(Reading time: 2 - 3 minutes)

கவிதை - மேதினம் - முஹம்மது அபூதாஹிர்

may day

“மேதினம்” என்பதெல்லாம்
மேடையில்தான்
உழைக்கும் மக்கள் நிலையோ
பாடையில்தான்!

இருபதாம் நூற்றாண்டில்
நீங்கள் காலனியாதிக்கத்திலிருந்து விடுதலைப் பெற்றிருக்கலாம்!
இருபத்தோறாம் நூற்றாண்டில்
நீங்கள் கம்பெனிகளாதிக்கத்தில் அடிமையாகி விட்டீர்கள் !

அக்கறையோடு வேலைப் பார்த்த
தொழிலாளருக்கு சம்பளத்தை விட
அதிகமானது சர்க்கரை !
அல்லும் பகலும் மிகுந்த உழைப்பு,
அவருக்கு,
அதிகமானது இரத்தக் கொதிப்பு!

சிறைச்சாலைகளில்
மக்கள் அடைக்கப்படுகிறார்கள்!
தொழிற்ச்சாலைகளை
மக்களே அடைந்துக் கொள்கிறார்கள்!

ஆற்றின் ஆழப்பகுதி
முதலைகளால் ஆபத்து !
ஆற்றின் ஓரப்பகுதி
முதலாளிகளால் ஆபத்து!

தொழிலாளர்கள்
தொழிற் கட்சிகளுக்கு ஓட்டு வங்கி!
தொழிலதிபர்களுக்கு நோட்டு வங்கி!

சுரங்கங்களில் இறங்கி
தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள்!
அரங்கங்களில் ஏறி
தொழிலதிபர்கள் விருது வாங்குகிறார்கள்!

கல்மண்ணை சுமந்து
இவர்கள் கஷ்டப்படுகிறார்கள்!
கல் மனம் படைத்தவர்கள்
கூலி சரியாக தருவதில்லை!

சம்பளம் கூட கேட்டால்
தர மறுக்கிறார்கள்!
சாவு கூட இப்போதெல்லாம் விடுமுறையில்தான்
வரவேண்டுமென எதிர்பார்க்கிறார்கள்!
சரக்கு
இறக்குமதி செய்யப்பட்டது !
இரக்கம்
ஏற்றுமதி செய்யப்பட்டது !

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.