(Reading time: 12 - 23 minutes)
Visiri Vazhai
Visiri Vazhai

மேளம் வாசிக்கிறபோது என்ன சத்தம் என்று கேட்காமலா இருப்பான்? அப்போது தெரிந்துகொள்கிறான்” என்று கூறிச் சிரித்தான் ராஜா.

நேற்றுப் பந்தல் போடும்போதே, "என்ன விசேஷம்!” என்று கேட்டான். நான் சங்கதியைச் சொன்னபோது அவனுக்கு ஆனந்தம் தாங்கவில்லை'' என்றார் சேதுபதி.

''பாவம்! ரொம்ப காலமாக நம்ம வீட்டிலேயே கிடக்கிறான்.... ஆமாம்; இந்தப் புடவை யாருக்கு? ரொம்ப நன்றாக இருக்கிறதே!'' என்று கேட்டாள் பார்வதி.

''பிடித்திருந்தால் நீங்கள் தான் கட்டிக் கொள்ளுங்களேன். பனாரஸ் பட்டு - நல்ல கலர்...'' என்றார் சேதுபதி. அப்போது பார்வதியின் முகம் வெட்கத்தால் சிவந்து மாறியதைச் சேதுபதி கவனிக்கத் தவறவில்லை.

"இம்மாதிரி ஒரு புடவை வாங்கிக் கொள்ள வேண்டுமென்று எனக்கு ரொம்ப நாளாக ஆசை...' என்றாள் பார்வதி.

தங்களுக்கு இம்மாதிரி ஒரு புடவை வாங்கித் தர வேண்டுமென்று எனக்கும் தான் ரொம்ப நாளாக ஆசை!'' என்று சேதுபதி கூறவில்லை. மனத்தில் எண்ணிக்கொண்டார்.

இந்தப் புடவை தனக்குப் பிடிக்குமென்று அவருக்கு எப்படித் தெரிந்தது?'

மனத்திற்குள்ளாகவே ஒரு வியப்புக் குறியை எழுப்பிக்கொண்டு யோசிக்கலானாள் பார்வதி.

ஹாஸ்டல் திறப்பு விழாவன்று பார்வதி இதே மாதிரி புடவை ஒன்று தான் கட்டியிருந்தாள். அந்தக் கலர் அவள் தேக அமைப்புக்கு மிகவும் பொருத்தமா-யிருந்ததைச் சேதுபதி அன்றே குறிப்பாகக் கவனித்து வைத்திருந்தார். இப்போது அதை மறந்துவிட்ட பார்வதிக்குச் சேதுபதி வாங்கி வந்த சேலையைக் கண்டதும் வியப்புத் தாங்கவில்லை.

வெள்ளிக்கிழமை காலை குறித்த நேரத்தில் கெட்டி மேளம் முழங்க பெரியோர்கள் ஆசீர்வதிக்க ராஜாவுக்கும் – பாரதிக்கும் அக்னி சாட்சியாகத் திருமண வைபவம் நடந்தேறியது.

மாடியில் கட்டிலில் படுத்தபடியே திருமணக் காட்சி களைத் தன் அகக் கண்ணால் கண்டு களித்துக் கொண்டிருந்தாள் பார்வதி. கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தோட மானசீகமாக மணமக்களை வாழ்த்திக் கொண்டிருந்தாள் அவள்.

திருமணச் சடங்குகள் யாவும் முடிந்ததும் ராஜாவும் பாரதியும் சேதுபதியை வணங்கி எழுந்தனர்.

முதலில் மாடிக்குச் சென்று அத்தைக்கு நமஸ்காரம் செய்யுங்கள்'' என்று கூறி, அவர்களை மேலே அழைத்துச் சென்றார் சேதுபதி.

தான் வாங்கிக் கொடுத்த அந்த பனாரஸ் பட்டுப் புடவையை அணிந்து கொண்டு பார்வதி கட்டிலில் படுத் திருப்பதைக் கண்ட சேதுபதிக்கு மெய் சிலிர்த்தது.

அத்தை! நமஸ்தாரம் பண்ணுகிறோம்'' என்றான் ராஜா.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.