(Reading time: 4 - 7 minutes)
Chillzee WhatsApp Specials
Chillzee WhatsApp Specials

Chillzee WhatsApp Specials - கிழவி சொன்ன கடைசி வரி என்னை கண்ணிரில் சிந்திக்க வைத்தது!

வெகு பிஸியான பூந்தமல்லி ஆவடி சாலையில், கண்ணாடி கிளாஸில் இருந்த சர்க்கரை இல்லாத கசப்பு காஃபியை உறிஞ்சியபடி ஓடும் வாகனங்களை இலக்கில்லாமல் வெறித்துக் கொண்டிருந்த அவனிடம், ஒரு கிழவி

"கண்ணு... இன்னிக்கு பத்து பேக்கெட்டு தான் வாங்கியாந்தேன். ஒன்னே, ஒன்னு தான் மீந்து இருக்கு. நீ வாங்கிக்கே ராஜா."

 

வயசு எழுபதுக்கு குறையாது. வெள்ளெருக்குத் தலை. வெளுத்துப் போன வெள்ளைப் புடவை.

இன்ன நிறமென இனம் காணமுடியாத வண்ணத்தில் தோளில் தையல் விட்டுப் போன ரவிக்கை.

 

கருத்தக் காய்ப்புக் காய்த்த கையில் சாயம் போன சரவணா ஸ்டோர்ஸ் பிளாஸ்டிக் பை.

 

ஆழ்ந்த கவனம் கலைக்கப் பட்டாதால் உண்டான மெலிதான எரிச்சலில்,

 

ப்ச்ச்சென முனகிக் கொண்டே குரல் வந்த திசையில் திரும்பினான் அவன்.

 

"என்னாது ஆயா?"

 

"இட்லி மாவு கண்ணு..!"

 

"இட்லி மாவு..!?"

 

"பொசு பொசுன்னு மல்லீப்பூ மாரி வரும். பாக்கெட்டு பதினெஞ்சு ரூவா. பாஞ்சு இட்லி வரும்."

 

"ம்ம்ம்.."

 

"வாங்கிக் கோ நயினா. கட்சீப் பாக்கெட்டு. பதினெஞ்சுசு ரூவா கூட வாணாம். பத்து ரூவா குடுத்து எடுத்துக்கோ.

 

நான்கைந்து முறை வேண்டாமென்று சொன்ன பின்னும், இட்லி மாவு பாக்கெட்டைக் கையில் திணிக்காத குறையாக மல்லு கட்டி கொடுத்தது அந்தக் கிழவி.

 

மணி மாலை ஆறு தான் ஆகிறது. அதற்குள்  ரூமுக்குப் போய் என்னத்தைக் கிழிக்கப் போகிறோம். கொஞ்ச நேரம் இதுகிட்டப் பேச்சுக் கொடுத்து தான் பார்ப்போமே......

 

"ஆயா உனக்கு பசங்க யாரும் இல்லையா ? ஏன் இந்த வயசுல இப்டீ தனியா கஷ்டப் படறியே?"

 

"கட்டிக் கினவன் குடடிச்சே செத்துப் பூட்டான். விட்டுது சனியன்னு நெனைச்சா, ஒன்னே ஒன்னு தான் பெத்தது "அதுவும் அவன் அப்பன் வழியிலே உருப்படமா குடிச்சி குடிச்சே சீரழியுது."

 

"ம்ம்ம்..  இந்த மாவை விக்கிறதல  ஒரு நாளைக்கு உனக்கு எவ்ளோ தேறும்..!"

 

"ஒரு பாக்கிட்டு பதிமூனுக்கு வாங்கறேன். பதினெஞ்சுக்கு விக்கறேன்."

 

"ம்ம்ம்."

 

"நாள் பூரா நாயா பேயா இங்க அங்க ஓடுனாலும் இருவது பாக்கெட்டு போனா, அதுவே தலைக்கு மேல வெள்ளம்."

 

சிக்னலில் க்ராஸிங் நேரத்தில் பிச்சை யெடுப்பவர்கள்கூட நாளொன்றுக்கு வெகு எளிதாக இருநூறுக்குக் குறையாமல் பார்த்து விடுகிறார்கள்.

இந்த கிழவி நாள் முழுவதும் வேகாத வெயிலில் ஏன் இப்படி வெந்து சாகிறது ?

 

ஒரு நொடி மூடிய விழிகளுக்குப் பின்னால் அவனுடைய ஆசை ஆயாவின் முகம் வந்து போனது.

மனசு வலித்தது அவனுக்கு.

 

"ஆயா.. மாவைக் குடு இப்டீ.."

 

கிழவியிடம் ஒரு நூறு ரூபாய்த் தாளை நீட்டினான் அவன்.

 

"கண்ணு சில்ற இல்ல நயினா..!"

 

கிழவியின் முகம் சட்டெனத் தொங்கிப் போனது.

 

"ஆயா.. நீ தினம் இந்தப் பக்கம் வருவேல்ல?"

 

நாளை மறுநாள் அவன் பெங்களூருக்கு ட்ரெயின் ஏறியே ஆக வேண்டும்.

 

"ஆமா..!"

 

"நான் ஆறு மணிக்கு தெனம் இங்க தான் வந்து டீ குடிப்பேன். காசு தீர்ற வரைக்கும் தினம் ஒரு பாக்கெட்டு குடுத்துக் கிட்டே போ..!"

 

"இல்ல நயினா.."

 

"இன்னா இல்ல.?"

 

"ராவைக்கு என் மூச்சு நின்னு போச்சுன்னா உன் துட்டைத் திருப்பிக் குடுக்க நான் இன்னொரு ஜென்மம் எடுக்கணும். அதெல்லாம் வேணாம்."

 

கிழவியின் கண்களில் ஒரு தீர்மானம், ஒரு நம்பிக்கை மின்னியது.

 

"ஆயா.. என்னாப் பேச்சு பேசற நீ..?"

 

"ஆமாம் கண்ணு. போன ஜென்மத்துலே நான் என்னாப் பாவம் பண்ணனோ இப்டீ நாயாப் பேயா அலையறேன். இதுக்கு மேல ஜென்மமே வாணாம் கண்ணு..!"😰

 

அரசாங்கத்தையும், அடுத்தவன் சொத்தையும், ஏன் ஆண்டவன் சிலைகளையே மாற்றுபவர்கள் பிறந்த இதே தேசத்தில் தான்,

இந்தக் கிழவியும் பிறந்திருக்கிறாள்.....

 

🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

Do you have a WhatApp message to share with Chillzee Readers? Send it to ‪+19085470867‬

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.