(Reading time: 2 - 3 minutes)

இதுதான் வாழ்க்கை என்றேன்! - புவனேஸ்வரி 

Money

குழந்தை பருவம்..!

அழுதேன்,

வேண்டியது கிடைத்தது!

நினைத்ததை பெற்றதும்

இதுதான் வாழ்க்கை என்றேன்..!

 

கொஞ்சம் வளர்ந்தேன்..!

தேவை ஏற்பட்டது

அழுதேன்,

அப்பாவின் இடைவாரின்

வன்முறை புரிந்தது..

அழுகையும் குற்றமானது

இதுதான் வாழ்க்கை என்றேன்..!

 

மீசை முளைத்தது.!

கூடவே முதல் காதலும் தான்,

செய்த பிழை உணரும் முன்பே

உற்றவள் பிரிந்து சென்றாள்

விரக்தி விஸ்வரூபம் எடுத்தது

இதுதான் வாழ்க்கை என்றேன்..!

 

தாடி வளர்த்தேன்..!

காதல் கானலானதால்..

சில நாள் சத்தம் போட்டு அழுதேன்

பல நாள் மௌனமாய் அழுதேன்..

காதல் கொடுத்த காயத்திற்கு

நட்பு மருந்து போட்டு சேவகம் புரிந்தது

இதுதான் வாழ்க்கை என்றேன்..!

 

நண்பனில் ஒரு துரோகி வந்தான்

என் நம்பிக்கையை எல்லாம்

தேடி, திருடி கொன்றான்..

தனிமையை முதன்முதலாக காதலித்தேன்

இதுதான் வாழ்க்கை என்றேன்..!

 

கல்லூரி வாழ்க்கை முடிந்தது

படிப்பும் ஒரு வேலை என நினைத்து

விடுமுறை எடுத்து கொண்டேன்

ஒரு மாதம் போனது,

வீட்டு வேலைகள் அதிகமானது

இரண்டு மாதங்கள் கடந்தன,

துரதிஷ்டசாலி என்ற பெயர் பெற்றேன்

ஆறு மாதங்களானது,

வீட்டில் அந்நியனானேன்

ஒரு வருடம் கழிந்தது,

சொந்தங்கள் சகுனியாகிட கண்டேன்

இதுதான் வாழ்க்கை என்றேன்..!

 

கடவுளுக்கு பார்வை வந்தது..!

வேலை கிடைத்தது,

மீண்டும் பிறர் கண்ணுக்கு

உணர்வுகள் உள்ள மனிதனானேன்..

சம்பளம் கூடியது

உறவுகளும் கூடியது

திருமணம் ஆனது

மகிழ்ச்சிக்கு இணையாய்

விரக்தியும் கூடியது..!

 

தனி அறையில், நானும் என் சம்பளமும்

காற்றில் பணத்தை தூக்கி வீசினேன்

என் காலடியில் கிடந்தது பணம்..

என் பார்வையில்,

காலடியில் பணம் இருப்பது தான் வாழ்க்கை..

குணமும் ஆரோக்கியமும் தான்

என்னை மனிதனாக்கியது

ஆனால்!!!!

சமுதாயத்திற்கு,

நான் பணத்தின் ஆட்சியில் இருந்தால் தான்

நான் மனிதன்!

காலடியில் இருந்த காகிதங்களை பொறுக்கினேன்

நான் தான் உன் வாழ்க்கை என்றபடி

பணம் சிரித்தது

என் மனம் தவித்தது

இதுதான் வாழ்க்கை என்றேன்..!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.