(Reading time: 3 - 5 minutes)

பெண்மை ஒரு தவம் ..!!! - விஷ்ணு பிரதீப்

  பெண்மை ஒரு தவம் ....அது ஆண்மைக்கு

  கிடைத்த வரம்....!!

 

  இடையின் மேடுகளை பிளந்து,ரத்தத்தையும்

  சதையையும் கிழித்து என்னை ஈன்றாள்-ஒரு

  பெண்..என் வாழ்க்கை வானத்தை வரைந்த

  விடிவெள்ளி அவள்.....

 

  உரிமைக்கு உறையாமல் போராட்டம்,அழியாத

  அன்பு,தலகாணிச்    சண்டையில் தொலையாத

  வெற்றி,செங்கோள் இல்லாத இனிய ஆட்சி -

  இவை எல்லாம் பொது ...

 

  அவள் எனக்கு முன்னால் பிறந்தாலும்

  சரி .....இல்லை எனக்குப் பின்னால்

  பிறந்தாலும் சரி......!!

 

  அகத்தில் நட்பையும் ...புறத்தில் சிந்தாத

  சிரிப்பையும் மலர வைப்பாள் மற்றொருவள்

  முகவரியில் மட்டும் மாற்றம் கொண்ட -என்

  இரண்டாம் சகோதரி ....!!

 

  அறிவிழியில்உண்மையையும் அன்பையும்

  சேர்க்கும் அந்த உன்னத மங்கைக்கு -நான்

  வைத்த செல்லப் பெயர்  தோழி ....!!

 

  ஏனெனனில் பெண்மை ஒரு தவம் ..அது

  ஆண்மைக்கு கிடைத்த வரம் ..!

 

  இறுக்கிப் போடப்பட்ட இந்த பெண்மையின்

  முடிச்சு காதலெனும் அமுத அமிலத்தின் 

  பார்வையில் அரித்துப் போவது தான்

  சரியா?? இது முறையா ??

 

  என்னை தென்றலாய் வருடிய பெண்மை

  நெருடலாக மாறிப்போவது ,கிடைத்த வரம்

  சாபமாகி போனதற்குச் சமம் ..!

 

  எவளோ ஒருவள் ஏமாற்றி போனதற்கு,வாழ்க்கையில்

  வழிநெடுக நிழலளிப்பவளும்,இடறி விழும்

  போதெல்லாம் அதரவாக அணைத்துக் கொள்ள ஒருத்தி

  இருக்கிறாள் என்பதை மறந்ததும் சரியா ?

 

  அவளுக்கு நான் வைத்த அன்பு

  பெயர்-மனைவி ....!

 

  ஏனெனனில் பெண்மை ஒரு தவம் ..அது

  ஆண்மைக்கு கிடைத்த வரம் ..!

 

  ஒளி வீசும் வெண்ணிலவின் மேனியில்

  விழுந்திருக்கும் விழுப் புண்களுக்காக

  இரவினை வஞ்சிப்பது நியாயமா ?  

 

  காதல் தோல்விக்காக தன் உயிரினை

  மாய்த்துக் கொண்டான் ஒருவன் -

  அவன் தியாகி ...

 

  அதே காதலுக்கு பணியாததால்,தன்

  முகரேகைகளை கருக்கிக்கொண்டாள் ஒருவள்-

  அவள் யார்??.

 

  ஏனெனனில் பெண்மை ஒரு தவம் ..அது

  ஆண்மைக்கு கிடைத்த வரம் ..!

 

  நவீன நாகரிக மோகத்தில்நசுங்கிப்

  போய்,ஆபாசத்தைக் கூட ஒருவகை

  ஆசாபாசம் என்று கூறும் யுவதிகளே ...

 

  இன்னும் எத்தனையோ முல்லை மொட்டுக்கள்

  மலர துடிக்கின்றன ..மலர்ந்தாலும் படர

  கொடி இல்லாமல் மடிந்து மண்ணாகின்றன..!!

 

  அருமை யுவதிகளே நீங்களோ ...சுதந்திரம் என்ற

  பெயரில் அசுர வளர்ச்சி கொண்டு நிலவைத்

  தொடுகிறோம் என்று பெண்மையின்-

  வேர்களை பிடுங்கி எரிந்துக் கொண்டிருக்கிறீர்கள் ...!

 

  இத்திருநாட்டின் கண்களே ..இமைக்குள்

  இருக்கும் போதே கண்களின் சக்தி வெளிப்படும்.

 .இமைவிடுப் போன கண்கள் பார்வை இழந்துவிடும் ..!!

 

  பெண்மையின் மேன்மை போற்றுவோம்..அங்கு

  ஆண்மையில் உண்மை மாறாமல் ..!

 

  ஏனெனனில் பெண்மை ஒரு தவம் ..அது

  ஆண்மைக்கு கிடைத்த வரம் ..!

 

  ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும்

  ஒரு பெண் இருப்பது- அழகு ..!!

 

  ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னும்

  ஒரு ஆண் இருப்பது - பேரழகு ..!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.