(Reading time: 16 - 32 minutes)

Irul Rusi

தாவர உணவோ, மாமிச உணவோ அது உங்கள் சாய்ஸ். ஆனால் இருட்டில்தான் உணவு உண்ண வேண்டும் இதுதான் `டேஸ்ட் ஆஃப் டார்க்னெஸ்’ கான்செப்ட்!

`அது சரி... ஏசி, நல்ல உணவு... என இயல்பான சென்னை ஹோட்டலுக்கே பட்ஜெட் பாக்கெட்டைக் கடிக்கும். இதில், `இருட்டுதான் இவங்க தீம்’ என்றால், இவர்கள் பட்ஜெட் நம் குடும்பத்துக்கு சூட் ஆகுமா?’ என யோசித்தால், கூகுள் செய்து, அவர்களை போனில் தொடர்புகொள்ளலாம், முன்பதிவு வசதியும் இருக்கிறது.

விலை... நாலு பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு அதாவது ஆளுக்கு 500 ரூபாய்! இது ஒரு பீட்சா கார்னரில்கூட எளிதாக இன்று நாம் கொடுத்துக்கொண்டிருக்கும் தொகை என்றே தோன்றுகிறது. பகலில் இரவையும், அதே சமயம் பாதுகாப்பையும், நல்ல உணவையும் அனைத்துக்கும் மேலாக புலன் உணர்வை அறியவைக்கும் ஒரு தீம் ரெஸ்டாரென்டுக்கு இந்தத் தொகை பொருத்தமானதாகவே தெரிகிறது.

Irul Rusi

க்ஸ்பிரஸ் அவென்யூவின் மூன்றாவது தளத்தை அடைந்ததுமே இந்த உணவகம் பளிச்சென்று (வெளியில் மட்டும்தான்) தெரியும். மிகப் பெரிய ஆரவாரம் ஏதும் இல்லாமல், டிக்கெட்டுக்கான தொகை, உணவக விதிமுறைகள்... என எல்லாச் சந்தேகங்களும் நுழைந்தவுடன் முதலிலேயே ஓர் இளைஞரால் விளக்கப்படுகின்றன.

விலையுயர்ந்த மற்றும் ஒளிரும் பொருட்கள் எதுவும் உணவகத்தின் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. நம் பொருள்களை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கச் சொல்லி சாவியை நம் கையில் கொடுத்துவிடுகிறார்கள். இருக்கைக்கான முன் அனுமதி பெற்று வந்திருந்தால், காத்திருப்பு நேரம் சில நொடிகள்தான்.

கையில் மெனுகார்டு போன்ற அட்டை ஒன்றைத் தருவார்கள். அதை மெனு கார்டு என நினைத்தால் நமக்கு பல்ப் நிச்சயம். அது உணவகச் சட்ட திட்டங்களை தெளிவாக அறிவுறுத்தும் ஏடு. த்ரில் அனுபவமே பிரதானம்!

Irul Rusi

அறிவுறுத்தலைப் படிக்கும்போது சமாளித்துவிடலாம் என்ற தைரியம்கூட இருக்கும். ஆனால் கதவைத் திறந்து, உள்ளே அனுப்பிய நொடியில் அவசரப்பட்டு வந்துவிட்டோமோ என யோசிக்கும் அளவுக்கு இருட்டு நம்மை அச்சுறுத்தத் தொடங்கிவிடும். தீக்குச்சி வெளிச்சம்கூடக் கிடையாது. போதாத குறைக்கு, பல காலமாக `ஈவில் டெட்’ முதற்கொண்டு `காஞ்சனா’, `காஞ்சுரிங்’ வரை வெளிச்சத்தில் பார்த்துவைத்த அத்தனை பேய்களும் விதவிதமாக மனக்கண் முன்னே வந்து நிற்கும் என்பதும் ஒரு சாராரின் பதற்றமாக இருக்கும்.

றிவியலாகப் பார்த்தால், கண்களைத் திறந்திருந்தும் ஒளியைக் காண முடியாத முதல் அனுபவத்தை நம் மூளையால் எடை போட முடியாது என்பதே உண்மை. இதனால் பயத்துக்கான அட்ரினலினை உடல் அதிகமாகவே சுரந்துகொண்டிருக்கும்.

உண்மையைச் சொல்லப் போனால், பாதுகாப்பான ஓர் இடத்தில் நம் புலனறிவை நாம் சோதித்துக்கொண்டிருக்கிறோம் என தைரியமாக நம்பலாம். எட்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை மட்டுமே அனுமதிக்கிறார்கள் என்பதால், உங்கள் குழந்தைக்கும் ஒரு த்ரில்லான அனுபவத்தை இது தரும். எனவே, குழந்தையுடன் அதிகம் பேசிக்கொண்டே இருக்காமல், அவர்களை சிந்திக்கவும்விடுங்கள். காரணம், `பேசினால் பயம் தெரியாது’ என்பது உணவகத்துக்குச் சென்று தப்பித்து வந்த சிலரின் அறிவுரையாகச் சொல்லப்படுகிறது.

ஆகவே, `பேச்சைக் குறை!’ என்பது த்ரில்லுக்கான மெனு கார்டில் இல்லாத நமது எக்ஸ்ட்ரா அட்வைஸ்!

என்னதான் இங்கு அட்வைஸ் செய்தாலும், `சாப்பிடத்தான் அழைத்துச் செல்கிறார்கள்’, `சாப்பிட்டதும் மீண்டும் வெளிச்சத்தை பார்க்க இயலும்’ என்ற உத்தரவாதங்கள் எல்லாம் இருளில் கிடைக்கும் அசலான புலன்களின் முரண்பாட்டால் செல்லுபடியாகாத ஆயிரம் ரூபாய் நோட்டுகள்தான்.

Irul Rusi

இந்தப் பதற்றத்தில் கைகாட்டியாக... இல்லை இல்லை குரல் காட்டியாக ஒரு கணீர் குரல் உணவக இருக்கை நோக்கி நம்மை அழைத்துச் செல்ல வரும். எத்தனை உற்று நோக்கினாலும், உங்களால் யாரையும் பார்க்க முடியாது. நூறு சதவிகிதம் அவர் உருவம் தெரியாது என்பதால், குரலை வைத்து, பெண் என உணர்ந்துகொள்ளலாம். இனி அவர் குரலைத்தான் பின்பற்றி ஆக வேண்டும் என்பதால், செவிக்கு முதல் உணவு அங்கேயே ஈயப்படுகிறது. இப்போது உங்கள் செவி சத்தத்தை நோக்கி தன்னை ஆயத்தப்படுத்திக்கொண்டிருக்கும். கிச்சனில் பாத்திரத்தைத் தூக்கிப்போட்டு உடைத்தால்கூட டோரிமானை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த உங்கள் குழந்தை, கைக்கடிகாரத்தின் சிறு ஒலியைக்கூட கவனிக்கத் தொடங்குவான்.

சுவர் தெரியாது, வழி தெரியாது, ஒலிவழி பயணப்படும் உங்களை, அவசியம் என்றால் மட்டுமே தொடுதல் வழி யூ டர்ன் போடவைப்பார்கள். இல்லையேல், சுவற்றைப் பிடித்துக்கொண்டு அவர் குரலைக் கேட்டுத்தான் நடந்தாக வேண்டும். இதுவரை எல்லைகளை கண்வழி பழகியிருப்பீர்கள், முதன்முறையாக தொட்டுப் பார்த்து நடக்கப் பழகுவீர்கள். இதுதான் உங்கள் முதல் தொடு பயிற்சியாகவும் இருக்கலாம். உங்கள் வீட்டு சுவர் மென்மையானதா? தெரியாது! இன்று, சுவரிடம்கூட பேசியிருக்கிறீர்கள் என்பது உங்களையே வியக்கவைக்கும் தொடு உணர்வின் அருமை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.