(Reading time: 25 - 49 minutes)

ஸ்ரீ விஷ்ணுவின் நாமத்திற்கு பதிலாக சிவ என்னும் நாமம் அந்த மலர்கள் அனைத்தின் மீதும் இருக்க, கண்ணீர் மல்க, நிலத்தில் சரிந்து அழ ஆரம்பித்தாள் சதி….

“ஒவ்வொரு தாமரை மலரின் மீதும் ஸ்ரீ விஷ்ணுவின் நாமத்தினையே நான் எழுதினேன் தந்தையே… ஆனால் அது எவ்வாறு மாறியது என்று நான் அறியேன் தந்தையே… நான் பொய்யுரைக்கவில்லை… இதுவே சத்தியம்… என்னை நம்புங்கள் தந்தையே… நான் இயற்றியது விஷ்ணுவின் நாமத்தையே… இந்த நாமத்தை அல்ல…. இதை இயற்றியது நான் அல்ல… நான் தங்களின் மகள் தந்தையே… என்னை விரோதியாக பாவித்து வெறுத்து ஒதுக்கிவிடாதீர்கள் தந்தையே… ஒதுக்கிவிடாதீர்கள்… நான் எந்த தவறும் செய்யவில்லை….”

அவள் கதறி அழ, அவளது அன்னையும், சகோதரிகளும் அவளின் நிலைக்கண்டு வருந்தி, கண்ணீர் சிந்த,

சிலையென நின்றிருந்த பிரஜாபதி மகளின் அருகினில் வந்தார்…

என்ன தண்டனை மீண்டும் அளிக்கப்போகிறாரோ என்ற பயத்தில் அங்கிருந்த சதியின் அன்னையும், சகோதரிகளும் இருக்க,

மகளை எழுப்பியவர், “தவறு உனதல்ல… எனது… நான் கொடுத்த தண்டனையின் வீரியத்தால் நீ கொண்ட வேதனைகளே இவை எல்லாம்…” என அவளின் கன்னம் தொட்டு வருடிகொடுத்துவிட்டு,

“விதியினால் நடந்த செயல்களுக்கு நீ பொறுப்பாக மாட்டாய் மகளே… ஆதலால் அழாதே… அன்று நீ செய்த செயலினால் நான் கொண்ட நியதிகள் சற்றே தளர்ந்தது நிஜம்… எனினும் அது உன் பிழையன்று…”

“அன்றும் சரி… இன்றும் சரி… அவமதிப்பை தங்களுக்கு வழங்கும் எண்ணம் எனக்கு துளியும் இல்லை தந்தையே… அதுவே சத்தியமும் கூட… உங்களின் மரியாதையும், புகழும், கௌரவமுமே எனக்கு இந்த உலகில் முதன்மையானவை… எனினும் நிஜத்தில் நிகழ்ந்தவைகளுக்கு எல்லாம் காரணமும் நான் அறியேன் தந்தையே….”

சதி தன் மனதார அழுதுகொண்டே கூற,

“என்னை விட உன்னையே அதிகம் நம்புகிறேன் நான்… நடந்து முடிந்தவைகளை உன் நினைவில் இருந்து அகற்றிடு மகளே… அது அனைத்தையும் மறந்து விடு…”

“எப்படி என்னால் மறக்க முடியும் தந்தையே… நான் தங்களுக்கு நிகழ்த்தியது பெரும் அவமதிப்பாயிற்றே… அதை எப்படி நான் மறக்க தந்தையே?...”

அவள் அழுதபடி அவரைப் பார்க்க, “நடந்த நிகழ்வுகள் அனைத்தும் உன் சுய உணர்வை மீறிய செயல்… ஆதலால் அழாதே மகளே…”

பிரசுதி மகளிடம் பரிவுடன் கூற,

“மீண்டும் எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் தந்தையே… என் பிராயசித்தத்தை நான் மீண்டும் நிறைவேற்ற எனக்கு ஆணையிடுங்கள் தந்தையே… அதற்கு நான் என்றுமே கட்டுப்பட்டு நிற்பேன்…”

அவள் விழி நீருடன் வேண்டி நிற்க,

“இனியும் நீ யாதொரு பிராயசித்தமும் செய்யவேண்டியதில்லை மகளே… உனது கடினமான பிரயத்தனங்கள் இந்த பிரஜாபதியினை உன் தந்தையிடத்தில் தோல்வியடைய செய்துவிட்டது மகளே… என்னை மன்னித்துவிடு மகளே… உனது உபவாசத்தினை நானே எனது கரங்களினால் முடித்து வைக்கின்றேன்… அது மட்டும் அல்லாது இனி என் பிரிய மகளை, நான் சந்தோஷ சிரிப்புடன் தான் காண வேண்டும்…”

இன்முகத்துடன் அவர் சதியிடம் கூறிவிட்டு, தனது மூத்த மகளிடம், “மகளே கியாத்தி, பணிப்பெண்களை அழைத்து இங்கிருக்கும் தாமரை மலர்களை அகற்ற சொல்லிடு…..” என கூற, அவளும் சரி என்றாள் மகிழ்வுடன் உடனேயே…

பின்னர், தனது கரங்களினாலேயே, அவர் தனது மகளுக்கு உணவு அளிக்க, அவளும் உண்டாள்…

“வெகு விரைவில் நிகழ விருக்கும் வசந்த விழாவிற்கான ஆயத்தப் பணிகளை நீயும் உன் சகோதரிகளும் ஏற்பாடு செய்யுங்கள்…”

பிரஜாபதி புன்னகையுடன் கூற, அவளும் சரி என்றாள்…

அப்போது அதிதி, “நந்தவனம் செல்லலாமா?...” என சதியிடம் வினவ, சதியும் புன்னகையுடன் பிரஜாபதியிடம் அனுமதி கேட்டிட, அவரும் சரி என்றார்….

சற்று நேரம் கழித்து, மகரிஷி பிருகு, பிரஜாபதியிடம், சதியிடம் நடந்து கொண்ட முறையினை பற்றி கூறி தன் பிரமிப்பை கூற,

பிரஜாபதியோ, “சதியினை நான் மன்னித்த்து சத்தியமே… அந்த சிவனும், அவனைப் போற்றி பாடும் ததீசியும், என் மகளைக்கொண்டே என்னை வீழ்த்த எண்ணமிட்டனர்… அதன் காரணத்தால் தான் அன்று சதியும் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தாள்… நான் அவளை அதிலிருந்து மீட்டெடுக்க எவ்வளளோ முயற்சி செய்தும் பலனில்லை… அவள் அந்த சிவனிடமே ஈர்க்கப்பட்டாள்… அது நான் செய்த செயலால் வந்த வினை… நான் கொடுத்த தண்டனையால் ஏற்பட்ட விளைவு… ஆதலால் தான் சதியிடம் இம்முறை நான் ஆத்திரமோ கோபமோ கொள்ளவில்லை… அவள் அறியாமையால் செய்தது தான் அனைத்தும்… எனினும் இது அனைத்திற்கும் காரணம் அந்த சிவன்… எனவே தான், சதியின் கவனத்தை திசை திருப்ப, இம்முறை வசந்த விழாவிற்கான ஏற்பாடுகளை அவளையே கவனிக்க கூறியிருக்கிறேன் மகரிஷி…” என அவர் கூறிவிட்டு திரும்ப, அங்கே நின்றிருந்தார் பிரசுதி…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.