(Reading time: 3 - 6 minutes)

படித்ததில் பிடித்தது - ஏலியன்களை நெருங்கி விட்டோமா... என்ன சொல்கிறது நாசா..?? - வசுமதி

Alien

லியன்ஸ் - இதைப் பற்றி அறிந்துகொள்ள முற்படாதவர்களே இல்லை எனலாம். வருடத்துக்குக் குறைந்தது 3 ஹாலிவுட் படங்களாவது இதைக் கருவாகக் கொண்டு வெளிவந்து வெற்றியும் பெற்றுவிடும். "ஏலியன்கள் இருக்கிறார்கள், ஆதாரம் இதோ!" என்று கதறும் அனைத்து வீடியோக்களும் ஏகப்பட்ட வீயூஸ் மற்றும் கமென்ட்ஸ் பெற்று வைரலாகும். இன்றைய காலகட்டத்தில், ஏலியன்களை வைத்து மார்க்கெட் செய்தால், எதையும் மக்களிடையே கொண்டு சேர்த்துவிட முடியும், கல்லாகட்டிவிடவும் முடியும் என்பது மறுக்கமுடியாத உண்மை!

ஆனால், அறிவியல்பூர்வமாக இதை அணுகினால், ஒற்றைக் கேள்விதான் எப்போதும் ஒலிக்கிறது.

"நாம் இந்த பிரபஞ்சத்தில் தனியாகத்தான் இருக்கிறோமோ?"

ன்றும் NASA-வுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் கேள்வி இது! இதன் குறித்த ஆராய்ச்சிகளும், தேடல்களும் முடிவுரை எழுதப்படாமல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. கடந்த பிப்ரவரி 22, 2017, தனது ஸ்பிட்சர் தொலைநோக்கி மூலம் செய்த ஆராய்ச்சியின் முடிவுகளை அறிவித்தது NASA. சுமார் 40 ஒளி ஆண்டுகள் (235 டிரில்லியன் மைல்கள்) தொலைவில், வேறொரு கேலக்ஸியில், 7 வெளிக்கோள்கள் சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி வருவதாகவும், அதில் 3 வெளிக்கோள்கள் உயிரினங்கள் வாழத் தகுதியானவையாக இருப்பதாகவும் தெரிவித்தது.

அடுத்த மைல்கல்

லியன்கள் பற்றிய ஆராய்ச்சிக்கும், பூமியைத் தவிர வாழ்வாதாரத்துடன் கூடிய வேற்றுகிரகங்களைக் கண்டறியும் ஆராய்ச்சிக்கும், மிக முக்கியமான மைல்கல்லாக இக்கண்டுபிடிப்பு திகழ்ந்து வரும் இவ்வேளையில், NASA தனது கெப்ளர் தொலைநோக்கி மூலம் செய்த ஆராய்ச்சிகளின் முடிவுகளை ஜூன் 19, 2017 அறிவித்திருக்கிறது. இதன்படி 219 புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 10 புதிய கோள்கள், உயிர் வாழத் தகுதியானதாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. நமது சூரிய குடும்பத்துக்கு வெளியே அமைந்திருக்கும் இதில், தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் அதிகம் என்றும் கூறப்படுகிறது.

நான்கு வருட ஆராய்ச்சியின் முடிவுகள்

கெப்ளரின் இந்த நான்கு வருட ஆராய்ச்சி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பில், "மொத்தம் 4,034 கிரகங்கள் இதுவரை கெப்ளர் மூலம் கண்டறியப்பட்டு, கிட்டத்தட்ட 2,335 கிரகங்களை, வெளிக்கோள்களாக உறுதிசெய்திருக்கிறோம். ஆச்சர்யமூட்டும் விதமாக, தோராயமாக 50 வெளிக்கோள்கள், பூமியைப் போலவே உயிர்கள் வாழக்கூடிய மண்டலத்தில் இடம்பெற்றிருக்கின்றன. அதில் 30 கோள்களை இதுவரை உறுதி செய்திருக்கிறோம்."

கேள்விக்கான விடை?

கெப்ளர் ஆராய்ச்சியின் பிரதான விஞ்ஞானியான மரியோ பெரேஸ் கூறுகையில், "இப்பொழுது எதுவும் திட்டவட்டமாகக் கூற முடியாவிட்டாலும், இந்தப் புதிய கண்டுபிடிப்புகள், நமது பூமியைத் தவிர வேறு கிரகங்களில் உயிர்கள் இருக்கலாம் என்ற கூற்றிற்கு வலுசேர்த்திருக்கிறது."

இப்பொழுது இந்தக் கிரகங்களின் அதிர்வெண்களையும், அதன் நிலைப்பாடுகளையும் புரிந்துகொள்ளும் முயற்சியில் களமிறங்கியிருக்கிறது NASA. இதைப் பொறுத்தே அதன் வருங்கால விண்வெளி ஆராய்ச்சிகள் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபல பிரிட்டிஷ் சயின்ஸ்-பிக்ஷன் எழுத்தாளர் ஆர்தர் C. கிளார்க் இப்படி கூறுவார்:

“இரண்டே சாத்தியக்கூறுகள்தான்.

ஒன்று: நாம் இப்பிரபஞ்சத்தில் தனியாக இல்லை!

இரண்டு: நாம் இப்பிரபஞ்சத்தில் தனியாக இருக்கிறோம்!

இவ்விரண்டுமே திகிலூட்டுகிறது.

சயின்ஸ்-பிக்ஷன் தியரிகள் எல்லாம் நிஜமாகி வரும் இவ்வேளையில், என்ன நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. காத்திருப்போம், ஏலியன்களுக்காக!

 தான் படித்ததைப் பகிர்ந்துக் கொண்டவர் வசுமதி

 

{kunena_discuss:1107}

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.