(Reading time: 1 - 2 minutes)

கவிதை - பெண்கள் நமது கண்கள்! - ரவை

பெண்ணின் கருவறையில்
பிறந்திங்கு வாழும்நான்
என்னென்று சொல்லி
எழுதுவேன் அவள்பெருமை!
கண் என்பேனா, இல்லை
கருத்தென்பேனா?
மண்ணில் வாழ்மாந்தர்
மகுடம் என்பேனா?

தாயவள் பாதம் தொட்டு
தினந்தொறும் மகிழ்வேனா?
தூயவள் பெருமை பாடி
தமிழ் மணக்கச் செய்வேனா?
பாயிரம் அழகாய் கூறி
பாமாலை தொகுப்பேனா?
ஆயிரம் வாரணம் ஊதி
அவள்புகழ் ஓதுவேனா?

பெண்ணை மதியாதார்
பூண்டோடு ஒழிப்போம்!
கண்ணை கெடுப்போரை
கூண்டோடு அழிப்போம்!
அன்னையரை இகழ்வோரை
வேரோடு சாய்ப்போம்!
மண்ணிலினி மாதர்க்கு
மரியாதை செய்வோம்!

சிறுமிகளை மணமுடிப்போர்
சிலுவையிலே அறைவோம்!
மறுமணம் செய்வித்து
விதவைகளை காப்போம்!
கற்பழிப்போர் கூட்டமதை
கழுவிலேற்றி கலைப்போம்!
நற்றமிழர் பண்பாட்டை
நாடெங்கும் வரைவோம்!

புதுவாழ்வு பொலிந்திடவே
படைதிரட்டி நிற்போம்!
வதுவையர் வாழ்வினிக்க
வலக்கரமாய் வாழ்வோம்!
மதுவை ஒழித்திங்கு
மாதர்நலம் செய்வோம்!
எதுவரினும் இடர்ப்படோம்!
இமயவெற்றி காண்போம்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.