(Reading time: 3 - 6 minutes)

உலகை வென்றவள் - புவனேஸ்வரி

பீட்சா பர்கர் சுவை அறியாதவள் அவள்

எனினும் என் பசிக்கு விருதளிக்க தெரியும் அவளுக்கு !

 

baby2ஜி 3 ஜி நெட் பற்றி அறியாதவள்

இன்று " ஜி " போட்டு என்னை மக்கள் மதிப்பதற்கு காரணம் அவள் !

 

என் ஐபோனின் மதிப்பு அவளுக்கு தெரியாது

ஆனால் நான் " ஐயோ " என்று அலறும்முன் என் பக்கம் நின்றிடுவாள் !

 

டேட்டிங், லவிங் என்பதின் பேதம் அவளுக்கு தெரியாது

எனினும் அன்பின் வேதம் எதுவென அவளுக்குத் தெரியும் !

 

டாக்டர் இஞ்சினியர் இரண்டுமே அவளுக்கு பெரிய தொழில்தான்

எனினும் அவளது விவசாயம் போல உயர்ந்த தொழில் உண்டா ?

 

அலாரம் வைத்து கண்முழிக்கும் பழக்கம் அவளுக்கில்லை

எனினும் எங்க ஊரு சேவலே அவளை பார்த்துதான் கொக்கரிக்கும் !

 

ஹெட்போனில் அவள் பாட்டு கேட்டதில்லை

ஆனால்  எனக்காக அருமையாய் தாலாட்டு பாடுவாள் !

 

ஹேப்பி மாதரஸ் டே  அம்மா  என்று அவளை அணைப்பேன்

அவளோ தன் பிள்ளையின் ஆங்கில புலமையை ரசித்து திருஷ்ட்டி கழிப்பாள்!

 

என் தாயை போலவே எத்தனை தாய்மார்கள்

வெளிஉலகத்தை மறந்து குடும்பத்தையே உலகமாய் கொண்டவர்கள் ?

 

எத்தனை அன்னைகள் தாகம் தீர்க்கும் நீர் போலவும்

பசிபோக்கும் அரிசி போலவும்

தங்களுக்கென உணர்வில்லாமல்

பிள்ளைகளின் உணர்வில் உயிர்பிழைப்பவர்கள் ?

 

எத்தனை அன்னைகள் நம்ம உயர்வின் அளவு தெரியாமல்

வானளவு கர்வபட்டவர்கள் ?

குண்டூசி ஜெயிப்பதையும் உலககிண்ண கோப்பையையும்

ஒரே அளவில் பார்த்து வானளவு பூரிப்பது தாய்க்கு மட்டுமே உள்ள குணம் !

 

எத்தனை அன்னைகள் " சாப்டியா அம்மா " என்ற

ஒரே ஒரு வார்த்தைக்காக மகனின் வீட்டு திண்ணையில் தவமிருக்கிறார்கள் ?

 

நமக்கோ ஊடங்கம் தாயாகி விட்டதோ

கடைசியாய் என்று அன்னைக்கு காலை வணக்கம் சொன்னோம் ?

 

நிலாவை காட்டி சோறுட்டிய  அன்னைக்கு

நம்  ஒரு முறையேனும் உணவு பரிமாறியது உண்டா ?

 

நமது தேவையை மட்டுமே வாய்கூசாமல் பட்டியளிட்டோமே

என்றேனும் அவள் காலடியில் அமர்ந்து அவள் கை பிடித்து

" உனக்கென்ன ஆசை அம்மா " என கேட்டதுண்டா ?

 

யாரோ ஒரு மனம் கவர்ந்தவரை சிரிக்க வைப்பதற்காக

கோமாளியாய் மாறுகிறோமே

நம் அன்னை உளமார என்று சிரித்தாள் என்று கண்டுபிடித்ததுண்டா ?

 

இதற்கெல்லாம் பதில் " இல்லை " என்பதனால்

நாம் இவ்வளவு உயர்ந்து என்ன பயன் ?

 

பெற்றவளின் மனம் குளிர வைக்காமல்

மற்றவரின் பார்வையில் உயர்ந்து என்ன பயன் ?

 

அவள் முகத்தில் புன்னகை பூவை விதைக்காமல்

பிற்காலத்தில் அவள் கல்லறையில் பூக்கள் வைத்து

வழிப்படும்பொழுது இந்த உலகத்திற்கு எதை உணர்த்துகிறோம் ?

 

அவ்வப்போது காட்டப்படாத உன்னதமான அன்பு

அவர் மறைவிற்குபின் கண்ணீராய் மாறி என்ன பயன் ?

 

பயனில்லைதான் என்று உதடுகள் சொல்லி என்ன பயன்

அதை இதயம் உணராதபோது  !

 

இதுவரை என் அன்னைக்காக நான் சிறந்த கவிதை ஒன்று எழுதியதே இல்லை ..நான்கு வரிகளுக்கு மேல் என் அன்னையை பற்றி எழுதும் வல்லமை எனக்கில்லைஅவராய்  கேட்டும் கூட என்னால் ஒரு நல்ல கவிதையை இயற்ற முடியவில்லை .. எப்படி எழுதுவது  ? என் அன்னையின் அன்பின் ஆதியை கண்ட நான் அந்தத்தை கண்டதும் இல்லை காணபோவதும்  இல்லை.. அன்னையை பற்றி எழுதி தமிழுக்கு பஞ்சம் வந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன்.. நாம் கண்களை மூடிக்கொண்டு நம்ப முடிந்த ஒரே உறவு தாய்தான்... ஆனால் ஏனோ தேடிபிடித்து, தட்டிப்பறித்து முன்னேறி செல்வதே வாழ்கை என்ற கொள்கையோடு பலர் பெற்றவளிடம் நேரம் ஒதுக்க கூட மனமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.. ! அப்படி ஓடுபவர்கள் தடுக்கி விழுந்துவிட்டால் அழைக்காமல் ஓடி வரப்போவதும் தாய் தானே ?? அப்படி பட்ட உன்னத உயிர்களுக்கு என்னால் தர முடிந்த சிறு கவிதையிது .. அன்னையர் தின வாழ்த்துக்கள்.. நேற்றுதான் அன்னையர் தினம் , ஆனால் இன்னைக்கு நம்ம அம்மா நமக்கு அம்மா தானே ? அதனால் தாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் தான் கவிதை அனுப்பி இருக்கிறேன் என்று நம்புகிறேன் .. நன்றி ..

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.