(Reading time: 2 - 3 minutes)

எங்கே போகின்றதோ புரிதல்? - புவனேஸ்வரி 

understanding

சின்ன சின்ன இரசனைகளில் 

இணைந்து நின்றோம்

 

இதுவல்லவோ அன்பின் இலக்கணம்

என்று கர்வம் கொண்டோம்

 

சின்னதாய் சண்டை வந்ததும்

முகம் பார்க்க பிடிக்காமல் ஒதுங்கிவிட்டோம்

எங்கே போகின்றதோ புரிதல் ?

 

நீயின்றி நானில்லை என்கிறோம்

இரவையும் பகலையும் இலக்கியம் பேசி களிக்கிறோம்

 

மனம் நோகும் சுடுச்சொல் கேட்டுவிட்டால்

இவ்வளவு தானா நீ ? என்று உடைந்துபோகிறோம்

எங்கே போகின்றதோ புரிதல் ?

 

அழகழகாய் கவிதை வடிக்கிறோம்

கிறுக்கல்களுக்கும் பாராட்டு வாங்குகிறோம்

 

கோபம் என்ற பெயரில் வார்த்தைகள் சிதறிவிட்டால்

"ச்ச " என்ற சலிப்புடன் பின்வாங்குகிறோம்

எங்கே போகின்றதோ புரிதல் ?

 

உன்னை நான் அறிவேன் என்கிறோம்

என்னில் அனைத்தும் நீ என்கிறோம்

 

எவனோ எவளோ சொல்லும் கதைகேட்டு

அன்பில் நிறைந்தவரை அக்கினியில் நிற்க வைக்கிறோம்

எங்கே போகின்றதோ புரிதல் ?

 

மன்னிப்பு கேட்க நினைத்தாலும்

நமக்குள் எதற்கு மன்னிப்பென  பெருந்தன்மையில் மிளிர்கிறோம்

 

உரிமையில் மன்னிப்பு கேட்காமல் போனாலோ

திமிர் தான் உனக்கு என உரைக்கிறோம்

எங்கே போகின்றதோ புரிதல் ?

 

கண் கலங்கினாலே  காற்றை திட்டுவோம்

மாசற்ற காற்றை மனம் பிடித்தவருக்கு  அனுப்பி வைப்போம்

 

மீண்டும் கண்ணீருக்கு காரணமாய் நாம் மாறிட

அதை ஏற்றுக்கொள்ளாமல் தட்டி கழிப்போம்

எங்கே போகின்றதோ புரிதல் ?

 

எந்த நேரமும் அருகில் இருப்பேன் என்போம்

கிடைக்கும் நொடிகளில் எல்லாம் அன்பை நிரப்புவோம்

 

முக்கியத்துவம் தன் தலைமைத்துவத்தை காட்டிட

தடம் தெரியாமல் விலகிவிடுவோம்

பிரிதலில் மெல்ல சாகின்றதோ இன்றைய புரிதல் ?

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.