையின் கொள்கைகளினாலேயே சதிக்கு துன்பம் விளைந்தது என்றார்…”

“இனியும் நாம் பேசிக்கொண்டிருப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை… தாமதிக்காமல் நாம் தன் தந்தையிடம் நம் கருத்தை சொல்வோம்… வா…”

கியாத்தியும் அதிதியும் தங்களது தந்தையை தேடி செல்ல, அங்கே அவரோ தன் துணைவியோடு யாகத்தில் அமர்ந்திருந்தார்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.