(Reading time: 2 - 4 minutes)

ஜென்ம ஜென்மமாய் உன்னோடு நான் - புவனேஸ்வரி

என்னை களவாடிய நட்பே

இதுவரை பேராசை என்பது எனக்கில்லை

ஆனால் நீ என்னுள் வந்தப்பின்

Friendsநியாயம் இல்லாத ஆசைகள் கொட்டிக் குவிகின்றன !

 

நேற்றுவரை வீட்டை துறக்கும் எண்ணமில்லை

இன்று உன்னை அழைத்து கொண்டு எங்கேனும் கம்பி நீட்டிட விழைகிறேன் !

 

நேற்றுவரை ஊட்டி விடச் சொன்னவள்

இன்று நீ பசி என்றதும்  ஊட்டிவிட ஆசைபடுகிறேன் !

 

நேற்றுவரை தனிமையை ரசித்தவள்

இன்று உன்னுடன் சேர்ந்து தனிமைக்கே தனிமை தர விரும்புகிறேன் !

 

நேற்றுவரை அனைவரையும் உயர்வாய் நினைத்தவள்

இன்று உன் கீர்த்தியை மட்டுமே பெரிதென பாட துடிக்கிறேன் !

 

நேற்றுவரை இசையில் லயித்தவள்

இன்று உன் உளறல்களை ரகசியமாய் சேகரிக்கின்றேன் !

 

நேற்றுவரை ஓவியம் வரைந்தவள்

இன்றுமுதல் உன்னோடு சேர்ந்து கிறுக்கல்களை வரைந்திட ஏங்குகிறேன் !

 

நேற்றுவரை கைப்பேசியின் குரலில் கண்விழித்தவள்

இனி வாழ்நாள் முழுவதும் உன் குரலில் கண்திறக்க தவமிருக்கிறேன் !

 

நேற்றுவரை அஹிம்சையை கடைப்பிடித்தவள்

இன்று உன்னை யாரும் தவறாய் பேசினால் வன்முறையில் இறங்குகிறேன் !

 

நேற்றுவரை பொதுநலமாய் இருந்தவள்

உன்னை மட்டும் யாருடனும் பகிர்ந்து கொள்ள விரும்பாமல் சுயநலவாதியாகிறேன் !

 

 

காதலில் மட்டும்தான் ஒவ்வோர் உணர்வும் அதிசயம் என்று யார் சொன்னது ?

காதலில் மட்டும்தான் உலகம் அழகாகும் என்றும் யார் சொன்னது ?

 

எங்கோ பிறந்து , எங்கோ வளர்ந்து

வெவ்வேறு சிந்தனைகளை தழுவி !

 

வெவ்வேறு மாற்றுகருத்துகளை பின்பற்றி

யாருக்கும் வளைந்து கொடுக்காமல் நிமிர்ந்து !

 

பயணித்து கொண்டிருந்த நாம்

இன்று நட்பின் மெத்தையில் !

 

அன்பெனும் போர்வையில்

இயற்கையும் பொறாமையுடன் தாலாட்டும் இனிய வசந்தத்தில் 

ரம்யமான நிலையில் விழிமூடாமல் கனவு காணவில்லையா ?

 

எத்தனையோ அலுவல்கள்

நாள் முழுதும் அலைச்சல்கள் !

 

கடமை என்ற பெயரில்

கர்ணனின் கவசகுண்டலமாய் முகத்திரைகள் !

 

அத்தனையும் உன்னை கண்ட ஒரு நொடியில் கலைந்துவிடுவதில்லையா ?

சோர்ந்து போகும் பாலை  உன்னை பார்த்ததும் சோலையாகவில்லையா ?

 

தொட்டால் அடங்கிவிடும் காதலுக்கு கூட தெரியாது

உணர்வுகளை தொட்டுத் தழுவும் நட்பின் ரகசியம் !

 

உரக்க பேசினால் கண் கலங்கிடும் காதலுக்கு கூட தெரியாது

உரிமையின் உறைவிடம் நட்பில் தான் இருக்கிறதென்று !

 

மீண்டும் ஓர் ஜென்மம் இருந்தாலும்

எனக்கு நீ மகனாகவோ மகளாகவோ வேண்டாம் !

 

உனக்கும் எனக்கும் ரத்தபந்தம் வேண்டாம்

தொப்புள் கொடியை  பகிர வேண்டாம் !

 

இன்று தொடங்கிய நட்பெனும் உறவே

ஜென்ம ஜென்மமாய் என்னை உன்னோடு இணைக்கட்டுமே!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.